சீரடி சாய்பாபா எங்கு பிறந்தார்? அவர் பெற்றோர் யார்? என்ற விஷயத்தில் சில கதைகள் உலா வருகின்றன. ஆனால் அந்த கதைகளிலும் உண்மை இல்லை என்பதே பலரது கருத்து.
பாத்ரி கிராமத்தில் இருந்து தன்னைத் தேடி வந்தவர்களிடம் பாபா மனம் விட்டு பேசினார். அந்த கிராமத்தில் உள்ள சிலர் பற்றி கேட்டு அவர் நலம் விசாரித்தார். இதை அடிப்படையாக வைத்தே சாய்பாபா பாத்ரி கிராமத்தில் பிறந்தார் என்ற குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் பாபாவிடம் மிக நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்த பாக்கியத்துக்குரியவர்கள் அதை மறுக்கிறார்கள். பல தடவை அவர்கள் பாபாவிடம், “உங்கள் பெற்றோர் யார்? உங்கள் சொந்த ஊர் எது?” என்று கேட்டுள்ளனர். அதற்கு பாபா புன்னகை செய்வாரே தவிர கடைசி வரை பதில் சொன்னதே இல்லை.
பாபாவின் அவதார நிகழ்வு என்பது ஈசனின் அடி, முடியை காண இயலாதது போன்றதே. இந்த பிரபஞ்சம் முழுவதும் பாபா நிறைந்துள்ளார்.
பொதுவாக கர்ப்பத்தில் உதிக்காதவர்களை “அயோனி ஜென்மம்“ எடுத்தவர் என்பார்கள். சீரடி சாய்பாபாவையும் அயோனி ஜென்மம் எடுத்தவர் என்கிறார்கள். எனவே கண் கண்ட தெய்வமான பாபா தம் அருளால் தானே வெளிப்படுத்திய அற்புதங்கள் மட்டுமே அதிர்ஷ்டவசமாக குறிப்புகளாக பதிவாகியுள்ளது.
1854-ம் ஆண்டு சீரடிக்கு சாய்பாபா வந்த போது அவருக்கு 16 வயது ஆகி இருந்தது. அதாவது சரியாக 162 ஆண்டுகளுக்கு முன்பு பாபா சீரடியில் காலடி எடுத்து வைத்தார். அந்த காலக்கட்டத்தில் சீரடி எப்படி இருந்தது தெரியுமா?
அப்போது அது ஒரு குக்கிராமம். சுமார் 150 வீடுகளே இருந்தன. 99 சதவீத வீடுகள் மண்ணால் கட்டப்பட்டவை. அந்த ஊரைச் சுற்றி காடுகளும், விவசாய நிலங்களும் இருந்தன.
பாம்புக்கு பஞ்சம் இல்லாத அந்த ஊரில் உள்ள அனைவரும் விவசாய வேலையே செய்து வந்தனர். தினமும் வயலுக்கு சென்று பாடுபட்டால்தான் வயிறாற சாப்பிட முடியும் என்ற பரிதாப நிலையில் வாழ்ந்தவர்கள்.
அந்த ஊரில் கண்டோபா கோவில் ஒன்று இருக்கிறது. கண்டோபா என்பது சிவனுக்கு உரிய பெயர்களில் ஒன்றாகும். சீரடி ஊர் மக்களுக்கு கண்டோபா ஆலயம் குல தெய்வமாகும். செவ்வாய்க் கிழமை தோறும் அந்த ஆலயத்தில் பூஜை நடைபெறும். அந்த ஆலயம் தவிர, ஆஞ்சநேயர் கோவில் ஒன்றும் உள்ளது. ஆஞ்சநேயர் கோவில் அருகில் மிகவும் பழமையான மசூதி ஒன்றும் இருந்தது.
அந்த மசூதிக்கு பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தடியில்தான் பாபா முதன் முதலாக சென்று அமர்ந்தார். 16 வயதே ஆன போதும் அவர் யோகி போல காணப்பட்டார். இவ்வுலக பொருட்கள் எதன் மீதும் துளியும் ஆசை இல்லை என்பதை அவர் முகம் உணர்த்தியது.
