இந்தியாவிலுள்ள அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான பதிவு முகாம் திருச்சியில்..!
உள்நாட்டு யுத்தத்தால் இந்தியாவிற்கு அகதிகளாக சென்ற இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கு அனுப்புவதற்கான பதிவு முகாம் திருச்சியில் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பதிவு முறைமையானது வழக்கமாக சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தில் இடம்பெறும் என்றும், இம்முறை திருச்சியிலுள்ள சுமார் 4000 குடும்பங்கள் வரையில் அகதிமுகாமிலிருந்து வெளியில் இருப்பதனால், அவர்களில் அதிகமானவர்கள் தாயாகத்திற்கு திரும்புவதற்கு விரும்புவதாக கூறி, ஐக்கியநாடுகள் சபையின் அகதிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில் திருச்சியில் இடம்பெறுவதாக தமிழக ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
இந்நிலையில் மறுவாழ்விற்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்புவதற்கு, குறித்த நபர்களிடமிருந்து ஆவணங்களை சரிபார்த்தல் மற்றும் ஆள் அடையாள உறுதிப்படுத்தல் வேலைத்திட்டத்தை சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் திருச்சியில் நடமாடும் சேவை முறையில் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நேற்றைய முதல் கட்ட பதிவில் 9 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் பதிவுகளை மேற்கொண்டதாகவும், அதுதவிர திருச்சியை அண்மித்தப்பகுதியிலுள்ள சுமார் 4000 குடுமபங்களில் அதிகளவானோர்தாயகத்திற்கு செல்வதற்கு விரும்புவதனால் குறித்த பதிவு முகாமை திருச்சியில் ஏற்பாடு செய்துள்ளதாக தமிழகத்திலுள்ள அகதிகளுக்கான வட்டாட்சியர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய உறுப்பினர்கள் மற்றும் இலங்கை தூதரக அதிகாரிகள் என்போரினால் ஆவணங்கள் சரிபார்த்தல், கண்விழிப் படலம், கைரேகைகள் பதிவு மற்றும் புகைப்படம் எடுத்தல் போன்ற பணிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.