யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வழங்கிய பணிப்புரைக்கு அமைய கட்டுவன்- மயிலிட்டி வீதியில் இராணுவ, விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டுவன்-மயிலிட்டி இடையேயான சுமார் 400 மீற்றர் (5 ஏக்கர்) வீதியை விடுவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் கடிதம் மூலம் கோரியுள்ளார்.
கட்டுவன்-மயிலிட்டி இடையேயான சுமார் 400 மீற்றர் (5 ஏக்கர்) வீதியை திறப்பதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மயிலிட்டிச் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தி (ஜே-240) வரையான மயிலிட்டி வடக்கு (ஜே246 கிராம அலுவலர் பிரிவு) பகுதி விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டனர். எனினும் கட்டுவன் மயிலிட்டி வீதியின் ஒரு பகுதி பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீதி யாழ்ப்பாணம் விமான நிலையம் மற்றும் மயிலிட்டித் துறைமுகத்துக்கான பிரதான வீதியாகக் காணப்படுகிறது.
அதனால் பெரும்பாலான மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் பிரதான வீதிக்குப் பதிலாக தனியார் காணி ஊடான மாற்றுப்பாதையால் மக்கள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கட்டுவன் சந்தி தொடக்கம் மயிலிட்டிச் சந்திவரையான வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இத்தடையால் 400 மீற்றர் வீதி காப்பெட் வீதியாக புனரமைக்கமுடியாத நிலையில் இழுபறியாக உள்ளது . கட்டுவன் மயிலிட்டி வீதியில் உள்ள கிராமக்கோட்டு சந்திக்கு எதிர்புறமாக தெற்குபக்கமாக இடையில் 400 மீற்றர் வீதி விமானப்படையினர் அமைத்துள்ள கம்பி வேலிக்குள்உள்ளது. இதனால் இவ்வீதியால் போகமுடியாது திரும்பவேண்டியுள்ளது. வேலிக்கு அருகில் உள்ள தனியார் காணிஊடாக இதுவரை காலமும் சென்று வந்த நிலையில் வீதி புனரமைப்பு இடம்பெற்றதால் தனியார் காணி உரிமையாளர் குறுக்காக வீதியை கொங்கிறீட் தூண்கொண்டு வேலி அமைத்ததால் முழுமையாக தடையாகிவிட்டது.