திருவள்ளூர் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பள்ளி மாணவி உஷாவின் இறப்பு குறித்து அவரது தந்தை கண்ணீர் மல்க கதறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுப்பிரமணி – எல்லம்மாள் தம்பதியினரின் மகள் உஷா அருகில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த 7.9.2018-ல் பள்ளிக்குச் சென்ற உஷா, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், கடந்த 11 ஆம் திகதி கரும்புத் தோட்டத்தின் அருகில் ஓடையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டார்.
உஷாவை ஒருதலையாக காதலித்த சங்கரய்யா என்பவரை கைது செய்ததில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கரும்புதோட்டம் வழியாக உஷா பள்ளிக்கு செல்கையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் சங்கரய்யா, உஷாவை கடத்தியுள்ளார்.
பிறகு, மாணவி உஷாவை, அந்தப் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு சங்கரய்யா அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரின் நண்பர்கள் வந்துள்ளனர்.
சங்கரய்யாவுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்த அவர்கள் மாணவி உஷாவை வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளனர்.
அதன்பிறகு மாணவிக்கு சாக்லேட்டில் போதை மருந்தினை கலந்துகொண்டு 5 நாட்களாக தவறாக நடந்துகொண்டனர்.
அதன்பிறகு அவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு கீச்சாளம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தின் அருகில் உள்ள ஓடையில் புதைத்துள்ளது தெரியவந்துள்ளது.
தந்தை சுப்பிரமணி கண்ணீர் மல்க கூறியதாவது, எங்களுக்கு சங்கரய்யா மீது ஏற்கனவே சந்தேகம் இருந்தது. அவனது வீட்டுக்கு சென்று என் மகள் எங்கே….அவளை உனக்கே கல்யாணம் செய்துவைக்கிறேன் என அவனிடம் கூறினேன், ஆனால் கடைசிவரை தெரியாது என கூறிவிட்டான்.
அவருடைய அப்பாவும் நிச்சயம் உஷா வந்துவிடுவாள் என்று எனக்கு ஆறுதல் கூறியதால் வீட்டுக்கு வந்துவிட்டோம்.
என் மகள் காணாமல்போன நாட்கள் முதல் சங்கரய்யாவை பார்க்கும்போதெல்லாம் எனது மகளைபற்றி கேட்டேன், அவன் தெரியாது என கூறிவிட்டான். இந்த சமயத்தில்தான் கரும்புதோட்டத்தில் எனது மகள் எலும்புக்கூடாக கிடைத்தாள்.
என்னுடைய மகளை நாசம் பண்ணிட்டானுங்க. அவர்களுக்கு நல்ல சாவே வராது. அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.