மனிதாபிமானத்தை வென்ற சம்பவமொன்று அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.
இலங்கையில் வைத்து, சீனப்பிரஜை ஒருவரினால் தவறவிடப்பட்ட மடிக்கணினி, இலங்கையிலுள்ள பேஸ்புக் நண்பர்களின் உதவியுடன் அவரிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சீனப்பிரஜை அண்மையில் கொழும்பில் முச்சக்கரவண்டியில் பயணித்த போது, அதில் தனது மடிக்கணினியை தவறவிட்டுள்ளார்.
தனது தொழிலுடன் தொடர்புடைய முக்கியமான ஆவணங்கள் அடங்கிய மடிக்கணினி தவறவிடப்பட்டமையினால் மிகவும் அசௌகரியத்துக்குள்ளான குறித்த சீனப்பிரஜை, சில இளைஞர்களின் உதவியுடன் “எனது கணினி தொலைந்துவிட்டது.
அதனை மீட்டுத்தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்” என்று சிங்கள மொழியில் எழுதப்பட்ட பதாகையொன்றைத் தாங்கியவாறு கொழும்பு, கங்காராம பிரதேசத்தில் நின்றுள்ளார்.
இதனை பார்த்த சில இளைஞர்கள் அக்காட்சியைப் படம்பிடித்து பேஸ்புக்கில் பதிவிட்டதுடன், மேற்படி சீனப்பிரஜையின் தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தப் பதிவு பலரால் பரிமாறப்பட்டு, இறுதியாக மடிக்கணினி தவறவிடப்பட்ட முச்சக்கரவண்டியின் சாரதியின் கைகளுக்கு கிட்டியுள்ளது. இதனையடுத்து, அச்சாரதி சீனப்பிரஜையை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது வீட்டுக்குச் சென்று மடிக்கணினியை கையளித்துள்ளார்.
தனது கணினி கிடைத்த சந்தோசத்தில் அவ்வெளிநாட்டவர், சாரதிக்கு 30 ஆயிரம் ரூபாவை சன்மானமாக வழங்கியுள்ளார்.
அத்துடன், தனது மடிக்கணினி திருப்பிக்கிடைப்பதற்கு உதவி செய்த இலங்கை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், முச்சக்கரவண்டி சாரதியுடன் எடுத்துக்கொண்ட படத்தையும் குறித்த சீனர் தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.