நாட்டைப் பிடிப்பதற்கான யுத்தம் எதிர்காலத்தில் இடம்பெறப்போவதில்லை. மேலும் வேறு காரணங்களுக்கும் யுத்தம் இடம்பெறப்போவதில்லை. மாறாக நீரைப் பெற்றுக்கொள்வதிலேயே எதிர்காலத்தில் யுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே நீரை விரயம் செய்யாது சிக்கனமாகப் பாவிக்க வேண்டுமென அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
பொல்கஹவெல, பொத்துஹெர மற்றும் அளவ்வ ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு பொத்துஹெர பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்ததார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நீரைப்பெற்றுக்கொள்வதில் ஏற்படும் பிரச்சினை பொலிஸ் நிலையம் வரையில் சென்றுள்ளதை தற்போதே அவதானிக்க முடிகிறது. மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றவர்கள் அனைவரும் யுத்தம் காரணமாக அங்கு செல்லவில்லை. மத்திய கிழக்கில் நீர் இல்லாததனாலேயே அவர்களில் சிலர் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.
மேலும் தற்போது வடமேல் மாகாணத்தில் மாஓயாவை அண்மித்த பிரதேசங்களில் நீருக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. எனவே குடிநீர் பெறும் மாஓயாவை பாதுகாக்கும் வேலைத்திட்டங்களையும் முன்வைக்க வேண்டும். கடந்த காலங்கில் மாஓயாவிலிருந்து அதிகளவான மணல் அகழப்பட்டது. அதனால் தற்போது அங்கு மணல் இல்லை. அங்கு மணல் அகழப்படுவதை சிறிது காலத்திற்கு நிறுத்த வேண்டும்.
மேலும் நீர் பாவனை தொடர்பில் பழமையான முறைகளையே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். தொடர்ந்தும் அப்பழைய முறைகளுக்கு இணங்க செயற்பட முடியாது. அத்துடன் நீரைப் பயன்படுத்தும்போது அதனை வீணாக்காது பயன்படுத்துவதற்கான புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும். நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கு எவராலும் உரிய தீர்வு முன்வைப்பது கடினம். பவுஸர் மூலம் நீர் வழங்கினாலும் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாது.
அத்துடன் தற்போது நீர் பிரச்சினை மாத்திரமல்லாது குப்பை பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. மனித சமூகம் தமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்கின்ற போதுதான் இவ்வாறான சகல பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. ஆகவே குறித்த பிரச்சினைகளுக்கு சமூகமும் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.