வவுனியா ஜோசப் முகாமில் இந்த ஆண்டும் மோசமான சித்திரவதைகள் சட்டத்தரணி டொமினிக்…..
வவுனியா ஜோசப் முகாம் என அழைக்கப்படும் வன்னி கூட்டுப் படைத் தலையகத்தில் இந்த ஆண்டும் மோசமான சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக, கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களினது பெயர் விபரங்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர்களது சட்டத்தரணி ஆனந்தராஜா டொமினிக் பிரரேமானந், சித்திரவதைக்கு உட்பட்ட இருவரும் தற்போது நாட்டை விட்டு தப்பிச்சென்று இந்தோனேசியாவில் மறைந்து வாழ்வதாகவும் குறிப்பிட்டார்.
2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இரண்டு தடவைகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட தம்பதியினரின் பெற்றோர்களுக்கு படையினர் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வருவதை அடுத்தே கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக சட்டத்தரணி ஆனந்தராஜா டொமினிக் பிரரேமானந் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில், தென்னாபிரிக்காவின் ஜொஹனஸ் பேர்க்கை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச நீதிக்கும் உண்மைக்குமான திட்டம் சமர்ப்பித்திருந்த அறிக்கையில், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னரும் ஸ்ரீலங்காவில் பாலியல் வன்கொடுமைகள் உட்பட சித்திரவதைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யஸ்மின் சூக்கா தலைமையிலான குறித்த அமைப்பு சமர்ப்பித்திருந்த அந்த அறிக்கையில் ஜோசப் முகாமில் பாலியல் வன்கொடுமைக்கும் சித்திரவதைக்கும் உட்பட்ட 46 பேரின் வாக்குமூலங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
18 ஆண்களினதும் 30 பெண்களினதும் வாக்குமூலங்களுக்கு அமைய ஜோசப் முகாமில் கொடூரமான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கொடூரங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஜோசப் முகாம் கட்டளைத் தளபதிகள் உட்பட படைத் தளபதிகளின் பெயர் விபரங்கள், பதவிநிலைகள், சித்திரவதைக் கூடங்களுக்கான வரைபடங்கள் போன்றவையும் இந்த அறிக்கையில் இணைக்கப்பட்டிருந்தன.
இந்த அறிக்கையினை வெளியிட்டு உரையாற்றிய ஐ.ரி.ஜே.பி யின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜாஸ்மின் சூக்கா, யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் ஜோசப் முகாம் என்று பரவலாக அறியப்பட்ட வன்னிக் கூட்டுப்படைக் கட்டளைத் தலைமையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் பொது மக்கள் மீது தொடர்ச்சியாக மிகமோசமான சித்திரவதைகள், கொடூரமான பாலியல் வன்கொடுமைகள், கற்பழிப்புக்கள் போன்ற கொடுமைகள் அங்குநிலைகொண்டிருந்த படையினராலும், அதிகாரிகளினாலும் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.
இந்த கொடூரங்களுக்கு ஸ்ரீலங்காவின் பிரேசிலுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, மேஜர் ஜெனரல் பொனிபேஸ் பெரேரா, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண மற்றும் தற்போதைய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க ஆகியோரை கைதுசெய்து பக்கச்சார்பற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்றும் ஜாஸ்மின் சூக்கா ஐ.நா விடமும் ஸ்ரீலங்கா அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.