அறிவுறுத்தல்களை பின்பற்றாத பலர் அனர்த்தத்தில் பரிதாபகரமாக பலியானார்கள்
வெள்ள அனர்த்தம் ஏற்படும் முன்பே சில பகுதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த போதும் சில குடும்பங்கள் வெளியேறாமல் இருந்தமையால் பலர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். எனவே வரும் நாட்களில் அநாவசிய குடியிருப்புக்கள் அனைத்தையும் நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த நாட்களில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினாலும் மண்சரிவு அபாயத்தின் போதும் அறிவுறுத்தல்களை பின்பற்றாது பலர் இறந்தார்கள் என்ற விடயம் வருத்தத்திற்குரியதாகும்.
சில தினங்களுக்கு முன்பாக மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காணப்பட்டு ஒரு இடத்திற்கு சென்று அங்குள்ள வீடொன்றில் மணசரிவு ஏற்படும் என்பதால் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என்று அறிவுறுத்தினோம்.
இருப்பினும் அந்த வீட்டில் இருப்பவர்கள் சற்று பொறுங்கள் 3 ஆவது ரொட்டி தயாராகிக் கொண்டிருக்கின்றது சாப்பிட்டதன் பின்னர் உடனடியாக சென்றுவிடுவோம் என்றார்கள். இவ்வாறான தருணத்தில் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அவர்களின் வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அந்த வீட்டிலிருந்த மூவருமே பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக வழங்கப்படும் அறிவுறுத்தல்களை கருத்திக்கொண்டு செயற்பட வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். எவ்வாறாயினும் எதிர்வரும் நாட்களில் நாங்கள் மேற்படி விவகாரங்களை சட்ட ரீதியாக அணுகவுள்ளோம்.
அதற்கமையாக அநாவசிய குடியிருப் புக்கள் சகலவற்றையும் நீக்கிவிட்டு மேற்படி பகுதிகளில் வசித்தவர்களுக்கு மாற்று இடங்களை வழங்கவும் தீர்மானித்துள்ளோம் என்றார்.