1972ஆம் ஆண்டு ஆகஸ்டு நான்காம் தேதி பிபிசியின் செய்தியறிக்கையில் இடம்பெற்ற ஒரு செய்தி உலகத்திற்கே அதிர்ச்சியளித்தது என்று கூறினால் அது மிகையாகாது.
உகாண்டாவில் வசிக்கும் 60,000 ஆசிய கண்டத்தை சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அந்நாட்டு அதிபர் இடி அமீன் உத்தரவிட்ட செய்தி அது.
90 நாட்களுக்குள் ஆசிய கண்டத்தை சேர்ந்த அனைவரும் வெளியேறவேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
ஆறடி நாலங்குல உயரமும், 135 கிலோ எடையும் கொண்ட இடி அமீன் உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
தேசிய குத்துச்சண்டை பட்டம் வென்ற இடி அமீன் 1971ஆம் ஆண்டு, மில்டன் ஒபோடேவை ஆட்சியில் இருந்து அகற்றி அதிகாரத்தை கைப்பற்றினார்.
தனது எட்டு ஆண்டு கால ஆட்சியில், இதற்கு முன் கேள்விப்பட்டிராத வகையில் கொடூரமாக நடந்துக் கொண்ட இடி அமீன், நவீன வரலாற்றின் கொடுங்கோல் ஆட்சியாளர்களில் முன்னணியில் இருக்கிறார்.
1972ஆம் ஆண்டு, இடி அமீன் கனவு ஒன்றை கண்டார். அதில் ஆசியர்கள் அனைவரையும் உகாண்டாவில் இருந்து வெளியேற்று என்று அல்லா ஆணையிட்டார்.
அதையடுத்து இடி அமீன் வெளியிட்ட உத்தரவில், ‘உகாண்டாவின் அத்தனை பொருளாதார பிரச்சனைகளுக்கும் ஆசியர்கள்தான் காரணம்.
அவர்கள் உகாண்டா மக்களுடன் இணைந்து வாழ எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. நாட்டை சுரண்டுவதுதான் அவர்கள் விருப்பம்.
இன்னும் 90 நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் அத்தனை ஆசியர்களும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்!’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆசியர்களை வெளியேற்றும் அறிவுரையை சொன்னவர் கடாஃபி
இடி அமீனின் இந்த உத்தரவை ஆசிய மக்கள் முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவசரத்தில் இப்படி உத்தரவிட்டிருக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் இடி அமீனின் உத்தரவை நிறைவேற்றுவது கட்டாயம் என்பதை சில நாட்களிலேயே அவர்கள் புரிந்துக் கொண்டனர்.
ஆசியர்களை வெளியேற்றவேண்டும் என்பது அல்லாவின் உத்தரவு என்பதை பலமுறை இடி அமீன் கூறியிருக்கிறார்.
ஆனால் இடி அமீனின் ஆட்சியைப் பற்றி ‘கோஸ்ட் ஆஃப் கம்பாலா’ என்ற புத்தகத்தை எழுதிய ஜார்ஜ் இவான் ஸ்மித், தனது புத்தக்கத்தில் வேறொரு கருத்தை குறிப்பிடுகிறார்.
லிபியாவின் சர்வாதிகாரி கர்னல் கடாஃபி, இடி அமீனை சந்தித்தபோது, ‘உகாண்டாவை கட்டுபாட்டில் கொண்டு வர விரும்பினால், முதலில் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்;
லிபியாவில் இருந்து இத்தாலியர்களை வெளியேற்றியதுபோல், ஆசியர்களையும் உகாண்டாவில் இருந்து வெளியேற்றவேண்டும்’ என ஆலோசனை சொன்னார்.
