தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை, மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய ஓன்றிய கவுன்சில் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன.பிரஸ்ஸல்ஸில் ஒன்று கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பயங்கரவாத-எதிர்ப்பு வல்லுனர்களின் ஆலோசனைக்கு அமைவாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதிமுறைகளின் அடிப்படையிலும், புலிகளுக்கு எதிரான தடையினை மேலும் ஆறு மாதங்களிற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கவுன்சில் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி மீண்டும் விடுதலைப்புலிகளை, தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில், ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் இணைத்திருந்தது.
இதனை மீண்டும் நீடிப்பதற்கு தாம் சட்ட ரீதியாக பல சவால்களை எதிர்கொண்டு புலிகளினால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் இருப்பதனை நிரூபித்திருப்பதாகவும், அதற்காக பல ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் பிரசல்ஸிற்கான இலங்கை தூதுவர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ” விடுதலைப்புலிகளால் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் இருப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 உறுப்பு நாடுகளையும் நம்பவைத்துள்ளோம்,” வெளிநாட்டு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கொழும்பில் உள்ள சட்ட அமலாக்க மற்றும் பிற தொடர்புடைய முகவர்களின் உதவியுடன் தேவையான தகவல்களை திரட்டி பிரஸ்ஸல்ஸில் உள்ள தூதரகம், பிரஸ்ஸல்ஸில் சந்திக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பயங்கரவாத-எதிர்ப்பு வல்லுனர்களின் கருத்துக்களுக்கு அமைவாக புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.