கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கரை சேர்ப்பதற்க்காக மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவரின் செயல் பாராட்டைப் பெற்றிருக்கிறது.தன் முதுகை படிக்கட்டாக மாற்றிய மீனவரின் செயல் மக்களை நெகிழச் செய்துள்ளது.
மழை, வெள்ளம், என திரும்பிய திசைகளிலெல்லாம், தரையை மறைத்து நீர் மட்டுமே காட்சியளிக்கிறது. வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து நிற்கதியாகி நிற்கின்றனர் அம்மாநில மக்களில் பெரும்பாலானோர்.
கேரளாவை மீட்க உறுதி பூண்டு கரம் கொடுக்கின்றனர் அண்டை மாநிலத்தவர்கள். தேசிய கட்சிகள் உள்ளிட்டவை தங்கள் எம்.பி, எம்.எல்.ஏ.வின் ஒருமாத சம்பளம் தரப்படும் என அறிவித்துள்ளனர்.
திரைத்துறையினர் அவர்கள் பங்குக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். மாநிலங்கள் தங்களால் இயன்ற அளவில் நிவாரண நிதிகளை அறிவித்துள்ளன. கேரளாவில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
வீடு, உடை, நிலம், கடை, வாகனங்கள் என அனைத்தையும் இழந்தபோதிலும், மனித நேயத்தை மட்டும் இழக்காமல் மிச்சம் வைத்துள்ளது கேரளா. அந்த மனித நேயம் நிச்சயம் கேரளாவை மீட்டுக்கொடுக்கும்.
அந்த வகையில், கேரளாவில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீனவர் ஜெய்சல் என்பவரின் செயல் காண்போரை நெகிழச்செய்துள்ளது.
அந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் மீட்புபணியில் ஈடுபட்டு வரும் மீனவர் ஜெய்சல், பாதிக்கப்பட்ட மக்கள் படகில் ஏறுவதற்கு வசதியாக, தன்னுடைய முதுகை படிக்கட்டாக மாற்றி உதவியுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.