மீண்டது மயிலிட்டி துறைமுகம்
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 27 வருடங்களின் பின்னர் மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனைச் சூழ்ந்திருக்கும் 54 ஏக்கர் கரையோர பகுதி நேற்று மீள்குடியேற்றத்துக்காக மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிலையில் 27 வருடங்கள் இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழ்ந்த நாம் எங்கள் சொந்த நிலத்தில் மீள்குடியேற நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலிட்டி மக்கள் உருக்கமாகக் கேட்டிருக்கின்றனர்.
1990 ஆம் ஆண்டு வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் யுத்தம் காரணமாக வெளியேறிய நிலையில் மயிலிட்டி மக்களும் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த 27 வருடங்களாக நலன்புரி நிலையங்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்தனர். இந்நிலையில் மயிலிட்டி துறைமுகம் உள்ளிட்ட மக்களுடைய குடியிருப்பு நிலங்களை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந் நிலையில், நேற்று காலை 9.30 மணிக்கு மயிலிட்டி துறைமுகம் உள்ளடங்கலான ஜே 251 கிராமசேவகர் பிரிவில் சுமார் 54 ஏக்கர் நிலம் மக்களிடம் உ த்தியோகபூர்வமாக மீள வழங்கப்பட்டிருக்கின்றது. மேற்படி நிகழ்வில் மயிலிட்டியைச் சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மக்கள் கூறுகையில்; 1990 ஆம் ஆண்டு நாங்கள் எங்கள் சொந்த நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்டோம் அதன் பின்னர் கடந்த 27 வருடங்களாக நாங்கள் நலன்புரி நிலையங்களிலும் உறவினர் மற்றும் ந ண்பர்கள் வீடுகளிலும் அவல வாழ்க்கை வாழ்ந்து வந்தோம். இப்போது இயற்கையாக கடல் உணவு வளம் கொழிக்கும் மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டிருக்கின்றது. இது எமக்கு பெரும் வரப்பிரசாதம்.
இதேபோல் எங்களுடைய குடியிருப்பு நிலங்களும் வீதிகளும் விடுவிக்கப்படவேண்டும் என நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம். மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டதனால் எங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த இயலும். அதற்கு எங்களுடைய சொந்த நிலங்கள் எமக்கு வேண்டும். நாங்கள் 27 வருடங்களாக அகதி வாழ்க்கை வாழ்ந்தது போதும் என மக்கள் உருக்கமாக கேட்டிருக்கின்றனர்.
மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற மேற்படி காணி கையளிப்பு நிகழ்வில், யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மேற்படி காணிகளை யாழ்.மாவட்ட செயலர் என்.வேதநாயகனிடம் உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.