காரைத்தீவில் பதற்றம் : சகோதரிகளை கடத்திய சிங்கள சாரதி : கைது செய்ய முயன்ற பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல்
இரு சகோதரிகளை கடத்தியதாகக் கூறப்படும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சந்தேகநபரை மீட்கவந்த பொலிஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காரைதீவில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் சிறிதுநேரம் பதற்றமும் நிலவியது.
இச்சம்பவம் இன்று சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவில் இடம்பெற்றது.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் பியலால் தலைமையிலான குழுவினர் பலத்த பிரயத்தனத்திற்கு மத்தியில் கடத்தலுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சந்தேக நபரை பொதுமக்களிடமிருந்து மீட்டு ஜீப்பில் ஏற்றி சம்மாந்துறைப்பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
சம்பவம்பற்றி தெரியவருவதாவது:
நேற்றுமாலை காரைதீவில் இரு சகோதரிகளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு கனரக வாகன சாரதி கடத்திச் சென்றுள்ளார் என்றும் மறுநாள் புதன்கிழமை காலை கடத்தப்பட்ட இரு சகோதரிகளில் ஒருவரை மீண்டும் கொண்டுவந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பத்தினர் மற்றைய சகோதரியை மீட்கு முகமாக கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சகோதரியை ஏற்றிக்கொண்டு ஆட்டோவில் அக்கரைப்பற்றுப் பகுதியை நோக்கிச்சென்று கொண்டிருந்தவேளை குறித்த வாகனசாரதியைக் கண்டுள்ளனர்.
உடனே சாரதியை குறித்த பெண் இனங்காட்டியதும் அவரைப்பிடித்து காரைதீவுக்கு கொண்டுவந்து பிரதானவீதியிலுள்ள வீடொன்றில் அடைத்துவைத்தனர்.
இச்செய்தி சம்மாந்துறைப் பொலிஸாரை எட்டியதும் பொலிஸ் பொறுப்பதிகாரி உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்தார்.
அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை அழைத்துச் செல்ல முற்பட்டபோது பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்தி கூக்குரல் எழுப்பினர்.
முதலில் கடத்தப்பட்ட பிள்ளையைக் கொண்டுவந்து விட்டுவிட்டு சந்தேக நபரைக் கொண்டுச் செல்லுங்கள் எனப் பொதுமக்கள் உரத்துக் குரலெழுப்பினர்.
நாம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அவரை விடுவியுங்கள். நாம் விசாரணை நடத்த வேண்டும். இடையூறு செய்யவேண்டாம் எனப் பொலிஸ் பொறுப்பதிகாரி உரத்த சத்தத்தில் கத்தினார்.
சிலநிமிடங்கள் இழுபறிநிலை காணப்பட்டது. வாக்குவாதமும் ஏற்பட்டது. சற்றுநேரம் பிரதானவீதி போக்குவரத்தும் ஸ்தம்பிதநிலையடைந்தது.
பலத்த போராட்டத்திற்கு பின்னர் மக்களிடமிருந்து சந்தேகநபரை மீட்டு பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச்சென்றனர்.
கடத்தப்பட்ட மற்றுமொரு சகோதரியை மீட்டெடுப்பதற்காக பொலிஸ் குழுவினர் குறித்த சகோதரியின் தந்தையுடன் குறித்த இடம் நோக்கிப் புறப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.