யாழ். குடாநாட்டில் தேங்காயின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஒரு பெரிய தேங்காயின் விலை 70ரூபாய் முதல் 80ரூபாய் வரை தற்போது விற்பனை செய்யப்பட்டு விற்கப்படுகின்றது.
இதேவேளை, தேங்காயின் விலை உயர்விற்கு கடும் வெப்பமுடனான காலநிலையே காரணம் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.
யாழ்.தென்மராட்சிப் பிரதேசத்திலிருந்து முன்னர் அதிகளவு தேங்காய்கள் குடாநாட்டின் முக்கிய சந்தையான திருநெல்வேலிப் பொதுச் சந்தைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
எனினும் தற்போது அது குறைவடைந்துள்ளதுடன், இருபாலை, நீர்வேலி, சிறுப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தே சந்தைக்கு எடுத்துவரப்படுவதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.
புத்தளம் போன்ற வெளிமாவட்டங்களிருந்து தற்போது யாழ்.குடாநாட்டிற்குத் தேங்காய்கள் எடுத்துவரப்படுவதில்லை எனவும், தென்மராட்சிப் பிரதேசத்தில் விளைவிக்கப்படும் தேங்காய்களும் தற்போது கொழும்பிற்கு அதிகளவில் ஏற்றுமதியாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக யாழ்.குடாநாட்டிலுள்ள சந்தைகள் உட்பட விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கையில் திடீர் என்று பாரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.