இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் ரயில் ஓட்டுநர் மீது மர்ம நபர்கள் மிளகாய் பொடியால் தாக்கிவிட்டு கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளை முயற்சியை அந்த ரயிலின் ஓட்டுநர் திறம்பட தடுத்து நிறுத்தியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து ரயில் ஓட்டுநராக திறம்படச் செயலாற்றிக் கொண்டிருப்பவர் 48 வயதான லக்ஷ்மண் சிங்.
இவர் கடந்த சனிக்கிழமை அன்று, மத்திய ரயில்வேயின் சி.எஸ்.டி – திட்வாலா ரயிலை ஓட்டிச் சென்றார். இந்த ரயிலில் 2,000க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் ரயில் பிற்பகல் 3.35 மணிக்கு கல்வா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
இதையடுத்த சில நிமிடங்களில் மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடிக்கும் நோக்கில், அவர் மீது மிளகாய்ப் பொடிகளை தூவி உள்ளனர்.
இதனால் நிலைதடுமாறிய லக்ஷ்மண் வலியைத் தாங்கிக் கொண்டு 95 கி.மீ வேகத்தில் தொடர்ந்து ரயிலை இயக்கியுள்ளார்.
அடுத்த ரயில் நிலையம் மும்ராவிற்கு, அப்போது 4 கி.மீ தூரம் மட்டுமே இருந்தது. இதையடுத்து மும்ராவில் ரயிலை நிறுத்தினார்.
அங்கு மாற்று ஓட்டுநர் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டுள்ளார். ஆனால் அப்படி யாரும் இல்லாததால், அடுத்த ரயில் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். அதாவது 3 கி.மீ தூரத்தில் திவா ரயில் நிலையம் இருந்தது.
அதற்குள் கண்களை நன்கு கழுவி உள்ளார்.
அங்கும் மாற்று ஓட்டுநர் யாரும் இல்லை. இந்நிலையில் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்கும் வகையில், தொடர்ந்து ரயிலை ஓட்டிச் சென்றுள்ளார்.
இதையடுத்து கோபர், தோம்பிவலி, தகுர்லி ஆகிய நிலையங்களில், கண்களைத் தொடர்ந்து கழுவிக் கொண்டே ஓட்டிச் சென்றுள்ளார்.
சுமார் 18 கி.மீ தூரம் கடுமையான வலியுடன் ரயிலை இயக்கியுள்ளார். இந்த சூழலில் பிற்பகல் 4.12 மணியளவில் கல்யாண் ரயில் நிலையம் வந்துள்ளது. அங்கு இறங்கிய லக்ஷ்மண், உடனே ரயில்வே மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
அங்கு கண்ணில் மிளகாய் பொடி பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதுகுறித்து சிங் கூறுகையில், கல்வா மற்றும் மும்ராவிற்கு இடையே கண்ணில் மிளகாய் பொடி தூவப்பட்டுள்ளது.
என்னால் கண்களை திறந்து பார்க்க முடியவில்லை. இருப்பினும் எனக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின் மூலம் கட்டுப்பாட்டோடு ரயிலை ஓட்டிச் சென்றேன் என்று கூறியுள்ளார்.