55 பவுண்டுகள் மட்டுமே எடுத்துச் செல்லமுடியும்
ஆசியர்களை வெளியேறுமாறு இடி அமீன் அறிவித்ததற்கு பிறகு, பிரிட்டன் அமைச்சர் ஜியாஃப்ரி ரிபன், கம்பாலாவுக்கு சென்று அமீனினுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரது முடிவை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
ஆனால் ரிபன் அங்கு சென்றபோது, அமீனுக்கு பல வேலைகள் இருப்பதால் அடுத்த ஐந்து நாட்களுக்கு பிரிட்டன் அமைச்சரை சந்திக்க முடியாது என்று கூறிவிட்டார்.
ரிபன் லண்டன் திரும்ப முடிவெடுத்தார். அதிகாரிகள் அமீனுக்கு நிலைமையை எடுத்துச் சொல்லி புரியவைத்த பின், பிரிட்டன் அமைச்சர் ஜியாஃப்ரி ரிபனை, அவர் நாட்டுக்கு வந்த நான்காவது நாளன்று இடி அமீன் சந்தித்தார். ஆனால் சந்திப்பினால் எந்த நன்மையும் ஏற்படவில்லை.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இந்திய அரசு, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி நிரஞ்சன் தேசாயை கம்பாலாவுக்கு அனுப்பியது. ஆனால் இடி அமீன் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
அந்த காலகட்டத்தை நிரஞ்சன் தேசாய் நினைவுகூர்கிறார், “நான் கம்பாலா சென்றடைந்தபோது அங்கு பதற்றம் நிலவியது. உகாண்டாவில் வசித்த ஆசியர்களில் பலர் வேறு எங்குமே சென்றதில்லை.
நாட்டில் இருந்து வெளியேறும்போது, 55 பவுண்டு பணம் மற்றும் 250 கிலோ பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்லவேண்டும் என்ற உத்தரவும் இருந்தது. கம்பாலாவைத் தவிர, உகாண்டாவின் பிற பகுதிகளில் வசிக்கும் ஆசியர்கள் யாருக்கும் இந்த நிபந்தனைகள் பற்றி தெரியாது.
தங்கத்தை புதைத்து மறைத்த மக்கள்
இடி அமீனின் இந்த அறிவிப்பு திடீரென்று வெளியானது. அந்நாட்டு அரசும் உத்தரவை செயல்படுத்த தயார் நிலையிலும் இல்லை. சில பணக்கார ஆசியர்கள் தங்கள் செல்வத்தை செலவளிக்க புது வழிகளை தேடினார்கள்.
‘பணத்தை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாவிட்டால், ஆடம்பரமாக செலவு பண்ணி தீர்க்கலாம் என்று சிலர் முடிவெடுத்தார்கள்.
சில புத்திசாலிகள் பணத்தை வெற்றிகரமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதில் வெற்றி அடைந்தார்கள்.
முழு குடும்பமும் உலகம் முழுவதும் சுற்றுலா செல்வதற்கு முதல் வகுப்பு பயணச்சீட்டு வாங்குவது பணத்தை செலவு செய்வதற்கான சுலபமான வழியாக இருந்தது.
அதில் எம்.சி.ஓ மூலம் தங்கும் இடம் போன்ற எல்லா செலவுகளுக்கும் முன்பணம் செலுத்திவிட்டார்கள்’ என்கிறார் நிரஞ்சன் தேசாய்.
“பல்வேறு கட்டணங்களை செலுத்தும் (miscellaneous charges order) எம்.சி.ஓ என்பது பழைய பாணியிலான விமான பயணச்சீட்டு போன்றது. உகாண்டாவில் இருந்து கிளம்பிய பிறகு, அதை ரத்து செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
சிலர் தங்கள் காரின் கார்பெட் விரிப்புக்கு கீழே நகைகளை மறைத்து, அண்டை நாடான கினியாவுக்கு கொண்டு சென்றனர். சிலர் தங்கள் நகைகளை பார்சல் மூலமாக இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்கள்.
சிறிது காலத்தில் உகாண்டாவுக்குத் திரும்பலாம் என நம்பிய சிலர், தங்கள் வீட்டுத் தோட்டத்தில் நகைகளை புதைத்து வைத்தார்கள்.
