மருத்துவ குணம் கொண்ட மஞ்சளில் இப்படியொரு ஆபத்தா?.. அதிர்ச்சியளிக்கும் உண்மை..

மஞ்சளுக்கென நமது இந்திய வரலாற்றிலும், சமையலிலும் சிறப்பு இடம் உள்ளது. இந்திய சமையலில் எந்தவொரு உணவும் மஞ்சள் இன்றி முழுமையடையாது.

இது உணவின் நிறத்திற்கு மட்டுமின்றி அதன் வாசனைக்கும், சுவைக்கும் பொறுப்பாக அமைகிறது. வெப்ப குணம் கொண்ட இது சிறிது கசப்பு சுவை உடையது. இது தனித்துவமான சுவை சாதாரண உணவை கூட சிறப்பான உணவாக மாற்றுகிறது.

பல நூற்றாண்டுகளாக மஞ்சள் பல நோய்களையும், காயங்களையும் குணப்படுத்தும் மருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பொழுது கூட நமது வீடுகளில் காயங்கள் ஏற்பட்டால் முதலில் பூசுவது மஞ்சளைத்தான். ஆயுர்வேதம் மட்டுமின்றி இன்றைய மருத்துவத்திலும் மஞ்சள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

ஆன்டி ஆக்சிடண்ட்கள்
மஞ்சள் அதிக ஆன்டி ஆக்சிடண்ட்கள் மற்றும் எதிர் அழற்சி பண்புகள் இருக்கும் பொருளாகும். இவை நமது உடலை பல நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

இதில் குர்குமின் என்னும் பொருள் உள்ளது, இது பெருங்குடல் அழற்சி, முடக்குவாதம், கீல்வாதம், சர்க்கரை நோய் போன்றவற்றில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. மேலும் இது சருமம் மற்றும் செரிமானம் தொடர்பான குறைபாடுகளை குணப்படுத்துகிறது.

மஞ்சளில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உங்கள் முகப்பருவை வறட்சியடைய வைத்து சருமத்தில் தொற்றுநோய்களைத் தடுக்கும்.

ஆபத்துகள்
பல அற்புத மருத்துவ பலன்களை கொண்டிருந்தாலும் அதிகமாக மஞ்சளை எடுத்து கொள்வது பல ஆபத்துக்களை உங்களுக்கு ஏற்படுத்தலாம்.

குறிப்பிட்ட அளவிற்கு மேல் மஞ்சளை சேர்த்து கொள்வது இது உங்கள் உடலில் பல எதிர்விளைவுகளை தூண்டும். இதனால் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே எவ்வளவு மஞ்சளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும்?
ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி ஒரு நாளைக்கு ஒரு சிட்டிகை மஞ்சள் எடுத்து கொள்வது நல்லது என்று கூறப்படுகிறது.

இந்த அளவு அதிகரிக்கும் போது வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே மிதமான அளவில் மட்டுமே இதனை பயன்படுத்த வேண்டும்.

ஒருநாளைக்கு ஒரு ஸ்பூன் மஞ்சள் உபயோகிப்பது உங்களுக்கு பக்கவிளைவுகள் இல்லாமல் இதன் பலன்களை வழங்கும்.

முடிந்தளவு இயற்கையாக தயாரிக்கப்பட்ட மஞ்சளை பயன்படுத்தவும், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மஞ்சளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

அதிக மஞ்சளால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

வயிறு கோளாறு
நீங்கள் அடிக்கடி உங்கள் வயிற்றில் கோளாறு ஏற்படுவதை உணர்ந்தால் நீங்கள் எடுத்துக்கொள்ளும் மஞ்சளின் அளவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

அதிகப்படியான மஞ்சள் உங்களுக்கு இரைப்பை சிக்கலுக்கு வழிவகுக்கும். இதனால் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

சரும அலர்ஜி மற்றும் பருக்கள்
மஞ்சள் இயற்கையாகவே வெப்ப குணம் கொண்டது, இது பருக்களை குணப்படுத்தும் என்று நிரூபிக்கபட்டிருந்தாலும் இது சரும ஒவ்வாமை, தடிப்பு மற்றும் பருக்கள் போன்றவற்றை ஏற்படுத்தும்.

சிறுநீரக கல்
மஞ்சளில் அதிகளவு ஆக்சலேட் உள்ளது. இது கால்சியத்துடன் வினைபுரிந்து கரையாத கால்சியம் ஆக்சலேட்டை உருவாக்கி சிறுநீரக கற்களை ஏற்படுத்துகிறது.

குறைந்த இரத்த சர்க்கரை
நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் தினசரி குறிப்பிட்ட அளவில் மஞ்சளை எடுத்து கொள்வது உங்கள் இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

ஆனால் அளவு அதிகமாக எடுத்து கொண்டால் இதனால் உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்புள்ளது.