அவளின் உதிரம் ….

அவளின் உதிரம் …..

மாமரக்கருவிகள் பறக்கின்றன
காற்றின் வேகம் அதிகரித்திட
மண்ணினை முத்தமிட்டிருந்த
மண்துகள்கள்
காற்றுடன் காதல் செய்ய
புழுதியாய் உருமாறிக்கொண்டிருக்கின்றன

வயல் வரம்பில் தண்ணீர்
வளைந்து அதை தொடும் நெல்நுனிகள்
இடையில் பெரும்காதல்
மழை
தூரத்தில் அந்த குடிசை
மாலைமங்கிக்கொண்டிருக்க
மழையும் ஆர்ப்பரிக்க
விளக்கேற்றுகின்றாள்
தனிமையில்

காற்றுடன் தீ
தீயுடன் அவள்
போட்டி நீளுகின்றது
காற்று அவளிற்காய் விட்டுக்கொடுக்கின்றது
ஒளிரும் எண்ணெய் விளக்கில் அவள் முகம்
கார்காலத்தில் சந்திரன் வானில் இருந்து
இவள் முகத்தில் குடிகொண்டான் போலும்

சாதுவாய் மேனி குளிர
கைகளை இறுக்கி அணைத்து
கால்களை பாவாடைக்குள் ஒழித்து
குனிக்குறுகி அமர்கின்றாள்
நிசப்தமும் மழையும் தனிமையும்
அவளும்
மங்கைக்கேயான பயத்துடன் வியர்வைத்துளிகள் எட்டிப்பார்க்க
துடைத்துக்கொண்டு சுதாகரிக்கின்றாள்

சற்று நேரத்தில்
வெளியில் இருந்து சத்தம்
ஆனாலும் உருவமில்லை
தைரியத்துடன் முன்னேறுகின்றாள்
கால்கள் விரைகின்றன
கையில் பொல்லு

வாசல் தாண்டுகையில்
மாற்றம்
எப்படி வந்தவள்
சடுதியாய் மாறினாள்
கால்கள் பின்னகர்ந்தன
மனம் பதறியது
அவளிற்கு வெளியே செல்ல அனுமதி இல்லை

எது எவ்வாறாயினும் அவள்
அச்சமூகத்தில் “பெண்”
பெண்ணியங்களை அள்ளி வீசும்
பாரினுள் அவள் ஒடுக்கப்பட்டாள்
உயிரே போகினும் விதிகளை மீறல்
பாரிய குற்றமே என்று ஆண்சமூகத்துடன் இணைந்தே கூச்சலிடும் வளர்ந்த பெண்களையும் நினைத்து அழுவதா சிரிப்பதா என்ற கேள்வியுடன் கதவை பூட்டி விட்டு மறுபடியும் வந்து அமர்கின்றாள்

விளக்கை காற்று மெதுவாய் முத்தமிட்டு அணைக்கின்றது
வெளியில் இருந்து வந்த சத்தம்
ஓயவில்லை
அவளும் தூங்கவில்லை
நாளை
காலை மட்டுமே அவள் வாழ்வில் விடியும்
மாற்றங்களை தாங்காதவாறு
அவள் உதிரம் வேதனைகளுடன
அவள் ஒருமையில் இல்லை பன்மையில்

அபித்ரா