இலங்கைக்கு சென்ற சுவீடன் குடும்பத்தினரை, இலங்கை விமானப்படையின் கட்டுநாயக்க இராணுவ முகாமில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சுவீடன் நாட்டவர் நீர்கொழும்பில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இதனை குறிப்பிட்டுள்ளார்.
“நான் 51 வயதான சுவீடன் நாட்டை சேர்ந்தவர். எனது பெயர் பியுரலின். நான் சுவீடன் நாட்டின் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் கட்டுபாட்டு பொறியியலாளராக செயற்படுகின்றேன். எனது மனைவி இலங்கை பெண் ஒருவராகும். எனினும் அவர் தற்போது சுவீடன் குடியுரிமையை பெற்றுள்ளார். தற்போது நானும் எனது மனைவி மற்றும் பிள்ளைகள் சுவீடனில் நிரந்தரமாக குடியேறியுள்ளோம்.
நாங்கள் இரண்டு மாத விடுமுறைக்காக இலங்கை வந்தோம். இலங்கை சுற்றுலா வர்த்தகத்திற்காக பல கோடி ரூபாய் செலவிட்டு, நீர்கொழும்பில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக வீட்டுத் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டோம்.
கடந்த 30 ஆம் திகதி எங்களுக்கு சொந்தமான மோட்டார் வாகனத்தை வீட்டிற்கு முன்னால் நிறுத்தி வைத்தோம். நாங்கள் வாகனத்தை நிறுத்தி வைத்த இடத்திற்கும் 7 லட்சம் ரூபாய் செலவிட்டு நாங்களே நிர்மானித்தோம். எனினும் அந்த வீதியில் எங்கள் வாகனத்தை நிறுத்த எதிர்ப்பு வெளியிட்டனர்.
இதன்போது இலங்கை விமானப்படையின் கட்டுநாயக்க இராணுவ முகாமில் சேவை செய்யும் உயர் அதிகாரி ஒருவரும் இரண்டு பெண்களும் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர்.
அதன் பின்னர் அதிகாரி வாகனத்தின் ஜன்னலை தாக்கி உடைத்தார். எனது மனைவிக்கு தாக்குதல் மேற்கொண்டனர். அவரை தூக்கி கீழே அடித்தார்கள். அவரது அடி வயிற்றில் தாக்குதல் மேற்கொண்டனர். என்னையும் கடுமையாக தாக்கினார்கள். இதனால் நாங்கள் இருவரும் கடந்த 3 நாட்களாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தோம்.
இதனால் அச்சமடைந்த எங்கள் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றார். நாங்கள் இது தொடர்பில் கொழும்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தோம். எனினும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் எங்களுக்கு நியாயம் பெற்றுத் தருமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்…” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.