இந்திய வம்சாவளி சிறுமியான ரியா ராஜ்குமாரைக் கொலை செய்ததாக அவளது தந்தையான ரூபேஷ் ராஜ்குமார் குண்டுக்காயங்களுடன் கைதாகி இருக்கும் நிலையில், அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது தாயுடன் வாழ்ந்து வந்த ரியா ராஜ்குமார் (11) தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக தனது தந்தையை சந்திக்க சென்ற நிலையில், வெகு நேரமாகியும் அவள் வீடு திரும்பாததால் கவலையுற்ற அவளது தாயார் பொலிசாருக்கு தகவல் அளித்தார்.
தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்த ரூபேஷ், ஏற்கனவே மனைவியுடனான வாக்குவாதத்தின்போது தனது மகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார்.
எனவே அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பொலிசாரை தொடர்பு கொண்டார் ரியாவின் தாய்.
உடனடியாக பொலிசார் பொது மக்களின் தொலைபேசிகளுக்கு இப்படி ஒரு நபரைக் குறித்து எச்சரிக்கும் ஆம்பர் அலர்ட் என்னும் எச்சரிப்பை அளித்து, ரூபேஷ் மற்றும் அவரது வாகனம் குறித்த தகவல்களை அளித்து, யாராவது அவரையோ அவரது வாகனத்தையோ கண்டால் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
அதன் அடிப்படையில் ரூபேஷின் காரைக் கண்ட ஒரு நபர் பொலிசாருக்கு தகவலளிக்க, Orillia என்ற இடத்தில் பொலிசார் ரூபேஷைக் கைது செய்தனர். அதே நேரத்தில் ரூபேஷின் வீட்டுக்குள் நுழைந்த பொலிசார் அங்கு ரியா உயிரிழந்து கிடப்பதைக் கண்டனர்.
ரூபேஷைக் கைது செய்யும்போது, அவருக்கு ஏதோ பிரச்சினை இருப்பதை உணர்ந்த பொலிசார், அவரை சோதனையிட்டபோது அவர் உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருப்பதைக் கண்டனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூபேஷ், அபாயகரமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ரூபேஷ் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தெரியவந்துள்ளதால் அவர் ஏற்கனவே தனது மனைவியை மிரட்டியதுபோலவே மகளைக் கொன்று விட்டு தன்னையும் சுட்டுக்கொண்டதாக கருதப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரூபேஷ் இன்னும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், தாங்கள் இன்னும் அவரிடம் விசாரணை மேற்கோள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
எனவே மருத்துவமனையில் தீவிர பொலிஸ் கண்காணிப்பில் இருக்கும் ரூபேஷ் தற்போதைக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படமாட்டார் என்றும் அவர் நலம் பெற்ற பிறகே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர் மீது கொலைக்குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரியாவின் உடல் புதன்கிழமை காலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.