மதுரை சிக்கந்தர் சாவடியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை புறநகர் பகுதியான சிக்கந்தர்சாவடியில், மந்தையம்மன் கோவில் முதல் தெருவில் உள்ள வீடு ஒன்றில் ரவுடிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்யும் நோக்கில் நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது பதுங்கியிருந்த ரவுடிகளுக்கும் காவல்துறைக்கு திடீர் மோதல் வெடித்தது.
முதலில் ரவுடிகள் போலீசாரை தாக்கத்தொடங்கினர். இந்த தாக்குதலில் காவலர் பாலமுருகனின் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான குழு, கதவை உடைத்து உள்ளே சென்று ரவுடிகளை பிடிக்க முயன்றனர். அப்போது உள்ளே சென்ற போலீசாரை சரமாரியாக ரவுடிகள் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக சுட்டதில், இரண்டு ரவுடிகளும் உயிரிழந்தனர் என காவல்துறை தரப்பில் கூறினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் முத்து இருளாண்டி என்கிற மந்திரி மற்றும் கார்த்திக் என்கிற சகுனி கார்த்திக் எனத் தெரியவந்தது. உயிரிழந்த இரண்டுபேரின் உடலை பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
ரவுடி சகுனி கார்த்திக்:
ரவுடி முத்துஇருளாண்டி:
என்கவுண்டரில் உயிரிழந்த இன்னோரு ரவுடி முத்து இருளாண்டி, மதுரை மாவட்டம் வரிச்சியூர் அருகில் உள்ள பொட்டப்பனையூரைச் சேர்ந்தவர். இவர் மீதும் மதுரை, செல்லூர், ராமநாதபுரம், சென்னையில் கொலை, கொலை முயற்சி, கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தது உள்ளிட்ட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சிக்கந்தர்சாவடியில் நடந்த என்கவுண்டர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், சினிமாவில்வரும் சண்டைக்காட்சிகளைப்போல் இருந்ததாக கூறுகின்றனர். என்கவுண்டர் நடந்த வீட்டில் முத்துஇருளாண்டி கடந்த சில வருடங்களாக வசித்துவந்ததாகவும், அப்பகுதியில் பலருக்கு தொல்லையாக இருளாண்டி வலம் வந்ததாகவும் சொல்கின்றனர் அப்பகுதியினர்.
5 வருடங்களுக்குப்பிறகு தமிழகத்தில் நடந்துள்ள இந்த என்கவுண்டர் சம்பவத்தை மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த மோதல் சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கோரிக்கை முன்வைத்துள்ளது.