இன்னும் சிலர் பரோடா வங்கியின் உள்ளூர் கிளையில் பெட்டகங்களை (லாக்கர்களை) பெற்று அதில் தங்கள் நகைகளை பாதுகாப்பாக வைத்தனர்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அப்படி கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர். அவர்களில் சிலர் 15 வருடங்கள் கழித்து உகாண்டாவுக்கு சென்றபோது, நகைகள் வங்கி பெட்டகத்தில் பாதுகாப்பாகவே இருந்தது.’
விரலில் இருந்த மோதிரம் வெட்டி எடுக்கப்பட்டது
தற்போது லண்டனில் வசிக்கும் கீதா வாட்ஸ் அந்த காலகட்டத்தை நினைவுகூர்கிறார். லண்டன் செல்வதற்காக எண்டெபே விமானநிலையத்தை அடைந்தார் கீதா வாட்ஸ்.
”வெறும் 55 பவுண்ட் பணம் மட்டுமே எடுத்துச் செல்லவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
நாங்கள் விமானநிலையத்தை அடைந்தபோது தங்கத்தை கொண்டு செல்கிறோமா என்று சோதனை செய்வதற்காக பைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியில் எடுத்து வீசப்பட்டது” என்று சொல்கிறார் கீதா வாட்ஸ்.
‘என் கையில் இருந்த தங்க மோதிரத்தை கழற்றித் தருமாறு சொன்னார்கள். விரலில் இருந்து மோதிரத்தை கழற்றமுடியவில்லை.
கடைசியில் அவர்கள் என் மோதிரத்தை கத்தியால் வெட்டி எடுத்துக் கொண்டார்கள். மோதிரத்தை விரலில் இருந்து வெட்டும்போது, எங்களைச் சுற்றிலும் ஆயுதங்களுடன் உகாண்டா வீரர்கள் நின்றது அச்சத்தை அதிகரித்தது’ என்று அந்த நாள் நினைவுகளை நினைவுகூர்கிரார் கீதா வாட்ஸ்.
32 கிலோமீட்டர் தொலைவு பயனத்தில் ஐந்து முறை சோதனை
ஆசியர்களில் பலர் தங்கள் வீடுகளையும், கடைகளையும் அப்படியே விட்டு விட்டு வெளியேற நேர்ந்தது. தங்களுக்கு சொந்தமான பொருட்களையும், உடமைகளையும் விற்கும் உரிமை மறுக்கப்பட்டது. அவர்களின் உடமைகளை உகாண்டா வீரர்கள் சூறையாடினார்கள்.
‘கம்பாலாவில் இருந்து எண்டெபே விமான நிலையம் 32 கிலோமீட்டர் தொலைவில் இருந்த்து. விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் ஆசியர்கள் ஐந்து சோதனைச்சாவடிகளில் பரிசோதிக்கப்படுவார்கள்.
அவர்களிடம் இருக்கும் பொருட்கள் எல்லாம் பறித்துக் கொள்ளப்படும்’ என்று சொல்கிறார் நிரஞ்சன் தேசாய்.
ஆசியர்களின் உரிமை கோரப்படாத சொத்துக்களின் நிலை என்ன என்று நிரஞ்சன் தேசாயிடம் கேள்வி எழுப்பினேன்.
“பெரும்பாலான பொருட்களை இடி அமீனின் அமைச்சர்களும், அமீனின் அரசு அதிகாரிகளும் கைப்பற்றினார்கள்.
உகாண்டா நாட்டு மக்களுக்கு ஆசியர்களின் பொருட்களில் மிகக் குறைவான பங்கே கிடைத்தது. ஆசியர்களின் சொத்து ‘பங்களாதேஷ்’ என்று குறியீட்டு மொழியில் அழைக்கப்பட்டது” என்று சொல்கிறார் தேசாய்..
