சர்வதேச தரவரிசை பட்டியலில் பிரித்தானிய பாஸ்போர்ட் சரிவை சந்தித்தாலும் விசா இல்லாமல் அதிக நாடுகளுக்கு பிரித்தானியர்களால் செல்ல முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.
2015 ஆம் ஆண்டு பிரித்தானிய பாஸ்போர்ட்டானது சர்வதேச அளவில் அதிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக உச்சத்தில் இருந்தது.
ஆனால் தற்போது 6 இடங்கள் சரிவை சந்தித்துள்ளது. முதலிடத்தில் ஜப்பான் நாட்டு பாஸ்போர்ட் உள்ளது.
மேலும், ஆஸ்திரியா, நெதர்லாந்து, நோர்வே, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இணையான அந்தஸ்தில் பிரித்தானிய பாஸ்போர்ட் தற்போது உள்ளது.
2019 ஆம் ஆண்டில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ள ஜப்பான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகில் 190 நாடுகளுக்கு விசா இன்றி பயணப்படலாம்.
இது இவ்வாறு இருக்க, 2015 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் பிரித்தானியர்கள் விசா இன்றி அதிக நாடுகளுக்கு செல்லலாம்.
2015 ஆம் ஆண்டு ஜேர்மனியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்ட பிரித்தானியா பாஸ்போர்ட் கைவசம் வைத்திருப்பவர்கள் அப்போது 173 நாடுகளுக்கு மட்டுமே செல்ல முடியும்.
ஆனால் தற்போது 6-வது இடத்திற்கு சரிவை சந்தித்தாலும், பிரித்தானியர்களால் விசா இன்றி 185 நாடுகளுக்கு சென்றுவர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.