இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி தமிழ் மக்களை சந்தித்து கலந்துரையாடவேண்டும் பழநெடுமாறன்…

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும், இன்றுவரை தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது.


இலங்கைக்கு அடுத்த மாத இரண்டாம் வாரம் விஜயம் செய்யவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வசிக்கும் தமிழர்களை நேரில் சந்தித்து அவர்களின் துயரங்களை கேட்டு, அதை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்று, தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டு​கோள் விடுத்துள்ளார்.
இதேவே​ளை, இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், நீண்ட காலமாக கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கக் கோரியும் இராமேஸ்வரம் பஸ் நிலையம் முன்பாக, தமிழர் தேசிய முன்னணி சார்பில் கடந்த சனிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..