”அது, வங்கதேசம் விடுதலை அடைந்த சமயம். `பங்களாதேஷ்` தங்களிடம் இருப்பதாக உகாண்டா ராணுவ அதிகாரிகள் அடிக்கடி பேசிக் கொள்வார்கள்.”
”ஆசியாவை சேர்ந்த மக்களின் பெரும்பாலான கடைகளையும், உணவு விடுதிகளையும் ராணுவ அதிகாரிகளுக்கு கொடுத்தார் அமீன்.
தனது ராணுவ அதிகாரிகளுடன் நடந்து செல்லும் இடி அமீன், செல்லும் வழியில் இருக்கும் கடைகள், ஹோட்டல்களில் எதை யார் எடுத்துக் கொள்ளலாம் என்பதை சொல்வார்.
அதை அவருடன் நடக்கும் ராணுவத்தை சாராத ஒரு அதிகாரி நோட்டில் குறிப்பு எடுத்துக் கொண்டே செல்வார். இதுபோன்ற காணொளிக் காட்சிகள் உள்ளன’ என்று ஜார்ஜ் இவான் ஸ்மித்தின் ‘கோஸ்ட் ஆஃப் கம்பாலா’ புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
”தங்களுடைய சொந்த வீடுகளையே பராமரிக்கத் தெரியாத இந்த அதிகாரிகள், இலவசமாக கிடைத்த சொத்துக்களை எப்படி நடத்துவார்கள்? பழங்குடி நடைமுறையை பின்பற்றி, தங்களுடைய சமுதாய மக்களை அழைத்து அவரவர்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளுமாறு சொன்னார்கள்.
பொருளின் மதிப்பு என்ன என்பதுகூட தெரியாதவர்களின் கைகளில் ஆசியர்களின் சொத்து சிக்கி சீரழிந்தது.
அவர்களால் நடத்தப்பட்ட கடைகளும் தொழில்களும் நின்றுபோக, வெகு சில நாட்களிலேயே உகாண்டாவின் பொருளாதாரம் சீரழிந்தது.”
அமீனின் கொடூரமும் அட்டூழியங்களும்
ஆசிரியர்களை வெளியேற்றிய அமீனின் நடவடிக்கைகள், அவர் விசித்திரமானவர் என்ற தோற்றத்தை சர்வதேச உலகிற்கு அறிவித்தது. அவருடைய கொடுமைகளும், கொடூர நடவடிக்கைகள் பற்றிய கதைகளும் உலகம் முழுவதும் பரவியது.
அமீனின் காலத்தில் சுகாதார அமைச்சராக பணிபுரிந்த ஹென்றி கெயெம்பா எழுதிய, ‘ஏ ஸ்டேட் ஆஃப் பிளட்: தி இன்சைடு ஸ்டோரி ஆஃப் ஈடி அமின்’ (A State of Blood: The Inside Story of Idi Amin) புத்தகத்தில், அமீனின் கொடூரமான செயல்பாடுகளை பார்த்து உலகமே பதற்றமாக இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
“அமீன் தனது எதிரிகளை கொன்றதோடு தனது நடவடிக்கைகளை நிறுத்திவிடவில்லை, சடலங்களையும் விட்டு வைக்கவில்லை. உகாண்டா மருத்துவமனைகளின் பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் சடலங்களில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், மூக்கு, உதடுகள் மற்றும் அந்தரங்க உறுப்புகள் போன்றவை காணாமல் போவது, அங்கு மருத்துவப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
1974 ஜூன் மாதத்தில், வெளிநாட்டு அதிகாரி, காட்ஃப்ரி கிகாலா துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட பிறகு, அவரது கண்கள் நீக்கப்பட்டன, பிறகு அவரது உடல் கம்பாலாவிற்கு வெளியே வனப்பகுதிக்குள் தூக்கி எறியப்பட்டது”.
