1-1-2020 முதல் 31-12-2020 வரை மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள் : க,கா,கி,கு,ஞ,ச,கே,கோ உள்ளவர்களுக்கு)
உங்கள் ராசிநாதன் புதனோடு சூரியன் இணைந்திருப்பதால், புத – ஆதித்ய யோகத்தோடு இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. ஆண்டு பிறக்கும் பொழுதே, 5 கிரகங்கள் உங்கள் ராசியைப் பார்க்கின்றன.
அவற்றில் ஒன்று குரு பகவான். அவர் நவக்கிரகத்தில் ‘சுபகிரகம்’ என்று அழைக்கப்படுபவர். அவரது நேரடிப் பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு பிறக்கும் இந்த புத்தாண்டு, பலவித யோகங்களை வழங்கப் போகிறது.
ஜென்மத்தில் ராகு சஞ்சரிக்கிறார். ஆண்டின் தொடக்கத்திலேயே சப்தம ஸ்தானம் பலம்பெற்றிருக்கிறது. 7-ம் இடத்தில் சூரியன், புதன், வியாழன், சனி, கேது ஆகிய 5 கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இதன் பயனாக திருமணம் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும்.
தொழில் வெற்றி நடைபோடும். எதிரிகள் விலகுவர். எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். புகழ்மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் லட்சியங்கள் நிறைவேறும்.
சப்தம குருவின் சஞ்சாரம்
ஆண்டின் தொடக்கத்தில் குரு, தன்னுடைய சொந்த வீடான தனுசு ராசியில் வீற்றிருக்கிறார். எனவே அவர் உங்களுக்கு கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கப்போகிறார். இல்லத்தில் ஒவ்வொரு நாளும் இனிய சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.
பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். துணையாக இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.
உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குருபகவான். எனவே குடும்பம் மற்றும் தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளைக் கைகூட வைப்பது குருவின் கையில்தான் உள்ளது.
அப்படிப்பட்ட குருபகவான், தன் சொந்த வீட்டில் சஞ்சரித்து அதன்பார்வை உங்கள் ராசியில் பதிவதால் இல்லறம் நல்லறமாக மாறும். சமூகத்தில் மதிப்பும், மரியாதை உயரும்.
வி.ஐ.பி.க்களின் பழக்கம், உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கும். நாடு மாற்றங்களும், வீடு மாற்றங்களும் நடக்கும். தொழிலில் மாற்றங்கள் செய்ய நினைப்பீர்கள்.
வருடத் தொடக்கத்தில் 6-ல் செவ்வாய், 8-ல் சுக்ரன், 9-ல் சந்திர பகவான் இருப்பதால், வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வாகனம் வாங்கும் முயற்சி முதல் வயல், தோட்டம், வீடு போன்றவை வாங்கும் யோகம் வரை வந்து சேரும்.
6-க்கு அதிபதியான செவ்வாய் 6-ம் இடத்திலும், 12-ம் இடத்திற்கு அதிபதியான சுக்ரன் 8-ம் இடத்திலும் சஞ்சரித்து விபரீத ராஜயோகத்தை உருவாக்குவதால், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.
புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். காரியத்தை தொடங்கிவிட்டால் பணம் வந்து சேர்ந்துவிடும். ஆரோக்கியத் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள், மீண்டும் வந்து சேர்வார்கள்.
கேது பலத்தால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல் – வாங்கல்களில் போராடி வராத தொகை, எதிர்பாராத விதத்தில் வந்து சேரலாம்.
என்ன இருந்தாலும் ஜென்மத்தில் ராகுவும், 7-ல் கேதுவும் இருப்பதால் நாக தோஷத்தின் பின்னணியில் இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு யோகம் தரும் நாளில் அனுகூலம் தரும் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து, சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்துகொள்ளுங்கள்.
மகர குருவின் சஞ்சாரம்
8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசிக்குள்ளேயே குரு வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் குருவின் சொந்த வீடான தனுசு ராசிக்குள்ளேயே குரு வக்ரமும், சனி வக்ரமும் நிகழ்கிறது. குருவோடு இருப்பதால், சனியின் கடுமை கொஞ்சம் குறையும். உறவினர் பகை அகலும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
15.11.2020-ல் மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிச் செல்கிறார். மகரம் என்பது குருவிற்கு நீச்ச வீடாகும். 12 ஆண்டிற்கு ஒருமுறை குருபகவான் இந்த இடத்திற்கு வந்து சஞ்சரிப்பார்.
உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற குரு, 8-ம் இடத்தில் நீச்சம் பெறும்பொழுது மிகுந்த யோகத்தை வழங்குவார்.
மறக்கமுடியாத சம்பவங்கள் நடைபெறும் நேரம் இது. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்பதற்கான அறிகுறி தென்படும்.
குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிவதால் தாய்வழி ஆதரவு உண்டு. திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே ராகு பகவான் இருக்கிறார். சப்தம ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரிக்கிறார். 1.9.2020 அன்று இந்த இரண்டு கிரகங்களும் பெயர்ச்சியாகின்றன. உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் ராகுவும், 6-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள்.
ஜென்மத்தில் உள்ள ராகுவால் பயணங்கள் அதிகரிக்கும். பண விரயங்கள் ஏற்பட்டாலும், அவை சுப விரயமாக மாறும். இடமாற்றம், வீடு மாற்றம், ஊர்மாற்றம் போன்றவை எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிநிரந்தரம் பற்றிய தகவல்களும் கிடைக்கலாம். ஏற்று மதி, இறக்குமதி வணிகம் செய்வோர் லாபம் பெறுவார்கள்.
