கோட்டாபயவின் போக்கால் தீர்வுக்கான வாய்ப்பு குறைவு -சுமந்திரன் எம் பி.

அரசியல் தீர்வு தொடர்பில் முழுமையான பார்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு வெகுவாகக் குறைவடைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், தனியார் வானொலியில் இன்று காலை ஒலிபரப்பாகிய ‘வி அரசியல் விவாத நிகழ்வில் பங்கேற்றபோது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டவுடனேயே அவருக்கு ஒருசில விடயங்களை நினைவுபடுத்தியிருக்கின்றோம். ஜனாதிபதிக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. இதனால், சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட வேண்டும் என்று நாம் பகிரங்கமாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்த போதிலும், இதுவரையில் எந்தவிதமான பதிலையும் அவர் வழங்கவில்லை.

சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தெட்டத்தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதனால் சஜித் பிரேமதாஸவை நாம் ஆதரித்திருந்தோம். நாம் ஆதரவு வழங்கியதால்தான் சஜித் பிரேமதாஸவுக்கு வெற்றி வாய்ப்புக் கிடைக்கவில்லை என்ற கருத்தை நாம் ஏற்கவேமாட்டோம்” – என்றார்.