தங்களை விடுதலை செய்ய கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன்-நளினி இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிறையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர்.
7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநர் முடிவு செய்யலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலை உணவை தவிர்த்து 8ஆவது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
அதேபோன்று பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் கடந்த 9ஆம் திகதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் இன்று காலை உணவை உட்கொள்ள மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து 6ஆவது நாளாக அவர் உண்ணாவிரம் இருந்து வருகிறார்.
சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். தொடர் உண்ணாவிரதம் காரணமாக 2 பேரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் அவர்கள் சிறையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் 2 போத்தல் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் முருகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிறைகண்காணிப்பாளர் மூலம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் சிறையிலேயே தான் உயிரிழந்துவிட்டால், தனது உடலை அரச வைத்தியசாலைக்கு தானம் செய்ய முதல்மைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.