சனிப்பெயர்ச்சி 2020 நடக்கும் போது எந்தெந்த ராசிக்கு என்ன சனி வருகிறது. அவர்கள் செய்ய வேண்டிய எளிய சனி பரிகாரங்கள் என்ன என்பதை பார்ப்போம்…
ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் பெயர்ச்சி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதில் மிக உற்றுநோக்கும், அதன் பலன்களை அறிந்துகொள்ள கூடியதாக சனிப்பெயர்ச்சி உள்ளது.
மற்ற கிரகங்களை விட மிக மெதுவாக ஒவ்வொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக் கூடிய கிரகம் சனி கிரகம். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்வார்.
அந்த வகையில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24ஆம் தேதி நடக்க உள்ளது.
ஏழரை சனி யாருக்கு?
சனிபகவான் ஒரு ராசியில் சஞ்சரிக்கின்றார் என்றால், அவர் அமரக் கூடிய ராசிக்கும், அதோடு அந்த ராசியின் முன் மற்றும் பின் உள்ள ராசிக்கு ஏழரை சனி என்று பெயர்.
2020 சனிப்பெயர்ச்சியில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் மகர ராசிக்கு ஜென்ம சனியும் (இரண்டாம் நிலை), அதன் முன் உள்ள தனுசு ராசிக்கு பாத சனியும் (மூன்றாம் நிலை), மகர ராசிக்கு பின் உள்ள கும்ப ராசிக்கு முதல் நிலை சனி 2 1/2 ஆண்டு சனி தொடங்கும். இதற்கு விரய சனி என்று பெயர். கும்ப ராசிக்கு புதிதாக ஏழரை சனி தொடங்க உள்ளது.
பாத சனி – தனுசு
ஜென்ம சனி – மகரம்
விரய சனி – கும்பம்
சனி பாதிப்பிற்கு செய்ய வேண்டிய பரிகாரம்:
சனி பெயர்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டும் ராசியை சேர்ந்த நபர்கள் முதலில் செய்ய வேண்டியது, அவர்கள் செய்த தவறை உணர்ந்து வருந்தி, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பது நல்லது.
அதோடு சனி பகவானிடம் இனி இது போன்ற பாவ செயலை செய்ய மாட்டேன் என கூறி தனக்கு நல்லருள் புரிவாயாக என வேண்டிக்கொள்ள வேண்டும். சனிக்கிழமையன்று சனிபகவானை வணங்கி எள் தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். அதோடு ஏழரை சனி காலத்தில் நியாயமாக நடந்துகொள்பவர்கள் அந்தளவுக்கு அதிகமாக பாதிக்கப்படுவதில்லை.
சனி பாதிப்புகளிலிருந்து விடுபட நம் முன்னோர்கள் சில எளிய பரிகார முறைகளை கொடுத்துள்ளனர்.
சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது மிக அவசியம். குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் அல்லது எண்ணெய் தேத்து குளிக்க இயலாது என நினைப்பவர்கள்.
சனிக்கிழமைகளில் குளித்துவிட்டு காலை 6-7 மணி வரை வரும் சனி ஹோரை நேரத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் எடுத்து கிழக்கு திசையில் நின்று அதன் ஒரு பகுதியை எடுத்து தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். மீதி எண்ணெய்யை உடலின் பிறபாகங்களில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
காக்கைக்கு சாதம்
எள் மற்றும் நல்லெண்ணெய் கலந்த சாதத்தை காக்கைக்கு வைத்து வணங்குவது நல்லது. காக்கைக்கு சாதம் வைப்பது நம் முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு, சனி பகவானின் வாகனம் என்பதால் அவரின் அருளும் கிடைக்கும்.
அதே போல் முடியும் போதெல்லாம் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை மற்றும் பழங்களை அளிக்கலாம். ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்தல், அவர்களின் சில அடிப்படை தேவைகளை நிறைவேற்றுதல் நன்று.
உதவுதல்
பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கும், மாற்று திறனாளிகளுக்கும், ஆதரவற்ற இல்லங்களுக்கும் உங்களால் முடிந்த அளவு புதிய உடைகள் கொடுப்பதும், அவர்களுக்கு உணவளிப்பதும் நன்று.
எந்த ஒரு பரிகாரத்தை விட நம் வீட்டில் இருக்கும் பெரியோர், மூத்தவர்களை மதித்து நடப்பது மிக முக்கிய பரிகாரம்.
அடிக்கடி சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுதலும், நவகிரகங்களை வழிபட்டு எள் திரி தீபத்தை ஏற்றி வழிபடுதல் நல்லது.
தாந்திரீகம்:
எட்டு இரும்பு வளையங்களை வாங்கி, சனிக்கிழமையில் வரும் சனி ஹோரை நேரங்களான காலை 6 – 7, மதியம் 1 – 2, அல்லது இரவு 8 – 9 ஆகிய நேரங்களில், ஓடு நீரில் அதாவது ஆறு அல்லது கடலில் தெற்கு முகமாக நின்று அந்த வளையங்களை விட வேண்டும். இந்த முறை தாந்திரீக ரீதியான பரிகாரமாக கூறப்படுகின்றது..
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!
காயத்திரி மந்திரம்
ஓம் காகத்வஜாய வித்மஹே’
கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்
நல்லவர்களுக்கு நல்லவன்
சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை செய்து அனுமனுக்கு சாற்றி வழிபாடு செய்வதும், கணபதி வழிபாடும் சனி கெடுபலனை குறைக்கும். சனிக்கிழமைகளில் லட்டுகளை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
சனி என்பவர் ஈசனால் நீதியை நிலைநாட்ட நியமிக்கப்பட்ட நீதி அரசன். அவர் மனிதனின் நற்செயலையும், பாவ செயல்களுக்கு ஏற்ப அவர்கள் ராசிக்கு அஷ்டமாத்து சனி, கண்டக சனி, அஷ்டம சனி, விரய சனி, ஜென்ம சனி, பாத சனியாக வரும் போது அதற்கேற்ற பலன்களை கொடுப்பார்.
நாம் நேர்மையாக, பாவ செயலை செய்யாமல் நல் வழியில் வாழ்ந்தாலே அவர் எப்படிப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தாலும், நமக்கு நன்மையை தருவார். இதனால் தான் சனியைப் போல் தருவாரும் இல்லை, சனியைப் போல் கெடுப்பாரும் இல்லை என சொல்கின்றனர்.