வடக்கில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது…வடக்கு கல்வி செயலர்…
வட மாகாணப் பாடசாலைகளில் நிலவும் தமிழ் , வரலாறு , தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட 349 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவில் விண்ணப்பம் கோருவதற்கு நடவடிக்கை இடம்பெறுவதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் , வட மாகாணப் பாடசாலைகளில் நிலவும் தமிழ் , வரலாறு , தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட 349 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவில் விண்ணப்பம் கோருவதற்கு நடவடிக்கை இடம்பெறுகின்றது. அதாவது வட மாகாணப் பாடசாலைகளில் நிலவிய குறித்த பாடங்களிற்கான ஆசிரியர்கள் ஆயிரம் பேரை நியமிப்பதற்கு கடந்த ஆண்டில் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தோம் .
அதன் பிரகாரம் குறித்த அனுமதியினை மத்திய அரசும் வழங்கியிருந்த்து. இதற்காக விண்ணப்பங்கள் கோரியபோது பலர் விண்ணப்பித்திருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்தவர்களிற்கு இடம்பெற்ற போட்டிப் பரீட்சையில் பொது அறிவு மற்றும் உளச் சார்பு ஆகிய இருபாடங்களிற்கான பரீட்சை இடம்பெற்றது. இதில் இரு பாடங்களிலும் தலா 40 புள்ளிகளிற்கு மேல் பெற்ற 841பேர் அதன் அடிப்படையிலான 80ற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றிருந்தனர். அவ்வாறு வெட்டுப் புள்ளிகளைப் பெற்ற 841பேரும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டனர்.
அவ்வாறு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டவர்களில் 641பேரே நேர்முகத்தேர்வில் தகுதி எனக் கண்டறியப்பட்டனர். இவர்களிற்கான நியமனங்கள் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்டது. இதன் எஞ்சிய எண்ணிக்கையிலான ஆசிரியர்களை நியமிப்பதற்கான அனுமதியினைக் கோரியிருந்தோம். குறித்த அனுமதியும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே இதன் பிரகாரம் இப்பாடங்களிற்கான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது.
எனவே இவற்றின் அடிப்படையில் கோரப்படும் விண்ணப்பங்களில் இருந்து மேலும் 349 பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளதனால் வட மாகாணப் பட்டதாரிகளிலர குறித்த பாடங்களிலர பட்டத்தினைப் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். என்றார்.