குரு பார்வை தான் யோகம், தோஷ நிவர்த்தி போன்ற ஏற்றமான பலன்களைத் தரும். ஆனால், தனித்த குரு எந்த இடத்தில் இருந்தாலும் அந்த உள்ள வீட்டின் ஸ்தானத்தை கெடுத்து விடும். அதை வைத்துத்தான் குரு நின்ற இடம் பாழ் என்று சொன்னார்கள்.
நவ கிரகங்களுமே சிலருக்கு நல்லது செய்யும் சிலருக்கு தீமை செய்யும். கேது முதல் புதன் வரை நடைபெறும் தசைகளில் ஒருவருக்கு நல்லதை செய்கின்ற தசை மற்றொருவருக்கு தீமை செய்யும்.
இது அந்தந்த ஜாதக அமைப்பின்படி உள்ள அம்சமாகும். அதே போல ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அம்சம், ஒவ்வொரு காரகத்துவம், ஆதிக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சில சுப கிரகங்களாகவும் சில பாவ கிரகங்களாகவும் உள்ளன.
மேஷம், கடகம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய லக்னம் மற்றும் ராசிகளில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் மிகப்பெரிய ராஜயோகத்தை வழங்குவார். ரிஷப ராசி லக்னகாரர்களுக்கு நல்லதும், கெட்டதுமாக பலன் வழங்குவார்.
மிதுனம், கன்னி ஆகிய 2 ராசிகளுக்கும் குரு பகவான் முக்கிய கிரகமாக இருந்தாலும், பாதகாதிபதியாகவும் வருவதால் நல்லதையும், கெட்டதையும் கலந்து வழங்குபவராகத் திகழ்கிறார்.
இந்த குரு பெயர்ச்சியால் குரு பலம், குரு பார்வை, குரு யோகம் உங்களுக்கு எப்படி உள்ளது என்று பார்க்கலாம். எந்த லக்னகாரர்களுக்கு குரு தசை காலத்தில் யோகம் செய்வார் யாருக்கு பாதகம் செய்வார் என பார்க்கலாம்.
16 ஆண்டுகள் ராஜயோகம்
ஒருவருக்கு குரு தசை 16 ஆண்டுகள் நடக்கும். ராகு தசை முடிந்து குரு திசை தொடங்கும். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய 3 நட்சத்திரக்காரர்களுக்கு பிறந்த உடனேயே குரு தசை ஆரம்பமாகி விடும். அதுபோன்ற குழந்தைகளுக்கு சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை என சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும். .
ஒருவருக்கு 2வது தசையாக குரு தசை வந்தால் சிறப்பாக இருக்கும். இதேபோல் 3, 4, 5வது தசையாக வரும் போதும் நற்பலன்கள் அதிகம் கிடைக்கும். ஆனால் 6வது தசையாக குரு தசை வந்தால் சில பாதிப்புகளை உருவாக்கும். பொருள் இழப்பு, அரசாங்கத்தால் சொத்து பறிபோதல், வழக்குகளில் தோல்வியை ஏற்படக் கூடும்.
குரு தரும் யோகம்
ஜனன ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால் குரு தசை காலத்தில் சொந்த வீடு வாங்கலாம். திருமணம் கைகூடும், சிலருக்கு புத்திரபாக்கியம் அமையும். பெயர் புகழ் கிடைக்கும். பணவரவு அபரிமிதாக இருக்கும். ஜனன ஜாதகத்தில் குரு பலமிழந்தோ பகை, நீசம் பெற்றோ இருந்தாலோ, பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றாலோ குரு தசை காலத்தில் கடுமையான பண நெருக்கடி ஏற்படும். கடன் தொல்லை அதிகரிக்கும்.
மேஷம் விருச்சிகம்
குரு சில லக்னகாரர்களுக்கு யோகத்தை தருவார். மேஷ லக்னகாரர்களுக்கு குரு பாக்யாதிபதி, விரைய ஸ்தானதிபதி. மேஷம் ராசி, லக்னகாரர்களுக்கு குரு தசை நன்மை செய்யும். பொருளாதார உயர்வை தருவார். காரணம் அவர் யோகாதிபதி.
குரு தசை காலத்தில் பதவி உயர்வை தருவார். செவ்வாயின் ஆதிக்கத்துக்குட்பட்ட விருச்சிக லக்னங்களுக்கு குரு இரண்டு மற்றும் ஐந்துக்குடையவராகி யோக நிலை பெற்று தனது தசையில் மிகச் சிறந்த யோகங்களை அளிப்பார். நல்லதே செய்வார்.
