கார்கில்ஸ் கட்டடத்தொகுதி திரையரங்கில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் – பாகுபலி2 பார்க்கச் சென்றவர்கள் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் கார்கில்ஸ் கட்டடத்தொகுதியில் இயங்கும் மஜிஸ்ரிக் திரையரங்கின் நிர்வாகத்தில் மிகப்பெரிய குழப்பங்கள் இருப்பதாக மக்கள் குறைபட்டுள்ளனர்.
“பாகுபலி 2” படம் திரையாகி வருகின்ற இவ் வேளையில் அங்கு கூடுகின்ற மக்களை மிக மோசமாக மஜிஸ்ரிக் நிர்வாகம் நடத்துவதாகவும் திரைப்படம் ஆரம்பமாகும் நேரங்கள் பற்றியோ ரிக்கட் எடுப்பதற்காக மக்கள் காத்திருப்பது குறித்தோ அந்த நிர்வாகம் எந்தக் கருசனையும் கொள்ளவில்லை என்று விசனம் தெரிவிக்கும் பொதுமக்கள்,
ஒவ்வொரு காட்சி நேரத்துக்கும் 15 நிமிடங்கள் முன்னதாக ரிக்கெட் வழங்கும் கவுண்டர் திறக்கப்பட்டு மூன்று நான்கு பேருக்கு மட்டும் ரிக்கெட் வழங்கிவிட்டு ரிக்கெட் முடிந்து விட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இதைப்பார்க்கும் போது வரிசையில் காத்து நிற்பவர்களுக்கு ரிக்கெட் வழங்கப்படாமல் கறுப்புச் சந்தையில் ரிக்கெட் விற்கப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதாக அங்கு மணித்தியாலக் கணக்கில் காத்து நின்றவ ர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.
இதேவேளை காற்றாடி வசதிகளோ, குளிரூட்டல் வசதிகளோ எதுவும் இல்லாமல் மக்கள் மிகுந்த அசெளகரியங்களை எதிர்கொள்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனவே மேற்படி திரையரங்கில் பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் நடைபெறும் செயற்பாடுகள் குறித்து யாழ்ப்பாண அரச அதிபர் உடன் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அங்கு காத்து நின்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.