சடலங்களுடன் தனியாக சிறிது நேரம் செலவிடவேண்டும், எனவே அனைவரும் அங்கிருந்து வெளியேறவேண்டும் என அமீன் பலமுறை உத்தரவிட்டிருப்பதாக கேயேம்பா பிறகு ஒரு முறை கூறியிருந்தார்.
1974 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காபந்து ராணுவத் தளபதி பிரிகேடியர் சார்லஸ் அர்பேய் கொல்லப்பட்டபோது, அவரது சடலத்தை பார்ப்பதற்காக முலாகோ மருத்துவமனைக்கு இடி அமீன் நேரடியாக வந்தார்.
பிரிகேடியர் சார்லஸ் அர்பேயின் சடலத்துடன் தனியாக இருக்கவேண்டும் என மருத்துவமனையின் தலைவர் க்யேவாவாபாவிடம் இடி அமீன் கூறினார்.
சடலத்துடன் தனியாக இருந்தபோது அமீன் என்ன செய்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை. எதிரிகளின் ரத்தத்தை குடிக்கும் காக்வா பழங்குடி இனத்தை சேர்ந்த இடி அமீன், அதையே செய்திருக்கலாம் என்று உகாண்டா மக்களிடையே பரவலான கருத்து நிலவுகிறது.
மனித மாமிசத்தை உண்பவர் என குற்றச்சாட்டு
கேயெம்பா கூறுகிறார், “அதிபர் இடி அமீனும், பிறரும் மனித மாமிசத்தை உண்பதாக பலமுறை குற்றம் சாட்டப்பட்டது.
1975ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தனது சுற்றுலா அனுபவத்தைப் பற்றி சில மூத்த அதிகாரிகளிடம் அமீன் பேசியபோது, குரங்கு மாமிசம் நன்றாக இருந்ததாகவும், மனித மாமிசம் நன்றாக இல்லை என்று கூறியது எனக்கு நினைவிருக்கிறது.
யுத்தத்தின்போது உங்கள் சக வீரர்கள் காயமடைந்திருப்பார்கள். அந்த நேரத்தில் உங்கள் பசியை தீர்த்துக் கொள்ள, அவர்களை கொல்லலாம், பசியாறலாம்” என்று அவர் சொன்னார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், உகாண்டா மருத்துவர் ஒருவரிடம் பேசிய அதிபர் இடி அமீன் மனித இறைச்சியில், சிறுத்தையின் இறைச்சியைவிட அதிக உப்பு இருப்பதாக தெரிவித்தார்.
தனது ஐந்தாவது மனைவி சாரா க்யோலாபாவுடன் இடி அமீன்
குளிர்சாதனப் பெட்டியில் வெட்டப்பட்ட மனிதத் தலை
அமீனின் பழைய வேலையாள் மோசஸ் அலோகா, அண்டை நாடான கினியாவிற்கு தப்பிச் சென்றார். அவர் இடி அமீனைப் பற்றி சொன்ன ஒரு தகவலை இன்றும் நம்புவதற்கு கடினமாக இருக்கிறது.
இடி அமீனின் காலத்தில் உகாண்டாவில் இந்திய தூதரக உயர் ஆணையராக பதவி வகித்த மதன்ஜீத் சிங், இடி அமீனின் ஆட்சி தொடர்பான கல்ச்சர் ஆஃப் த செபுல்ச்சர் (Culture of the Sepulchre) என்ற தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
“அமீனின் பழைய வீடான “காமண்ட் போஸ்டில் ஒரு அறை எப்பொழுதும் மூடப்பட்டிருக்கும். அதில் நான் மட்டுமே செல்வதற்கு அனுமதி இருந்தது. அதுவும் அந்த அறையை சுத்தம் செய்வதற்காக மட்டும்தான் என்று அலோகா தெரிவித்தார்.”
“அமீனின் ஐந்தாவது மனைவி சாரா க்யோலாபாவுக்கு அந்த அறையைப் பற்றி தெரிந்துக் கொள்ள மிகுந்த ஆவல் இருந்தது.
