புலிப் புலம் பெயர்வாளர்களுக்கு அடி பணிந்துள்ள கனேடியப் பிரதமர்
கனேடியப் பிரதமர் புலிப் புலம் பெயர்வாளர்களுக்கு அடிபணிந்து செயற்படுகின்றார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இலங்கையில் கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டுமென கொரிக்கை விடுத்திருந்தார்.
அதன் போது அவர், சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றமொன்றை உருவாக்குமாறு கனேடிய பிரதமர் இலங்கையிடம் கோரியுள்ளார். தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமாயின் இவ்வாறான ஓர் கலப்பு நீதிமன்றம் அவசியம் என தெரிவித்தார்.
இந்நிலையில், கனேடிய பிரதமரின் இந்தக் கருத்துக்கு கனடாவில் உள்ள உலக ஸ்ரீலங்கா பேரவை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. பிரதமர் புலிப் புலம்பெயர் சமூகத்திற்கு அடிபணிந்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
கனேடிய பிரதமருக்கு, ஈழ ஆதரவாளர் கெரி ஆனந்தசங்கரி பொய்யான தகவல்களை வழங்கி வருவதாகவும் குறித்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை வெளியிட்டுள்ள சிங்கள பத்திரிகையில் கனேடிய பிரதமரின் பெயர் ஜோசப் டுடோ என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கனேடிய பிரதமர் எங்கு எவ்வாறு இலங்கை அரசாங்கத்திடம் கலப்பு நீதிமன்றமொன்றை அமைக்குமாறு கோரினார் என்பது பற்றிய விபரங்களை வெளியிடவில்லை.