நாட்டையே உலுக்கிவிட்ட பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களைத் தொடர்ந்து, 12வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாகச் சாவுத் தண்டனையை விதிக்கும் வகையிலான சட்டத் திருத்தம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான மேனகா காந்தி, இந்தச் சட்டம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் என்று தான் நம்புகிறார் எனக் கூறினார்.
கடந்த 2013ஆம் ஆண்டு, டெல்லியில், ஓடும் பஸ்சில், ஜோதி என்ற இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதைத் தொடர்ந்து, பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்குச் சாவுத் தண்டனை விதிக்கும் முடிவை இந்திய மத்திய அரசு கொண்டுவந்தது.
தென் கிழக்கு ஆசியாவில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நான்காவது நாடாக இந்தியாவில் பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்குத் தூக்குத் தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடவடிக்கை பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களைக் குறைக்குமா? குறைக்காதா? என்ற வேறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன.
சட்டங்களை ஏலவே கொண்டுள்ள நாடுகள்
ஆப்கானிஸ்தான் – –பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு எதிராக 2009ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் ஒரு குற்றவியல் சட்டம் கூட நிறைவேற்றப்படவில்லை. 2009ஆம் ஆண்டு பெண்களுக்கெதிரான வன்முறைத் தடுப்பு சட்டம் அந்த நாட்டு அதிபரின் உத்தரவின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
பெண்கள் அல்லது சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி இறந்தால், அந்தச் செயலைப் புரிந்தவருக்குச் சாவுத் தண்டனை விதிப்பதற்கு அந்தச் சட்டம் வழிகோலியது. பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்குச் சாவுத் தண்டனை அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும்கூட ஆப்கானிஸ்தானில் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்தது. ஆப்கானிஸ்தானில் சாவுத் தண்டனை விதிக்கப்படுவது பரவலாக இல்லை.
அவ்வப்போது தனது விதிகளின்படி தவறு செய்தவர்களைப் பொதுவெளியில் தூக்கிலிட்ட தாலிபன் அமைப்பு, ஆப்கானிஸ்தானில் 2001ஆம் ஆண்டு வீழ்ந்த பிறகு, அந்த நாட்டு அரசு ஒருசில வருடங்களுக்கு ஒருமுறையே தூக்குத்தண்ட னையை நிறைவேற்றி வருகிறது. ஆனால், ஒவ்வொரு தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்கும் அந்த நாட்டின் அதிபர் தனித்தனியே கையெழுத்திட வேண்டும். ஆப்கானிஸ்தானில் 2009ஆம் ஆண்டு முதல் இதுவரை 36 சாவுத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பன்னாட்டு மன்னிப்புச் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அவற்றுள் எத்தனை தண்டனைகள் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டன என்பது தெரியவில்லை.
ஆப்கானிஸ்தானில் 2014ஆம் ஆண்டு சில பெண்களைக் கூட்டாகப் பாலியல் வன்புணர்வு செய்த ஐந்து ஆண்களுக்கு அப்போதைய அதிபர் கர்சாய், இரண்டு மணிநேர துரித விசாரணைக்கு பிறகு, சாவுத் தண்டனை விதிப்பதற்கு ஒப்புதல் தெரிவித்துக் கையெழுத்திட்டார்.
பாகிஸ்தான் ––பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு தெற்கு ஆசியாவிலேயே சாவுத் தண்டனை விதித்த முதல் நாடு பாகிஸ்தான். 1979ஆம் ஆண்டு அப்போதைய இராணுவத் தளபதியாகவும், நாட்டின் ஆறாவது அதிபராகவும் விளங்கிய ஜியா உல் ஹக், முறை தவறிய பாலியல் உறவு கொள்பவர்கள் மற்றும் பாலியல் வன்புணர்வு செய்பவர்களைக் கல்லைக் கொண்டு அடித்தே கொல்லும் தண்டனையைக் கொண்டுவந்தார்.
