காலம் கணித்தறிய முடியாத பண்டைக்காலம் தொட்டு இந்தியாவின் தென் கோடியில் நெய்தல் நிலத்தில் வாழ்ந்து வந்த பரதவர்கள் 1534இல் போர்த்துக்கல் அரசனால் கிறிஸ்தவர்களாக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் வருகையானது அவர்களின் வாழ்க்கையினை இறைவன் பக்கம் திருப்பியது. 1545 இல் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போராட்டத்தில் பரத கிறிஸ்தவர்களுக்கு பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. இதனால் அச்சமூகத்தினரில் பலர் தமது தாயகத்தை விட்டு வெளியேறி பல தீவுகளில் குடியேறினர்.
இவர்களில் பலர் புங்குடுதீவின் தென்கீழ் முனையிலும் குடியேறினர். இலங்கையின் வடபுலத்தில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் இந்து ஆலயங்கள் மத்தியில் நடுநாயகமாக விளங்கும் புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் ஆகும். இவ்வாலயத்தின் வரலாறு நூறு வருடங்களுக்கு மேற்பட்டதாகும். ஆரம்பகால கட்டத்தில் சிறு ஆலயமாக உருவெடுத்து தற்பொழுது பெரிய ஆலயமாக உருவெடுத்துள்ளது. அந்நாளில் இந்தியாவில் கிறிஸ்தவ மக்களுக்கெதிரான போராட்டத்தில் பரத குல மக்களுக்குப் பல கொடுமைகள் இழைக்கப்பட்டன.
இக் கொடுமைகளை தாங்கமுடியாத மக்கள் தாயகத்தை விட்டு வெளியேறி கடல் வழியாகப் பயணத்தைத் தொடங்கி இலங்கை வடபுலத்தில் உள்ள தீவுகளில் குடியேறினர். இவர்களில் ஒரு பகுதியினர் புங்குடுதீவில் தரையிறங்கி தென்பகுதியில் குடியமர்ந்தனர். புனித பிரான்சிஸ் சவேரியாரின் போதனைப்படி இறைவாழ்வு வாழ அவர்கள் தவறவில்லை. அவர்களின் ஜீவனோபாயமாக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு சிறப்புற வாழ்ந்தனர்.
இக் காலகட்டத்தில் தமது தொழில் நிமித்தம் கரையோரமாகச் சென்ற போது பேழை ஒன்று கரையில் ஒதுங்கி இருப்பதைக் கண்டு மகிழ்வுடன் அதை எடுத்துக் கொண்டு தம் இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டனர். போகும் வழியில் தங்கள் பாதை மாறித் தீவின் மத்தியை அடைந்தார்கள்.
ஒரு ஆலமரம், பற்றை, புதர்கள் உள்ள காடாக இருந்த படியினால் ஆலமரத்தின் கீழ் இளைப்பாறினார்கள்.
தாங்கள் பாதை மாறி வந்ததை உணர்ந்த அவர்கள் மீண்டும் பயணத்தைத் தொடர ஆயத்தமாகி பேழையைத் தூக்கினார்கள். அவர்களால் அதை அசைக்க முடியவில்லை. அதனால் அவர்களுக்கு ஆச்சரியம் மேலிடவே உடனே பேழையை உடைத்தனர். அதனுள் புதுப்பொலிவுடன் ஜோதியாய் ஒளிவீசும் புனித சவேரியாரின் திருச்சுரூபம் இருக்கக் கண்டு மெய்சிலிர்த்தது. உடனே முழங்கால் படியிட்டுச் சுரூபத்தை வணங்கினர். பின் பேழையை ஆலமரத்தின் கீழே விட்டுவிட்டு வீடு சென்று சகலருக்கும் இச் செய்தியை அறிவித்தனர்.
பின்பு புனித பிரான்சிஸ் சவேரியார் தம்மை திருமறைக்கு திருப்பியதுமல்லாமல் கடல் கடந்த நாட்டிலும் தங்களுக்கு பாதுகாவலராக இருந்தார். இவரது திருச்சுரூபம் பெற்றதால் பரதகுல மக்கள் மகிழ்ந்ததுடன் தமது நன்றிப் பெருக்காகப் புனிதர்களுக்கு ஆலயம் அமைத்து வணங்கி வருகின்றனர். புனிதரின் திருச்சுரூபம் கிடைக்கப்பெற்றுப் பிரதிஸ்னம் அமைந்துள்ள அத்தினத்தையே வருடம் தோறும் வைகாசி மாதம் 20 ஆம் திகதி புனிதருக்கு விழா எடுக்கின்றனர்.
தற்பொழுது மக்கள் மீளக்குடியேறிய பின் சகல பங்கு மக்களின் ஒத்துழைப்புடனும் ஆலய புனரமைப்புப் பணிகள் நடைபெற்று புதுப்பொலிவுடன் விளங்குகின்றது. ஆலயத்தின் சிறப்பைக் கேள்வியுற்ற வடமாகாண ஆயர் அதிமேதகு ஆண்டகை தோமஸ் சவுந்தரநாயகம் அங்கு விஜயம் மேற்கொண்டு ஆலயத்தைப் பார்வையிட்டுச் சென்றார். ஆலயத்திற்கு நிரந்தரப் பங்குத் தந்தையாக அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அடிகளாரை நியமித்தார்.
அவர் பல வழிகளிலும் பங்கு மக்களுக்கு ஆன்மீகப் பணியாற்றி வருவதுடன் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் முயற்சி எடுத்து பாடசாலை முன்பள்ளி, கணினி வகுப்புகள், தையல் வகுப்புகள் ஆகிய துறைகளில் மாணவ, மாணவிகளை ஊக்குவித்து சேவையாற்றி வருகிறார்.
அத்துடன் தோமஸ் சவுந்தரநாயகம் கணினிப் பாடசாலை மேதகு ஆண்டகை தோமஸ் சவுந்தரநாயகத்தினாலே ஆரம்பித்து வைக்கப்பட்டது சிறப்பு அம்சமாகும்.
கோவிலின் கட்டுமானப் பணிகளில் கவனம் செலுத்தி முன்போர்ட்டிக்கோ, மணிக்கூட்டுக் கோபுரம் ஆகிய வேலைத்திட்டங்களும் நடைபெற்று வருகிறது.
மூலம் – http://www.pungudutivu.org இணையம்.