இந்தியா தெலங்கானா அரசு சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தைப் பார்த்த குடும்பம் ஒன்று அதிர்ச்சியடைந்தார்.
தெலங்கான அரசின், ரைது பீமா (விவசாயக் காப்பீடு) மற்றும் கண்டி வெலுகு (கண் ஆய்வு நிகழ்ச்சி) என்ற திட்டங்கள் குறித்து விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில், பத்மா என்ற பெண், அவரின் குழந்தை மற்றும் கணவருடன் இருப்பது போன்ற ஒளிப்படம் இடம்பெற்றுள்ளது.
அதில், பத்மாவின் கணவர் நாயாகுலா நாகராஜூக்குப் பதிலாக வேறு ஒருவரின் ஒளிப்படம் இடம்பெற்றுள்ளது. இதனால், பத்மாவின் குடும்பம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய பத்மா மற்றும் நாகராஜூ, ‘நாங்கள், குடும்பத்துடன் விளம்பரத்துக்குப் ஒளிப்படம் கொடுத்தால், கடன் வாங்கித் தருவதாக சிலர் எங்களைத் தொடர்புகொண்டனர். திடீரென்று, நாளிதழ்களில் எங்களுடைய குடும்பம் மிகவும் கஷ்டப்படுவது போல விளம்பரங்கள் வந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.
எங்களிடம் சொந்தமாக நிலம் கிடையாது. நாங்கள் எப்படி, விவசாயக் காப்பீடு பெற முடியும். என்னுடைய கணவரைப் போல, வேறு ஒருத்தரின் ஒளிப்படத்தைப் போட்டது மிகவும் மோசமான ஒன்று. அதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதனால், எங்கள் குடும்பத்தினர் மிகவும் வேதனையடைந்துள்ளனர். பலரும் எங்களைப் பார்த்துச் சிரிக்கின்றனர். எங்களால் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளனர்.