ஒருநாள் அந்த அறையை திறக்குமாறு அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். யாரும் அறையில் நுழைய அனுமதியில்லை என்று ஆமின் எனக்கு கட்டளையிட்டிருந்ததால் அறையை திறக்க தயங்கினேன்.
ஆனால் அறையை திறக்கச் சொல்லி வற்புறுத்திய சாரா கொஞ்சம் பணமும் கொடுத்தார். பிறகு வேறு வழியில்லாமல் அந்த அறையின் சாவியை நான் அவரிடம் கொடுத்தேன்.
அந்த அறையில் உள்ளே இரண்டு குளிர்பதன பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றை திறந்த சாரா அதிர்ச்சியில் கூச்சலிட்டவாறே மயக்கமடைந்தார். அதில் அவரது முன்னாள் காதலர் ஜீஜ் கிடாவின் வெட்டப்பட்ட தலை இருந்தது’
இடி அமீனின் அந்தப்புரம்
சாராவின் காதலனை தலையை வெட்டியதைப் போல, பல பெண்களின் காதலர்களின் தலையை வெட்டி முண்டமாக்கியிருக்கிறார் உகாண்டா அதிபர்.
தொழில்துறை நீதிமன்றத் தலைவர் மைக்கேல் கபாலி காக்வாவின் காதலி ஹெலன் ஓக்வாங்காவின் மீது இடி அமீனுக்கு மையல் ஏற்பட்டது.
கம்பாலா சர்வதேச ஹோட்டலின் நீச்சல் குளத்தில் இருந்த மைக்கேல் கபாலி காக்வாவை வெளியே தூக்கி சுட்டுக் கொன்றனர்.
பிறக்கு ஹெலன் பாரிசில் உள்ள உகாண்டா தூதரகத்தில் பணியமர்த்தப்பட்டார். பிறகு சந்தர்ப்பம் கிடைத்தபோது அவர் அங்கிருந்து தப்பிவிட்டார்.
உகாண்டாவில் இருந்து பிரிட்டனுக்கு சென்ற அகதிகள்
மெக்கரே பல்கலைக்கழக பேராசிரியர் வின்சென்ட் எமிரூவின் மனைவி மற்றும் தோரோரோவின் ராக் ஹோட்டல் மேலாளர் ஷேகான்போவின் மனைவியுடன் உறவு கொள்ள விரும்பிய இடி அமீன், அந்த பெண்களின் கணவர்களை திட்டமிட்டு கொன்றார்.
அமீன் உறவு கொண்ட பெண்களை எண்ணிக்கையில் அடக்கிவிடமுடியாது. ஒரே சமயத்தில் நாடு முழுவதும் குறைந்தது 30 அந்தப்புரங்கள் இருக்கும்.
அதில் வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் பெரும்பாலும் ஹோட்டல்களிலும், அலுவலகங்களிலும், மருத்துவமனைகளில் செவிலியராகவும் பணிபுரிவார்கள்.
1975 பிப்ரவரி மாதம் கம்பாலாவின் அருகே அமீனின் கார் மீது துப்பாக்கிச்சூடு நட்த்தப்பட்டது.
தான் செல்லும் வாகனம் பற்றிய தகவல்களை கொலைகாரர்களுக்கு சொன்னது தனது நான்காவது மனைவி மதீனாவோ என்ற சந்தேகத்தில் அவரை இடி அமீன் அடித்த அடியில் அமீனின் இடது கை மணிக்கட்டு உடைந்துவிட்டது. அடி வாங்கிய மதீனா உயிர் பிழைத்ததே பெரும்பாடாகிவிட்டது.
உகாண்டாவில் இருந்து வெளியேறிய ஆசியர்களில் அதிகமானவர்களுக்கு அடைக்கலம் அளித்தது பிரிட்டன்
ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் வெளியேறியதும் உகாண்டாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் கடும் வீழ்ச்சியை கண்டது.