ஆனால், பாலியல் வன்புணர்வுகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் பாதிக்கப்பட்டதற்குச் சாட்சியாக நான்கு ஆண்களை நிறுத்த வேண்டும் என்ற விதி இருந்ததால், இந்தச் சட்டம் அடக்கு முறையாகப் பார்க்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் அந்தச் சட்டம் திருத்தியமைக்கப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, பெண்கள், சிறுமிகள், கூட்டுப் பாலியல் வன்புணர்வு மற்றும் 16வயதுக்குட்பட்ட சிறுமி களைப் பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்குச் சாவுத் தண்டனை விதிக்கும் சட்டம், பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
12 வருடங்களுக்கு முன்னர் பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்குச் சாவுத் தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை பார்க்கும்போது பாகிஸ்தானில் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது. சாவுத் தண்டனைக்கு எதிராக எழுந்த பன்னாட்டு அழுத்தங்களால் 2008-முதல் 2014 வரையான காலத்தில் பாகிஸ்தானில் சாவுத் தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பங்களாதேஷ்– பாலியல் வன்புணர்வு, கூட்டுப் பாலியல் வன்புணர்வு, பெண்கள் மீதான அமிலத் தாக்குதல்கள் மற்றும் குழந்தைக் கடத்தல் போன்ற குற்றங்களுக்குச் சாவுத் தண்டனை உட்படக் கடுமையான தண்டனைகள் வழங்கவேண்டும் என்பதற்காக 1995ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஒடுக்குமுறை (சிறப்பு விதிகள்) சட்டத்தை பங்களதேஷ் நாடாளுமன்றம் கொண்டுவந்தது.
ஆனால் இந்தக் கடுமையான தண்டனைகள் குறித்துப் பல விமர்சனங்கள் எழுந்தன. போதிய ஆதாரங்கள் மற்றும் குறைந்தபட்ச தண்டனைகூட இல்லாத காரணத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலரும் சுதந்திரமாகத் திரிந்தனர்.
2000 ஆம் ஆண்டில் இந்த சட்டம் அகற்றப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் சட்டத்துக்கு எதிரான ஒடுக்குமுறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டது. இதில் பெண்கள் அல்லது குழந்தைகள் வன்புணர்வு வழக்கில் சாவுத் தண்டனை வழங்கும் அம்சம் மட்டும் மாற்றப்படவில்லை.
ஆயுள் தண்டனை மற்றும் பிற குற்றங்களுக்கு குற்றப்பணம் விதிக்கப்படும் என்பதும் இந்தச்சட்டத்துடன் இணைக்கப்பட்டது. 24 ஆண்டுகளுக்கு முன்னர் சாவுத் தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இங்கு பதிவான வன்புணர்வு வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை.
‘’வன்புணர்வு செய்தால் சாவுத் தண்டனை விதிக்கப்ப டும் என்ற பயத்தை மக்கள் மனதில் கொண்டுவந்த எந்தச் சான்றும் இல்லை. வன்புணர்வு வழக்குகளின் எண்ணிக்கையும் குறையவில்லை,’’ என்கிறார் மனித உரிமை ஆர்வலரான சுல்தானா கமல்.
கடந்த பத்து ஆண்டுகளில் பங்களாதேஷில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சாவுத் தண்டனைகள் நிறை வேற்றப்பட்டுள்ளதாக சாவுத் தண்டனை மீதான உலகளாவிய தரவுகளை சேகரித்துவரும் பன்னாட்டு மன்னிப்புச் சபை கூறுகிறது. ஆனால், இவற்றில் வன்புணர்வு வழக்கில் எத்தனை சாவுத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
பாதிக்கப்படுபவர்கள் ஊதாசீனப்படுத்தப்படுகிறார்கள்
தெற்காசிய நாடுகளில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டவர்கள் சமூகக் களங்கமாகக் கருதப்படுவதால், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பாதிப்பை பெரும்பாலும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. மனித உரிமைகள் கண் காணிப்பகம் என்ற அமைப்பு 2012ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, பாலியல் வன்புணர்வு பற்றிப் பெண்கள் முறைப்பாடு செய்தால், தகாத உறவு என்ற குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்படலாம் அல்லது கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படலாம்.
பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொலிஸ், நீதி அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆதரவு கொடுப்பதற்குப் பதிலாக, தவறாக நடத்தப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் அக்கறையில்லாமல் ஏளனத்துடன் நடத்தப்படுவதுடன், தார்மீக நெறிமுறைகளை மீறித் தண்டிக்கப்படுகின்றனர் என அந்த அறிக்கை கூறுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாகப் பொலிஸ் மற்றும் பிற அதிகாரிகளின் பொறுப்புகளை அதிகரிக்கும் வகையில் இந்தியாவில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் மாற்றம் என்பது மிகவும் மெதுவாகவே உள்ளது. இந்தியாவில் வன்புணர்வுச் சம்பவங்களுக்கும் பொலிசாரிடம் முறைப்பாடுகள் அளிப்பதற்குமான இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சாவுத் தண்டனையால் குற்றத்தைக் குறைக்க முடியாது
சாவுத் தண்டனை மட்டுமே வன்புணர்வுக் குற்றங்களை குறைப்பதற்கு உதவாது என்று ஆப்கானிஸ்தான் தனி நபர் மனித உரிமைகள் ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் மூஸா மஹ்மூடி கூறுகிறார். பாலியல் வன்புணர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம் என்றாலும், நடைமுறையில் சமரசங்கள் சாத்தியமாகின்றன. பாலியல் வன்புணர்வுக்குச் சாவுத் தண்டனை விதிப்பதற்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற பல இந்தியச் செயற்பாட்டாளர்களும் இந்தக் கவலையை எழுப்புகின்றனர். ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்ட போதிலும், பெண்கள் மற்றும் சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றங்களின் எண்ணிக்கை மாறாமல் தொடர்கின்றன.
தண்டனை வழங்கப்படும் விகிதம் குறைவாக இருப்பதால், ஏற்கனவே இருக்கும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. காவல்துறை அதிகாரி அல்லது அரசு அதிகாரி ஒருவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால், அது குறித்து உரிய விசாரணை செய்வது, இரண்டு தரப்பினருக்கும் மரபணுப் பரிசோதனைகளை முறையாக மேற்கொள்வது, பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை மறைப்பது, விசாரணையை விரைவில் முடிப்பதுபோன்ற சாத்தியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் இந்தச் சட்டங்கள் உறுதியாக, நன்கு திட்டமிடப்பட்டுச் செவ்வனே செயல்படுத்தப்படுமா? என்பது கவலைக்குரிய விடயமாகவே உள்ளது.
நீதியின் மெத்தனப்போக்கு
வழக்கை நடத்தும்போது ஏற்படும் அதிக செலவுகள், தாமதமான விசாரணை நடைமுறைகள் என நீளும் சிக்கல்களைத் தவிர, பாதிக்கப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் இரண்டு விரல்களை உட்செலுத்திப் பரிசோதனை செய்வது போன்ற உடல்ரீதியான சோதனைகளை நினைத்து அச்சப்பட்டு, நீதிமன்றத்துக்கு வெளியே வழக்குகள் சமரசம் செய்துக்கொள்ளப்படுவதாக பங்களாதேஷூல் உள்ள செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் இரண்டு விரல்கள் பரிசோதனை தடை செய்யப்பட்டிருந்தாலும், சங்கடம் தரும் உடல் பரிசோதனைகள் செய்யப்படுவது இயல்பானதாக இருக்கிறது. நீண்ட இழுபறியான விசாரணைகளும் குற்றங்களைப் பதிவு செய்வதில் தடைக்கல்லாக இருக்கின்றன.
பாலியல் வன்கொடுமை வழக்குகளின் தரவுகளை இணைக்கும் அமைப்பான ‘ஒடிர்கர்’ அறக்கட்டளையின் செயலாளர் அடிலுர் ரெஹ்மான் இவ்வாறு கூறுகிறார்,
‘‘ஊழல் பரவலாக இருப்பதால் சாவுத் தண்டனை விதிப்பதில் தடையிருக்கிறது, அரசியல் செல்வாக்குக் கொண்ட குற்றவாளிகளால் நீதி அமைப்புக்கள் எளிதாக கையாளப்படுகின்றன, அவர்களுக்குப் பிணை கிடைக்கிறது, கருணையுடன் பார்க்கப்படுகிறார்கள்.
அவர்களை யாரும் தண்டிக்க விரும்புவதில்லை’’ என்று அவர் கூறுகிறார். அவர் சாவுத் தண்டனைபோன்ற கடுமையான தண்டனைகள், பாதிக்கப்பட்டவர் நீதித்துறையை அணுகுவதற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதையே இது தெளிவாகக் காட்டுகின்றது. பொலிஸ், நீதித்துறை, அரசு அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் ஒவ்வொருவரிடமும் சமுதாய அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட்டாலன்றி, குற்றவியல் சட்டங்கள் உண்மையில் குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் மிகவும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும்.