கண் அடிக்கடி துடிப்பதை வைத்து ஒருசில மூடநம்பிக்கைகள் மக்கள் மத்தியில் உள்ளது.
அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கு வலது கண்கள் துடித்தால் அது தீமை என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப் போகிறது, அதுவே பெண்களுக்கு நல்லது நடக்கும் என்று கூறுவார்கள்.
ஆனால் உண்மையில் கண்கள் துடிப்பதற்கு, நமது உடலில் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.
அதுமட்டுமல்லாமல், கண்கள் துடிப்பதற்கு ம்யோகிமியா (myokymia) என்று பெயர். இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் பல காரணங்கள் உள்ளது.
கண்கள் துடிப்பதற்கான காரணங்கள் என்ன?
- மன அழுத்தம் அதிகம் இருந்தால், தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே நாம் சரியாக தூக்கம் இல்லாமல் இருப்பதால், கண்கள் அடிக்கடி துடிக்கும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
- நாம் கண்கள் மூலம் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்களை கூர்ந்து பார்ப்பது, இது போன்று நம் கண்களுக்கு அதிகப்படியான சிரம்மத்தைக் கொடுப்பதால், கண்களுக்கு அழுத்தம் அதிகமாகி அடிக்கடி துடிக்கிறது.
- காப்ஃபைன் உள்ள பொருட்களான காபி, டீ போன்றவற்றை நாம் தினமும் அதிகமாக அருந்தினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். எனவே இத்தகைய பொருட்களை அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது.
- ஆல்கஹால் அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கண்கள் அடிக்கடி துடிக்கும். எனவே ஆல்கஹாலை அதிகம் பருகாமல், மருந்து போன்று எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
- அன்றாடம் நாம் நமது உடம்பிற்கு போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால், மன அழுத்தம், சோர்வு போன்ற பிரச்சனைகள் மூலம் கண்களானது வறட்சியடைந்து, கண் துடிப்புகள் ஏற்படுகின்றது.
- நமது உடலில் ஊட்டச்சத்து மற்றும் மக்னீசியம் குறைபாடுகள் அதிகமாக இருந்தால், கண்களில் உள்ள தசைகள் வலுவிழந்து அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும்.
- கண்களில் அலர்ஜிகள் ஏற்படும் போது, கண்களில் அரிப்பு, வீக்கம், கண்கள் சிவப்பாகி கண்ணீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது, கண்களை தேய்த்தால், அதிலிருந்து வெளிவரும் ஹிஸ்டமைன் கண் திசுக்களில் நுழைந்து, கண்களை துடிக்க வைக்கின்றது.