இளைஞனுக்குரிய சுறுசுறுப்பும் அழகும் பாலபாபாவிடம் காணப்பட்டது. முகத்தில் தெய்வீகக்களை வீசியது. அதோடு சாந்தமான ஒளியும் வீசியது. மாயை அவரை நெருங்க முடியவில்லை. முக்தி அவர் காலடியில் பணி செய்தது.
மொத்தத்தில் அந்த இளைஞனை முதன் முதலாக பார்த்த அனைவருக்கும் கைக்கூப்பி வணங்கத் தோன்றியது. அவன் அழகில் சீரடி ஊர் மக்கள் மெய் மறந்தனர்.
பாலபாபா யாரிடமும் பேசவில்லை. எதுவும் கேட்கவுமில்லை. தனித்து உட்கார்ந்திருந்த அவர் பிரம்ம ஞானமாக திகழ்ந்தார்.
அவரை வேப்ப மரத்தடியில் முதன் முதலாக தரிசனம் செய்த மாபெரும் பிறவிப் புண்ணியம், சீரடியைச் சேர்ந்த நானாசோப்தார் என்பவரின் தாயார் கங்காபாய்க்கு கிடைத்தது. அவர்தான் முதன் முதலில் இளம் பாபாவை வேப்ப மரத்தடியில் கண்டார்.
பச்சிலை பறிப்பதற்காக மசூதி அருகேயுள்ள வயல் வெளிக்கு நடந்து கொண்டிருந்த கங்காபாயின் கண்ணில்தான் இளம்பாபா தென்பட்டார்.
மரத்தடியில் ஆசனத்தில் இருக்கும் இளைஞன் யார் என்று யோசித்தார். அவனுக்கு சீரடி இல்லை என்பது மட்டும் அவருக்கு உறுதியாக தெரிந்தது.
கங்காபாய் மெல்ல நடந்து வேப்ப மரத்தடிக்குச் சென்றார். அவருக்கு மனதுக்குள் ஒரு ஓரத்தில் பயமாகவும் இருந்தது. என்றாலும் அருகில் சென்று ஆச்சரியத்துடன் பாபாவை பார்த்தப்படி நின்றார்.
அப்போது இளம்பாபா மெல்ல தன் கண்ணைத் திறந்து பார்த்தார். கங்காபாயும் பார்த்தாள். மறுவினாடி அவள் தன் உடல் சிலிர்ப்பதை உணர்ந்தாள்.
இளைஞனின் பார்வை பட்டதுமே தன் உடம்புக்குள் மின் அதிர்வு ஏற்பட்டதை அறிந்தாள். மறு வினாடி அவளையும் அறியாமல், அவள் கைகள் கூப்பியபடி தாமாக இளம் பாபாவை வணங்கத் தொடங்கின.
அந்த அனுபவத்தை அவர் பரசவத்தோடு கூறியுள்ளார்.
“வேப்ப மரத்தடியில் இருந்த சிறுவன் மிகவும் அழகாக காணப்பட்டான். அவன் ஏதோ ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தான். கடும் மழை பெய்த போதும், கொடூர வெயில் அடித்தபோதும், அந்த சிறுவன் வேப்ப மரத்தடியில் இருந்து அகலவில்லை. பகலில் தியானத்தில் இருந்ததால் யாருடனும் பழக வில்லை. இரவில் பாம்புகள் நடமாடும் அந்த இடத்தில், குளிரையும் பொருட்படுத்தாமல் பயப்படாமல் இருந்தான்.
அவனை சற்று நேரம் சும்மா உற்று நோக்கினாலே அவன் மீது அன்பு கொள்ளும் அளவுக்கு, அவனது உருவ அம்சம் இருந்தது. அவனது செயல்கள், அவன் பரமாத்மா என்பதை உணர்த்தின.
இவ்வாறு நானா சோப்தாரின் தாயார் கூறினார்.
