பொதுவாக கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு கர்ப்பம் தரித்து, குழந்தை பெற்றெடுக்கும் இந்த இடைபட்ட ஒன்பது மாதங்களுக்குள் பெண்கள் ஏராளமான பிரச்னைகளைக் கடந்து வருகிறார்கள்.
அதில் பொதுவாக எல்லா பெண்களும் அனுபவிக்கிற ஒரு விஷயம் வாந்தி. இதனை நமது பெரியவர்கள் மசக்கை என்று கூறுவார்கள்.
கர்ப்ப காலத்தில் வரும் வாந்தி என்பது மற்ற வாந்தியைப் போல சாப்பிடும் உணவினால் வருவதல்ல. இது முழுக்க முழுக்க இயற்கையாக உண்டாகிற ஒரு விஷயம்.
அந்தவகையில் இந்த பாதிப்பில் இருந்து விடுபட சில உணவுகள் உதவி புரிகின்றது. தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
- ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் துருவிய இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து, அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து தேநீராகப் பருகலாம். இதனையும் காலை வேளையில் பருகலாம். இஞ்சி சேர்க்கப்பட்ட சிற்றுண்டிகளை அவ்வப்போது எடுத்துக் கொள்வதால் இந்த பாதிப்புகள் குறையலாம்.
- ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்து, அதில் சிறிதளவு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து தினமும் காலை வேளையில் பருகவும். இது வாந்தியைத் தடுக்கும் அல்லது வாந்தி எடுத்த பின் இந்த நீரைப் பருகலாம்.
- இரவு உறங்கச் செலவதற்கு முன் ஒரு ஸ்பூன் வெல்லப்பாகு உட்கொள்ளவும். மற்றும் பழுப்பு அரிசி, அவகேடோ, வாழைப்பழம், மீன், நட்ஸ் போன்றவற்றில் வைட்டமின் பி6 அதிகமாக உள்ளதால் அதனால் இவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.
- ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு சோம்பு சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து,பின்பு அதனை வடிகட்டி இந்த நீரைப் பருகலாம். இந்த நீரில் சிறிதளவு தேன் சேர்த்து காலை வேளையில் பருகுவதால் குமட்டல் உணர்வு கட்டுப்படும்.
- காலை நேரவில் உணவில் யோகர்ட் சேர்த்துக் கொள்வது நல்லது. வெறும் யோகர்ட் மட்டுமல்லாது வெள்ளரிக்காய், பழங்கள் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிறைந்த உணர்வும் கிடைக்கும். வாந்தி வருவதும் தடுக்கப்படும்.
- கிவி, வாழைப்பழம், பிளூபெர்ரி போன்ற பழங்களைக் கொண்டு ஒரு ஸ்மூத்தி தயாரித்து உட்கொள்வதால் குமட்டல் மற்றும் வாந்தி கட்டுப்படும். இவற்றுடன் தேன் சேர்த்துப் பருகலாம்.
- ஒரு ஸ்பூன் கிராம்பை ஒரு க்ளாஸ் தண்ணீரில் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பின்பு அந்த நீரை வடிகட்டி, தேன் சேர்த்துப் பருகலாம். காலையில் எழுந்தவுடன் கொஞ்சம் கூடுதலாக வாந்தி இருக்கும் சமயங்களில் கிராம்பை லேசாக பொடித்து வைத்துக் கொண்டு சில துளிகள் தேன் விட்டு குழைத்துச் சாப்பிடுங்கள். காலை நேரத்தில் வரும் வாந்தியைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
- பீன்ஸ், கேரட், பீட்ரூட், ப்ரோக்கோலி, காலி பிளவர் , முருங்கைக்காய் ஆகியவற்றுடன் இஞ்சி, பூண்டு, வெந்தயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை சிறிதளவு சேர்த்து வேகவைத்து சூப் செய்து அருந்தலாம்.