காடுகளுக்குள்ளும் மலைகளின் மீதும் இருக்கும் பல கோயில்கள் குறித்து நாம் கேள்விபட்டிருப்போம். சில கோயில்களுக்கு நாமே சென்று வந்திருப்போம். ஆனால் 1000 அடி நீளமுள்ள மலைக்குகையில் மார்பளவு நீரில் அமைந்திருக்கும் அதிசய நரசிம்மர் கோயில் குறித்து இதுவரை அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த அதிசய நரசிம்மர் கோயில் குறித்து பாப்போம் வாருங்கள்.
கர்நாடக மாநிலம் பிதார் நகரிலிருந்து 4.8 கி.மீ தொலைவில் இருக்கும் மனிசூல மலைத்தொடரில் அமைந்திருக்கிறது ஜர்னி நரசிம்மர் குகை கோவில். மற்ற கோயில்களுக்கு பயணிப்பதை போல் இந்த ஜர்னி நரசிம்மரை தரிசிப்பது அவ்வளவு எளிதல்ல.
1000 அடி நீளமுள்ள இந்த மலை குகையில் கடுமையான வரட்சியான காலத்திலும் கூட எப்பொழுதும் 4 அடி முதல் 5 அடி நீர் நிறைந்தே இருக்கிறது. இந்த நீர் எங்கிருந்து வருகிறது எங்கே செல்கிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அதிசயமாக கருதப்படுகிறது.
இந்த தண்ணீரில் அதிசயமான பல மூலிகைகளின் சக்திகள் இருப்பதாகவும் இதில் நடத்து சென்று நரசிம்மரை தரிசித்தால் பல்வேறு வியாதிகள் குணமாகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். குகையில் எப்பொழுதும் வவ்வால்கள் தொங்கியபடியே இருக்கிறது இந்த வௌவால்கள் மனிதர்களை கண்டு பயப்படுவதுமில்லை, இதுவரை எந்த மனிதர்களையும் காயப்படுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.