கலாச்சாரத்தின் அடிப்படையில் திருமணத்திற்குப் பின் ஆணும் பெண்ணும் பகிர்ந்துகொள்ளும் முதல் பகிர்வு பாலும் வாழைப்பழமும்தான். அதேபோல் இன்றளவும் பாலும் பழமும் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமளிக்கக் கூடியது என்றுதான் பழக்கப்படுத்தப்பட்டது.
ஜூஸ் கடைகளிலும் பனானா ஷேக், பனானா ஸ்மூதிக்கு எப்போதும் கிராக்கி உண்டு. இந்நிலையில் வாழைப்பழத்தையும், பாலையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடுவது வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பை உண்டாக்கும் என புதிய ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.
ஃபிட்னெஸ் பிரியர்களும் அரோக்கியம் அடிப்படையில் பாலையும், வாழைப்பழத்தையும் தான் சாப்பிடுவார்கள். மேலும் தசைகள் வலுப்பெறவும், ஊட்டச்சத்து அதிகரிக்கவும் மருத்துவர்களும் பாலும், பழமும் தினமும் உட்கொள்ள சொல்வார்கள். இவை இரண்டிலும் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.
ஆனாலும் இந்த ஆய்வுத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவை இரண்டையும் ஒன்றாகச் சாப்பிட்டால் ஜீரண பாதையின் செயல்பாட்டை குறைக்குமாம். மேலும் ஆயுர்வேத புத்தகங்களிலும் இவை இரண்டையும் ஒன்றாகச் சாப்பிடுவது தவறானப் பொருத்தம் என்கிறது.
அதாவது வாழைப்பழமும், பாலும் குளிர்ச்சியான உணவு. இவை இரண்டையும் ஒன்றாகக் கலக்கும் போது அவை ஜீரண செயல்பாட்டையே குளறுபடியாக்குகின்றன. குறிப்பாக சைனஸ் பிரச்சினை, சுவாசப் பிரச்சினை கொண்டோருக்கு இந்த கலவை உணவை பரிந்துரைப்பது மிக மிகத் தவறு என்கின்றனர்.
அதேபோல் கர்ப்பிணிகளும் பாலும், வாழைப்பழத்தையும் ஜூஸாக அருந்தக் கூடாது. வேண்டுமென்றால் இரண்டையும் இடைவேளை விட்டு உண்பது தாய்க்கும், கருவுக்கும் நல்லது.
இதுகுறித்து இண்டர்னேஷ்னல் கருத்தரித்தல் மையத்தில் மகப்பேறு மருத்துவராக இருக்கும் ரிதா பக்ஷி டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் “வாழைப்பழம், பால் இரண்டையும் ஒன்றாகச் சாப்பிடும் போது தேவையற்ற நச்சு அமிலங்களை வெளியிடுகின்றன.
இதனால் அது அலர்ஜியாக மாறி தொற்று, வயிற்றுக் கோளாறு, வாந்தி போன்றவை உண்டாகும். குறிப்பாக கர்ப்பிணிகள் இவ்வாறு உண்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இந்த கலவையானது சளி, இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு, அலர்ஜி போன்ற உபாதைகளையும் உண்டாக்கும்“ என்று கூறியுள்ளார்.