ரிஷபம் துலாம்
ரிஷபம் துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். இவருக்கும் குருவிற்கு ஆகாவே ஆகாது. காரணம் சுக்கிரன் அசுர குரு, குரு தேவ குரு. ரிஷபம், துலாம் லக்னக்காரர்களுக்கு குரு பகவான் பெரிதாக நன்மை செய்வதில்லை. அவர், துலாம் லக்னத்துக்கு 6ஆம் வீட்டிலும், ரிஷப லக்னத்துக்கு 8ஆம் வீட்டில் அமர்ந்து ஆட்சி பலம் பெற்று சுபகிரகங்களின் தொடர்பு ஏற்பட்டால் விபரீத ராஜயோகத்தை தருவார்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகத்தை வழங்கி செல்வம் செழிக்கச் செய்வார். அதே போல துலாம் லக்னத்துக்கு 11ஆம் இடத்தில் குரு இருப்பது நல்லது. லாபத்தையும் வருமானத்தையும் தருவார்.
மிதுனம் கன்னி
மிதுனம் லக்னகாரர்களுக்கு குரு கேந்திராதிபதி தோஷம் செய்வார். மிதுனம் மற்றும் கன்னி லக்னக்காரர்களுக்கும் குரு கேந்திராதிபதி தோஷத்தை ஏற்படுத்துவார். 7 , 4 மற்றும் 10 ஆம் வீட்டில் குரு பகவான் அமரும்போது யோகம் தருவார். அதிலும் குறிப்பாக, 7 ஆம் வீட்டில் சுப கிரகங்களின் சேர்க்கை பார்வையில் அமரும் போது நல்ல வாழ்க்கைத்துணை, புகழ் சேர்க்கும் பிள்ளைகளை அமைத்துத் தருவார்.
கடகம் சிம்மம்
சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கடகத்தில் குரு உச்சமடைகிறார். கடக லக்னகாரர்களுக்கு குரு ருண ரோக சத்ரு ஸ்தானாதிபதி, அதே போல பாக்யாதிபதி. கடகத்திற்கு யோகங்களையும் நிறைய அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தருவார் குரு. சிம்ம லக்னத்துக்குப் பூர்வ புண்ணியஸ்தானாதிபதியாக அமைந்து யோகம் தருவார் குரு. சிம்மம் குரு லக்னத்தில் நின்றால் அரசாளும் யோகம்.
ஐந்தில் குரு நின்றால் புண்ணியம். அந்த புண்ணியங்கள் பலனாக உங்களுக்குக் கிடைக்கும். குரு தான் நின்ற இடத்தில் இருந்து ஐந்து ஒன்பதாம் இடங்களைப் பார்த்தால் அம்சமான குழந்தைகள் பிறக்கும். பேரும் புகழும் கிடைக்கும்.
மகரம் கும்பம்
மகரம், கும்ப லக்னத்துக்கு குரு யோகாதிபதியாக இல்லாவிட்டாலும், மகர லக்னத்துக்கு 7ஆம் வீட்டில் அமர்ந்து குரு லக்னத்தைப் பார்க்கும்போது, குரு தசையில் ஏராளமான நன்மைகளைச் செய்து ஜாதகரைப் புகழடையச் செய்வார். கும்ப லக்னக்காரர்களுக்கு 11ஆம் வீடான தனுசில் குரு பகவான் அமரும் போது தொழிலில் புகழடையச் செய்து பல வகையிலும் லாபம் ஈட்டித் தருவார். தனுசு ராசிக்கு வரப்போகும் லாப குரு பல நன்மைகளை செய்யப்போகிறார்.
தனுசு மீனம்
தனுசு, மீனம் ராசிக்கு குரு அதிபதி என்றாலும் கேந்திரங்களில் அமர்ந்தால் கேந்திராதிபத்ய தோஷம் வரும். அதே நேரத்தில் தனுசு லக்ன காரர்களுக்கு குரு கடகத்தில் உச்சம் பெற்றால் நன்மை, அது எட்டாவது வீடான மறைவு ஸ்தானமாகவே இருந்தாலும் நல்லது நடக்கும். மீனம் ராசிக்காரர்களுக்கு உச்சம் பெற்றாலும் அதிகம் நன்மை இல்லை அதே நேரம் விருச்சிகமான ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து மீனத்தை பார்ப்பதன் மூலம் வலிமை கிடைக்கும்.
குரு பரிகார தலங்கள்
ஜாதகத்தில் குரு வலிமை இழந்திருக்கும் நிலையில் நவ கிரகத் தலங்களில் குருவிற்கு முதன்மைத் தலமாக போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் சென்று அங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.
தென் திட்டை ராஜ குருவையும், பாடியில் குரு தலத்திற்கும் சென்று வணங்கலாம். திருச்செந்தூர் குருபரிகார தலம். அங்கு சென்று திருச்செந்தில் ஆண்டவனையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்கலாம். ஜென்ம நட்சத்திர நாளில் பரிகாரம் செய்வதுதான் நன்மையை தரும்.
வட ஆலங்குடி என போற்றப்படும் தலம் போரூரில் அமைந்துள்ளது. அருள்மிகு ராமநாதீஸ்வரப் பெருமான் திருக்கோவிலுக்கு வியாழன் தோறும் சென்று வழிபடலாம். ஒரு வியாழக்கிழமை குருவின் ஹோரையில் குருவின் வாகனமான யானைக்கு, விருப்பமான உணவு கொடுக்கலாம்.