6-ல் உள்ள கேதுவால் எதிரிகளின் பலம் அதிகரிக்கும். எனவே எந்த முயற்சியையும் இயன்றவரை மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் இருப்பது நல்லது. நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்பு, முடிவடையாமல் உங்களிடமே திரும்பி வரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விநாயகப் பெருமான் வழிபாடும், பெண்தெய்வ வழிபாடும் தடைகளை அகற்றும்.
சனிப்பெயர்ச்சிக் காலம்
உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் கண்டகச் சனியாக இருந்து வரும் சனிபகவான், 29.4.2020 முதல் 14.9.2020 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகிறார். சனி உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர்.
8-ம் இடத்திற்கு அதிபதி வக்ரமாவது ஒரு வழிக்கு நன்மைதான். ஆனால் 9-ம் இடத்திற்கு அதிபதியாகச் சனி விளங்குவதால் தந்தை வழியில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும்.
சகோதரர்களை அரவணைத்துச் செல்லுங்கள். கோவில் திருப்பணிகளை முறையாகச் செய்வீர்கள். வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். தொழில் வளர்ச்சி சீராகும்.
13.2.2020 முதல் 22.3.2020 வரை தனுசு ராசிக்குள் செவ்வாயும், சனியும் சேர்க்கை பெறுகின்றன. 3.5.2020 முதல் 17.6.2020 வரை தனுசு ராசியில் உள்ள சனிபகவான், கும்பத்தில் உள்ள செவ்வாயைப் பார்க்கிறார்.
இதுபோன்ற காலங்களில் பிறருக்குப் பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. மனக் கவலை அதிகரிக்கும். சேமிப்பு கரையும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் மாறும்.
26.12.2020 அன்று உத்ராடம் 2-ம் பாதத்தில் மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியாகிறார். அதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் கண்டகச் சனியாகச் சஞ்சரிக்கும் சனி பகவான், 8-ம் இடத்திற்குச் சென்று, அஷ்டமத்துச் சனியாக மாறுகிறார்
. 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான் 8-ம் இடத்திற்கு வருவதால் ‘விபரீத ராஜ யோகம்’ அடிப்படையில் நல்ல பலன்களைக் கொடுப்பார்.
என்றாலும் அவர் 9-ம் இடத்திற்கும் அதிபதியாவதால் ஒருசில சமயங்களில் மனக்கஷ்டங்களும், ஒருசில சமயங்களில் பணக்கஷ்டங்களும் வரலாம். தசாபுத்தி பலம்பெற்றவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாது.
செல்வ வளம் தரும் வழிபாடு
ஏகாதசி விரதமிருந்து பெருமாள்- லட்சுமிதேவியை வழிபட்டு வந் தால், பெருமைக்குரிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும்.
குருவின் வக்ர காலமும், பரிவர்த்தனை யோகமும்
27.3.2020-ல் குரு வக்ர இயக்கத்தில், மகர ராசிக்குச் செல்கிறார். அங்கு 7.7.2020 வரை வக்ர இயக்கத்திலேயே இருக்கிறார். இக்காலத்தில் குருவும் சனியும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள்.
அதாவது, குருவின் வீட்டில் சனியும், சனியின் வீட்டில் குருவும் என்று, ஒருவர் வீட்டில் மற்றொருவர் மாறி அமர்ந்திருப்பதற்கு ‘பரிவர்த்தனை யோகம்’ என்று பெயர். இது யோகங்களிலேயே மிகவும் சிறப்பான யோகமாகும்.
இதன்மூலம் சென்ற ஆண்டில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய, புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. இடமாற்றம், வீடு மாற்றம் அமையும் வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லவும் யோகம் இருக்கிறது.
பெண்களுக்கான பலன்கள்
ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசி மீது குருவின் பார்வை பதிவதால், ஆரோக்கியம் சீராகும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். கணவன் – மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும்.
அடகு வைத்த நகைகளை மீட்டு அழகு பார்க்கும் யோகம் உண்டு. பிறந்த வீட்டுப் பெருமைகளைப் புகுந்த வீட்டிலும், புகுந்த வீட்டுக் குறைபாடுகளை பிறந்த வீட்டிலும் சொல்லாமல் இருப்பது நல்லது. சகோதரர்களின் பகையை சம்பாதிப்பீர்கள். தாய்வழி ஆதரவு ஓரளவு உண்டு.
ராகு – கேது பெயர்ச்சிக்குப் பிறகு உடல்நலம் சீராகும். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு எதிர்பார்த்த மாற்றங்களும், நீண்ட தூரப் பயணங்களும் உருவாகலாம். ராகு – கேதுக்களுக்குரிய பரிகாரங்களையும், சனிக்குரிய பரிகாரங்களையும் முறையாகச் செய்து வழிபடுவது நல்லது.
பணிபுரியும் பெண்களுக்கு வருடத்தின் முற்பாதியை விட, பிற்பாதி நன்மை தரும். குறிப்பாக உத்தியோக முன்னேற்றம், ஊதிய உயர்வு மற்றும் எதிர்பார்த்த சலுகைகள் செப்ரெம்பர் மாதத்திற்கு மேல் கிடைக்கலாம்.