28-10-2019 முதல்15-11-2020 வரை
மூலம், பூராடம், உத்ராடம், 1-ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)
துடிப்போடு செயலாற்றும் தன்மை கொண்ட தனுசு ராசி நேயர்களே!
உங்கள் ராசிநாதன் குரு என்பதால், சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. உங்களுக்கு பிடித்த நபர்கள் என்றால் எதையும் செய்யத் தயங்கமாட்டீர்கள். பிறருக்கு சேவை செய்வதே குணமாகக் கொண்டவர்கள் நீங்கள்.
தெய்வபக்தி மற்றும் தேசபக்தி ஆகிய இரண்டும் ஒருங்கே இணைந்தவர்கள் நீங்கள். குருவின் ஆதிக்கம் பெற்ற உங்கள் சொல்லுக்கு சமூகத்தில் தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் ஒருசில சமயங்களில் பேசிவிடுவீர்கள். பிறகு ஏன் பேசினோம் என்று வருத்தப்படுவீர்கள்.
இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை இந்தக் குருப்பெயர்ச்சி வழங்கப்போகி றது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
இப்பொழுது உங்கள் ராசியான தனுசு ராசிக்கே குரு பகவான் வந்திருக்கிறார். குரு பகவானின் ஆட்சி வீடாக தனுசு ராசி விளங்குகிறது. அதாவது அது அவருக்கு சொந்த வீடாகும். ஜென்மத்திற்கு குரு வந்ததும் “ஜென்ம ராமர் வனத்திலே” என்ற கவிதையை எல்லோரும் சொல்லுவர்.
ஆனால் உண்மையிலேயே உங்கள் சுயஜாதகம், கோட்சாரநிலை, குருவோடு இணைந்து செயல்படும் மற்ற கிரகங்களின் ஆதிக்கம் ஆகிவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் முடிவெடுக்க வேண்டும். எனவே இடமாற்றம், ஊர்மாற்றம் திடீரென வந்துவிடுமோ அல்லது தண்ணீர் இல்லாத காட்டிற்கு தன்னை மாற்றி விடுவார்களோ என்றெல்லாம் நீங்கள் நினைக்க வேண்டாம்.
திசாபுத்தி பலம் பெற்றவர்களுக்கு நல்ல மாற்றங்கள் வந்து சேரும். குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே உங்களுக்கு அனுகூலம் தரும் யோக ஸ்தலங்களுக்குச் சென்று குருபகவானையும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளையும் செய்து வந்தால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும்.
இடையூறுகள் தானாகவே விலகும். கொள்கைப் பிடிப்போடு நீங்கள் செயல்படவும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றவும், செல்வ வளத்தில் சிறிதும் குறைவில்லாமல் இருக்கவும், செய்யும் பணிகளில் தொய்வு அகலவும் தெய்வ வழிபாடுகள் வழிகாட்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களது உடல்நலம், தோற்றப் பொலிவு, கௌரவம், மகிழ்ச்சி, செயல்திறன் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள உதவும் இடம் முதல் பாவமாகும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை குரு பகவான் 4-ம் பாவத்திற்கும் அதிபதியாவார்.
அது தாய், தாய்வழி உறவு, வீடு, வித்தை, கல்வி, விருதுகள், பயணங்கள், வாகன யோகம், பூமியால் ஏற்படும் யோகம், சேமிப்பு, சந்தோஷம், நம்பிக்கைகள் பற்றி அறிந்து கொள்ள உதவும் இடமாகும். இப்படிப்பட்ட இரண்டு இடங்களுக்கும் அதிபதியான குருபகவான், தனது சொந்த வீடான ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான்.
இதன் விளைவாக உடல் ஆரோக்கியம் சீராகி உற்சாகப்படுத்தும். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். நல்ல சம்பவங்களை நடத்திக் காட்டுவது குரு என்பதால், அவர் பலம்பெறும் நேரமெல்லாம் பல நல்ல வாய்ப்புகள் வந்து அலைமோதும். நிலையான வருமானம் இல்லாதவர்களுக்கு அது கிடைக்கும். நினைத்தது நிறைவேறி நிம்மதி பிறக்கும்.
இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்த்தபடியே பயணங்களும், சுபவிரயங்களும் ஏற்படும். இதுவரை விரய ஸ்தானத்தில் சஞ்சரித்த குருவால், எண்ணற்ற விரயங்களும், இடர்பாடுகளும் தோன்றியிருக்கலாம். பொதுவாழ்வில் விரக்தி நிலை உருவாகி வீண்பழிகள் ஏற்பட்டிருக்கலாம்.
இனி அந்த நிலை மாறும். என்னயிருந்தாலும் ஜென்மச்சனி நன்மைகள் செய்ய, குருவிற்குரிய பீடங்களுக்குச் சென்று வழிபடுவதோடு முறையாக விரதங்களையும் மேற்கொள்ளுங்கள்.
தனுசு குருவின் சஞ்சாரம்!
உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், சுக ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் குரு பகவான் 28.10.2019 முதல் 15.11.2020 வரை உங்கள் ராசியிலேயே சஞ்சரித்தாலும் இடையில் 27.3.2020 முதல் 7.7.2020 வரை மகர ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.
13.5.2020 முதல் 9.9.2020 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார்.
முதலில் மகர ராசியிலும், பிறகு தனுசு ராசியிலும் வக்ரம் பெறுகிறார். குருபகவானுக்கு மகரம் நீச்ச வீடாகும். உங்களைப் பொறுத்தவரை கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம்பெறுவது யோகம்தான். எனவே அக்காலத்தில் அதன் பார்வை பலத்தால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். குறிப்பாகப் பிள்ளைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.
தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். புதிய வாகனம் வாங்கிப் பயணிக்கும் வாய்ப்புக் கூட உருவாகலாம்.
ஏற்கனவே சனிபகவான் தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். அவரோடு கேதுவும் இணைந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் பரிவர்த்தனை யோகம் நடைபெறுவதால் பல வழிகளிலும் உங்களுக்கு நன்மைகளை வழங்கப் போகிறது. எனவே மகர குருவின் சஞ்சார காலம் மறக்க முடியாத சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும்.
குருவின் பார்வை பலன்!
இப்பொழுது பெயர்ச்சியாகும் குரு 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். எனவே அந்த இடங்கள் புனிதமடைகின்றன. 5-ம் இடத்தை குரு பார்க்கின்ற பொழுது மிகச்சிறப்பான பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். மக்கள் போற்றும் அளவிற்கு செல்வாக்கும், மகத்தான பதவி வாய்ப்புகளும் கிடைக்கலாம். குறிப்பாக முன்னோர் சொத்துக்களில் முறையான பலன்கள் கிடைக்கும். பொன்னும், பொருளும் போற்றுகின்ற செல்வாக்கும் இன்னும் பெருகும்.
பிள்ளைகள் வழியில் ஏற்பாடு செய்த திருமண முயற்சி கைகூடும். அவர்கள் தகுந்த வேலை கிடைத்து வரும் வருமானத்தை உங்களுக்கு உதிரி வருமானமாகக் கொண்டு வந்து சேர்ப்பர். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுகிறது. ஜென்ம கேதுவின் ஆதிக்கமும் நடைபெறுகிறது. எனவே அதன் கடுமைகளை குருபகவான் கொஞ்சம் குறைப்பார்.
ஆயினும் ஒரு சில காரியங்களை சோம்பலின் காரணமாக செய்ய இயலாமல் போகலாம். பணிபுரியும் இடத்தில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. எனவே பொறுமையோடும், நிதானத்தோடும் செயல்படுங்கள்.
குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் குடும்ப ஒற்றுமை பலப்படும். கல்யாணப் பேச்சுக்கள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். இதுவரை தடைபட்டு வந்த திருமண பேச்சுக்கள் இப்போது முடிவாகும். சப்தம ஸ்தானாதிபதியாக குரு விளங்குவதால் பொருத்தம் பார்த்து வரனைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் கைகூடும். புதிய மனை வாங்கும் யோகம் உண்டு.
குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பொன்-பொருள் சேர்க்கை உண்டு. புதிய பாதை புலப்படும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி கைகூடலாம். வாகனம் வாங்க முயற்சி செய்வீர்கள்.
மகர குருவின் சஞ்சாரம்
27.3.2020 முதல் 7.7.2020 வரை மகர ராசியில் குரு சஞ்சரிக்கிறார். இதற்கிடையில் 13.5.2020 முதல் குருபகவான் மகர ராசிக்குள் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். குரு நீச்சம் பெற்றிருந்தாலும் வலிமை இழந்திருந்தாலும் அவர் பார்வைக்குப் பலன் உண்டு. உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் குருபகவான் நீச்சம் பெறுவது யோகம்தான். இருப்பினும் ஆரோக்கியத்தில் அதிக தொல்லைகள் ஏற்படலாம். எதிர்காலம் பற்றிய கவலை மனதை வாட்டும்.
மகர குருவின் வக்ர காலத்தில் அதன் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால் புதிய வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைக்கும். ஏதேனும் ஒருசில மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது கடினம்.
செல்வ வளம்தரும் சிறப்பு வழிபாடு!
இந்த குருப்பெயர்ச்சியால் நன்மை கிடைக்க அறுபத்துமூவர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். யோக பலம் பெற்ற நாளில் முருகப்பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுங்கள்.
குருவின் வக்ர காலம்
13.5.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசியிலும், மகர ராசியிலுமாக குரு வக்ரம் பெறுகிறார். இந்த காலகட்டங்கள் உங்கள் ராசிக்கு ஒரு பொற்காலமாக அமையப் போகிறது. தளர்ச்சிகள் அனைத்தும் அகலும். உங்களுக்கு தக்க சமயத்தில் நண்பர்கள் கை கொடுத்து உதவி செய்வார்கள்.
வாங்கிய கடனை கொடுத்தும், கொடுத்த கடனை வசூலித்தும் மகிழ்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருள்களை வாங்கி குவிப்பீர்கள். புதிய உத்தியோகத்திற்கு, அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைக்கும்.
பெண்களுக்கான சிறப்பு பலன்கள்
இந்த குருப்பெயர்ச்சி ஜென்ம குரு மற்றும் ஜென்மச் சனியின் ஆதிக்கத்தோடு இருப்பதால், குரு சேர்க்கையின் பலனாக மனக்கலக்கம் அகலும். உறவினர்களுக்கு மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடு மறைந்து, ஒற்றுமை பலப்படும். பெற்றோர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். யாருக்காவது அவசரமாக வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு அதன்பிறகு அமைதி இழக்கும் சூழ்நிலை உருவாகலாம்.
ஜென்ம கேதுவின் ஆதிக்கமும் இருப்பதால் அடிக்கடி புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை அனுகூலம் தரும் ஸ்தலங்களில் சென்று செய்வதன் மூலம் சந்தோஷத்தை வரவழைத்துக்கொள்ளலாம். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். சுபகாரியம் கை கூடும்.