இரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், கடந்த ஜூலை மாதம் 27-ஆம் தேதி கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கருணாநிதிக்கு மருத்துவ குழு தீவிர சிகிச்சை அளித்தது.
மேலும், கடந்த ஜூலை 29-ஆம் தேதி திடீரென கருணாநிதிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால், அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே இன்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில் கருணாநிதிக்கு உடல் நிலை மிக மோசமான நிலையை எட்டியதாகவும், அவரின் உடல் உறுப்புகள் இயங்க வைப்பது சிக்கலாக உள்ளதாகவும் தெரிவித்தது. இதனால் திமுக தொண்டர்கள் உச்சகட்ட சோகத்தில் கத்தி கதரி அழ ஆரம்பித்தனர்.
காவேரி மருத்துவமனை அதிகாரபூர்வமாக இறுதி அறிக்கையை வெளியிட்டது. அதில் மாலை 6.10 மணிக்கு கருணாநிதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டது.
இந்த செய்தி வெளியான அடுத்த நொடி, மருத்துவமனை முன் இருந்த தொண்டர்கள் கதறி அழ ஆரம்பித்தனர். அவர்களின் அழும் சத்தம் அனைவரையும் ஒரு நொடி உறைய வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
கருணாநிதியின் உடல் அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹால் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவேரி மருத்துவமனை முன் உள்ள இரும்பு தடுப்புகளை திமுக தொண்டர்கள் அடித்து நொறுக்கி வருகின்றனர். திடீரென தொண்டர்கள் இதுபோல நடந்து வருபவதால் அந்த இடமே கலவர பூமியாக மாற்றியுள்ளது.
போலீசார் தற்போது அவர்கள் அப்புறபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.