‘பொருட்களுக்கு தட்டுப்பாடு எந்த அளவு ஏற்பட்டது என்பதை யாருமே கற்பனை செய்ய முடியாது. ஹோட்டல்களில் வெண்ணெய், ரொட்டி போன்றவை திருடப்படும்.
எனவே உணவை மட்டுமல்ல, கம்பாலாவில் உள்ள பல உணவகங்கள் தங்களுடைய மெனு கார்டுகளையும் தங்க அட்டைகளைப் போல பாதுகாத்தன. ஏனெனில் கம்பாலாவில் அச்சுத் தொழிலில் ஏகபோகமாக பணியாற்றியவர்கள் ஆசியர்கள்தான். அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அச்சுத்தொழிலின் நிலை என்ன?’
வெளியேற்றப்பட்ட 60,000 மக்களில் 29,000 பேருக்கு பிரிட்டன் அடைக்கலம் வழங்கியது.
11000 பேர் இந்தியாவுக்கு வந்தார்கள். 5000 பேர் கனடாவுக்குச் சென்றார்கள், எஞ்சியவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றனர்.
தங்கள் வாழ்க்கையில் அடிப்படையில் இருந்து தொடங்கிய உகாண்டா அகதிகள், பிரிட்டனின் சில்லறை வர்த்தகத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தையே மாற்றிக் காட்டினார்கள்.
பிரிட்டனின் ஒவ்வொரு நகரத்திலும் தெருவோரங்களில் கடைகளை திறந்து, பத்திரிகைகள் முதல் பால் வரை விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார்கள்.
அப்படி வலுக்கட்டாயமாக உகாண்டாவிலிருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர நேர்ந்த சமூகத்தினர், இன்று மிகவும் வளமானவர்களாக இருக்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு அகதிகளாக வந்த சமுதாயத்தினர், பிரிட்டிஷ் கலாச்சாரத்தில் தங்களை பொருத்திக் கொண்டு தங்களை நிலைநிறுத்தியதுடன், நாட்டின் பொருளாதாரத்தில் கணிசமாக பங்களித்தனர் என்பதற்கு உதாரணமாக உகாண்டாவில் இருந்து குடியேறிய அகதிகள் சுட்டிக்காட்டப்படுகின்றனர்.
இந்திய அரசின் அணுகுமுறை தொடர்பான கேள்விகள்
இந்த துயரமான வலுக்கட்டாயமான வெளியேற்ற நடவடிக்கையில் இந்திய அரசாங்கத்தின் அணுகுமுறை அதிர்ச்சியூட்டுவதாகவும், கடுமையான விமர்சனத்தை எழுப்புவதாகவும் இருந்தது.
இந்த சரித்திர அதிர்ச்சி வாய்ந்த நடவடிக்கையை உகாண்டாவின் உள்நாட்டு பிரச்சனையாக இந்திய ஆட்சியாளர்கள் கருதினார்கள். அதுமட்டுமல்ல, இதை இடி அமீனின் நிர்வாகத்திற்கு எதிராக உலகளாவிய அபிப்பிராயத்தை ஏற்படுத்தவும் முயற்சித்தனர்.
அரசின் இந்த போக்கு, நீண்ட காலமாக கிழக்கு ஆஃபிரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினருக்கு தங்களது கடினமான காலத்தில், தாயகம் ஆதரிக்கவில்லை என்ற ஆதங்கத்தை ஏற்படுத்தியது.
எட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்த இடி அமீன், தான் ஆட்சியை கைப்பற்றிய அதே பாணியிலேயே அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இடி அமீன் முதலில் லிபியாவிலும் பின்னர் செளதி அரேபியாவிலும் அடைக்கலம் புகுந்தார்.
சரித்திரமே காணாத அளவு கொடூரங்களை நிகழ்த்திய இடி அமீன் 2003ஆம் ஆண்டு தனது 78 வயதில் செளதி அரேபியாவில் இறந்தார்.