மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதி பொதுச்சந்தைக்கு முன்பாக இன்றைய தினம் முச்சக்கர வண்டியொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
அத்துடன் முச்சக்கர வண்டி அருகிலுள்ள வடிகானுக்கு அருகில் குடைசாய்ந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியில் சென்றவருக்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு கிழக்கு பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்ட பொலிசார் வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை இந்த மாதம் 3ஆம் திகதி அதே இடத்தில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் அருகிலுள்ள குடியிருப்பாளரின் மதிலை உடைத்துக்கொண்டு குடைசாய்ந்திருந்தது.
இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,
வந்தாறுமூலை பொதுச்சந்தைக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியானது எந்த நேரமும் பொது மக்களின் நடமாட்டம் அதிகரித்த நிலையில் காணப்படுகிறது.
ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸர் குறித்த பகுதியைத் தாண்டி பிற பகுதிகளில் பொலிசார் கடமைகளில் இருப்பதினால் குறித்த வந்தாறுமூலை பொதுச்சந்தை வீதிக்கு முன்பாகவுள்ள இடத்தில் பல பாரிய விபத்துக்கள் மட்டுமன்றி விபத்தின் காரணமாக உயிரிழப்புக்களும் இடம்பெறுவதினால் இந்த பகுதிகளில் போக்குவரத்து பொலிசார் கடமையில் இருப்பது அவசியமானது என தெரிவித்துள்ளனர்.