சென்னையை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கலில், தனியார் பள்ளி ஒன்றில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து, எல்கேஜி மாணவர் ஒருவர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூர் அருகே அய்யப்பன்தாங்கல், ஆர்.ஆர். நகர் பகுதியில், மாசி மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு இன்று மதியம், பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறையில், சிறுநீர் கழிக்க எல்.கே.ஜி மாணவர்கள் சென்றனர். அப்போது அங்கு அடைப்புகளை நீக்குவதற்காக திறந்த கழிவுநீர் தொட்டியை, ஊழியர்கள் அப்படியே வைத்துவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், கிருதீஸ்வரன் என்ற எல்.கே.ஜி. மாணவர், கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார்.
இதைக் கண்டு பதறிய சக மாணவர்கள் சப்தம் போட்டதில், ஓடி வந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள், கிருதீஸ்வரனை மீட்டு, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போரூர் போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கழிப்பறை அருகிலேயே கழிவுநீர் தொட்டி உள்ள நிலையில், அதனை மூடி வைக்காமலும் எச்சரிக்கை பலகை வைக்காமலும் இருந்ததே, மாணவரின் உயிரிழப்புக்கு காரணம், என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.