யாழ். வடமராட்சி பகுதியில் இரு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்றைய தினம் பதற்ற நிலை உருவாகியது.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பே இந்த குழுமோதலுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துன்னாலை பகுதியில் இடப்பெற்ற இந்த மோதல் காரணமாக பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் இரவு வேலைகளிலும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
சுமார் 500 க்கும் மேற்பட்ட கண்ணாடி போத்தல்கள், கற்கள் கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி இந்த இரு குழுக்களும் சில மணிநேரம் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தகவல் வழங்கப்பட்டு பொலிஸார் குறித்த பகுதிக்கு செல்வதற்கு முன்னரே மோதலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், அப்பகுதி முழுவதும் கண்ணாடி போத்தல்கள் உடைக்கப்பட்டு காணப்பட்டதுடன், அவற்றினை பொலிஸாரின் அறிவுறுத்தலில் நேற்றிரவு சுத்தம் செய்யும் பணிகளும் இடம்பெற்றன.
இருப்பினும் இந்த குழு மோதலில் படுகாயமுற்ற 7 பேர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.