கருணாநிதி உடல்நிலை குறித்து இரவு 10 மணிக்கு காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை அமைந்துள்ள சாலையின் ஒரு பகுதியை காவல்துறை மூடியுள்ளது. அந்தப் பக்கம் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.
ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதிக்கு பத்தாவது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடைசியாக ஜூலை 31ம் தேதி, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது கல்லீரல் நோய் தொற்று, தொடர்பாக சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், வயது முதிர்வு காரணமாகவும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று மாலை இன்று மாலை 6.30 மணியளவில் காவேரி மருத்துவமனை சார்பில், கருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கை வெளியானது.
அதில், கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், வயோதிகம் காரணமாக முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கருணாநிதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை வைத்தே அடுத்தகட்ட சிகிச்சை இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திமுக தொண்டர்கள் உட்பட பல பிரபலங்களும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில், மருத்துவர்கள் கொடுக்கப்படும் சிகிச்சையை கருணாநிதியின் உடல் ஏற்றுக் கொண்டு அதன் மூலம் முன்னேற்றம் அடைந்தால் அதை மீண்டும் இன்னொரு அறிக்கையாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.