வேலையுள்ள வேலையில்லா பட்டதாரி
வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம் பற்றி பல பதிவுகளை பதிவேற்றியிருந்திருக்கிறேன்.
பட்டம் கிடைத்த பின்னும் தங்கள் உத்தியோகத்துக்காக அரசு இயந்திரத்துடன் அடிகடி மோதும் கூட்டமாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் பல போராட்டங்களை முன்னெடுத்ததுண்டு.
அரச வேலைக்காக அணிதிரண்டதுண்டு.
இங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பார்த்து வேலை பெற்றோரும்,பொதுமகன்களும் பரிதாபமாகவோ அல்லது வெறுப்புடனோ அவர்களின் போராட்ட அரங்கை திரும்பி பார்த்துவிட்டு கடந்ததுண்டு. அவர்கள் கலைத்துறையினர் அதிகம், போட்டிப்பரீட்சையில் சித்தியடையவில்லை, உவயள் அரசாங்க வேலை மட்டும் தான் பாப்பினமாம் ஏன் தனியார் தொழிலோ சுய தொழிலோ பாக்கமாட்டினமோ? எண்டும் வேலையில்லா பட்டதாரிகள் கச்சேரிக்கு முன் போராட்டம் செய்தபோது ஒரு நாள் அவ்விடத்திலேயே சமைத்தும் உண்டார்கள்.அதை பலர் இவர்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பாட்டுக்கடை போட்டால் வருமானம் அதிகமாயிருக்கும் என்றும் வகையாடியெருந்தார்கள் எள்ளி நகையாடியிருந்தார்கள். எனினும் பல போராட்டங்களை பல விமர்சனங்களுக்கப்பால் பல நாட்களாக தெருப்போக்கன்களுக்கு மத்தியில் அவர்கள் முன்னெடுத்துத்தான் இருந்தார்கள்.
இன்று பலரின் வாய்ச்சப்பலுக்கு ஒரு பல்கலை நண்பனை உதாரணமாக முன்னிறுத்தப்போகிறேன்.
பல வேலையில்லா பட்டதாரிளுக்கு இவன் சாட்டையடியாகவும் விளங்கக்கூடும். பல விமர்சகர்களின் விமர்சனங்களை இவன் கிளிக்க கூடும்.
அவன் கலைப்பீட பட்டதாரி , பல்துறை திறமைகளை தன்னகத்தே தேக்கி வைத்திருக்கும் சிறு குளம் அவன்.
நாடகத்துறை, நடிப்புத்துறை, பாடல், அறிவிப்புத்துறை, தொகுப்பாளன், நகைச்சுவையாளனாக அவன் திறமைப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அவன் எனக்கு பல்கலையில் தான் பழக்கம் .உயர் கல்வியமைச்சினால் நடாத்தப்பட்ட “ஆற்றல் ” போட்டியில் அறிவிப்பு மற்றும் நடிப்புக்காக நாங்கள் யாழ் பல்கலையிலிருந்து பங்குபற்றியிருக்கிறோம் . அது மூன்றாம் வருடமாக எனக்கு இருக்கவேண்டும். அந்த காலம் பல நல் நண்பர்களையும் கலைத்துவ திறமையாளர்களையும் எனக்குள் ஏற்றுமதி செய்த பொற்க்காலம்.
அந்த காலத்தில் தான் இவன் எனக்கு பழக்கப்பட்ட ஒரு கலைத்துறை நண்பன். அவன் பெயர் கிரிஷாந்தன், கிரிஷாந் என எல்லோரும் அழைப்போம்.
எனது பதிவுக்கான முதன்மை உதாரணம் இவன் தான். பட்டதாரிகள் போராட்டம் செய்த போது அவனும் பங்கு பற்றியிருக்கிறான். அவன் அரசு தரும் வேலையை எதிர்பார்த்து தன் நாட்களை பெற்றோருக்கான சுமை நாட்களாக நகர்த்தவில்லை. அவன் தன் கலைப்பீடம் கற்றுத்தந்த கலைகளை பயன்படுத்தினான்.
போராட்டத்தோடும் அரச வேலைக்காகவும் காத்திருந்து தன் இளமையையும் திறமையையும் கரைத்துவிடாமல் பல வேலைகளை செய்து வருகிறான். பட்டதாரி என்பவன் இந்த வேலைகளை செய்யக்கூடாதவன் என்றல்ல.. பல்கலை சென்று பல்கலை பெற்று பட்டத்துடன் வெளியேறியவனுககு சுயமரியாதை அவசியமேயொழிய சுய வெக்கம் அவசியமில்லை. பட்டதாரிகள் தலைமைத்துவப்பண்புடன் எந்த தொழிலையும் ஏற்று நடாத்த முயல்பவனாக மிளிர்வதே சிறப்பு. இங்கு வெட்கம் வெட்கப்பட வேண்டும்
இந்த வகையில் தனக்கு அரசு வேலை தரும் வரை தனக்கான சுய வேலைகளை பல்துறைகளினூடாக தேடி உழைத்து குடும்பச்சுமை குறைத்து வருபவன் நண்பன் கிரிசாந்.
பள்ளிக்காலம் தொடங்கி பல சுமைகளை தடை தாண்ணடியவர்களாக நாம் எப்போதும் வெற்றிகண்டு சமூகத்தில் முதல் தட்டுக்களை அலங்கரிக்கப் புறப்பட்ட அக்கினிக்குஞ்சுகள் நாம். நாம் பிறந்தது படித்தது வளர்ந்தது எல்லாம் கொடிய யுத்தத்துக்குள். பேனைக்கும் கொப்பிக்கும் ஏங்கி நின்ற காலங்கள் கண்முன் விரிந்து கிடக்கின்றன. இப்போதைய ஆடம்பர யுகத்தில் நாம் கல்வி கற்கவில்லை என்பதை வலியுறுத்திக்கூற விரும்புகிறோம்.
பிறந்தது தொடக்கம் கல்வியை இலவசமாய் தந்து பட்டதாரியாய் உருவாக்கிவிட்டது எம் அரசாங்கம். அந்த பட்டத்தை வைத்து நாம் உயரபறக்க வேண்டும். அதில் இப்போது ஓட தொடங்கிவிட்டான் கிரிசாந். ஓடி வேகம் எடுத்து பறப்பான் அதில் ஐயமில்லை.
அவன் அனுமதி இல்லாமலே இந்த பதிவை பதிவதற்க்கு அவனிடம் மன்னிப்பை முதலில் கோருகிறேன்.
அரசே இனியாவது பட்டதாரிகளை வெளித்தள்ளும் போது அவர்களுக்கான வேலைகளை நிய்ணயம் செய்து அபிவிருததியில் அவர்களை உள்தள்ளு.
சிறந்த கல்வித்திட்டமிடல்களையும் கல்விச் சீர்திருத்தங்களையும் சிறந்த வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கு.
சமூகமே பட்டதாரிகள் அரசு வேலை தரவேண்டுமென்று வீதிக்கு வந்தது உண்மைதான் ஆனால் அவர்கள் வீதியிலே இல்லை அவர்கள் உழைத்து உங்களுக்கும் சேர்த்தே வரி கட்டுகிறார்கள்.
நன்றி Kirish Kirushanthth
கு.மதுசுதன்