இளம் பாபா ஒருநாள், இரண்டு நாள் மட்டுமல்ல… வாரக்கணக்கில் அந்த வேப்ப மரத்தடியிலேயே இருந்தார். இதனால் சீரடி மக்கள் அனைவரும் அவரைப் பற்றியே பேசத் தொடங்கினார்கள். பக்கத்து ஊர்களுக்கும் இளம்பாபா பற்றிய தகவல் பரவியது. “யாரோ ஒரு இளைஞன் வேப்ப மரத்தடியில் பேசாமல் உட்கார்ந்து இருக்கிறான். அவன் மகானாக இருக்க வேண்டும்” என்ற செய்தி காட்டுத் தீ போல பரவியது.
மக்கள் அலை, அலையாக வந்து இளம்பாபாவை பார்த்துச் சென்றனர். ஆனால் ஒருவருக்கும் இளம்பாபா அருகில் சென்று, “தம்பி நீ யார்? எந்த ஊரில் இருந்து வந்து இருக்கிறாய்? ஏன் இந்த மரத்தடியில் பேசாமல் இருக்கிறாய்?” என்று கேட்க தைரியம் வரவில்லை. இளம்பாபாவை முஸ்லிம் என்று சீரடி மக்களில் ஒரு சாராரும், இல்லை அவர் இந்து மகான் என்று மற்றொரு சாராரும் நினைத்தனர். பலரும் பாபாவை பார்த்து பயந்தனர். பாபாவை உடனடியாக அவர்கள் நெருங்காமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது. இப்படியே மேலும் சில வாரங்கள் சென்று விட்டது.
இந்த நிலையில்தான்கண்டோபா கோவில் பூசாரி மகல்சாபதி என்பவருக்கும் இளம்பாபா பற்றி தகவல்கள் தெரியவந்தன. வேப்ப மரத்தடியில் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் இளைஞனை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள ஆசைப்பட்டார். மகல் சாபதி கண்டேபாபா ஆலயத்தின் தலைமை பூசாரியாக இருந்தவர். ஒழுக்கமும், நேர்மையும் அவரிடம் நிறைந்திருந்தன. இதனால் சீரடி ஊர் மக்கள் அவர் மீது மட்டற்ற மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். இத்தகைய சிறப்புடைய அவர், ஒரு நாள் கண்டோபா கோவிலில் பூஜையை முடித்து விட்டு நேரே வேப்ப மரத்தடிக்கு வந்தார்.
அன்று இளம்பாபா தலையில் பச்சை நிறத்துணியை சுற்றி கட்டி இருந்தார். அதன் மீது காவி நிற துணியை குல்லா போல போட்டிருந்தார்.
அன்று அவர் அணிந்திருந்த அங்கியும் பச்சை நிறமாக இருந்தது. கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இந்த தோற்றத்தில் இளம் பாபாவை பார்த்ததும் மகல் சாபதிக்கு சற்று தயக்கம் ஏற்பட்டது. “சிவாலயத்தில் பூஜை செய்யும் நாம் இஸ்லாமியர் போல இருக்கும் இளைஞனை பார்த்து பேசுவது சரியானது தானா?” என்று நினைத்தார்.
அவர் அப்படி நினைத்த மறு வினாடி இளம்பாபா கண் திறந்து பார்த்தார். அந்த பார்வையில் பாசமும், நேசமும் மின்னலாக மகல்சாபதியை நோக்கிப் பாய்ந்தது. மகல்சாபதி தன்னையும் அறியாமல் ஆச்சரியத்தில் மூழ்கினார்.
பாபாவோ சிரித்துக் கொண்டே “அல்லா மாலிக்” என்று கூறியபடி மகல்சாபதியை தன் அருகில் உட்கார சொன்னார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த மகல்சாபதி, மந்திர சக்திக்கு கட்டுப்பட்டவர் போல பாபா அருகில் போய் உட்கார்ந்தார். சிறிது நேரத்துக்கு முன்பிருந்த எந்த சலசலப்பும் அவர் மனதில் இல்லை. பாபாவிடம் அடுத்தடுத்து கேள்விகள் கேட்கத் தொடங்கினார். அந்த கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாத இளம்பாபா, நீ நல்லவன், உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் “ஜென்ம தொடர்பால் என்னை நீ சந்தித்துள்ளாய்” என்று மட்டும் கூறினார். வேறு எதுவும் சொல்லவில்லை.
பாபா பற்றிய எந்த தகவலையும் அன்று மகல்சாபதியால் தெரிந்து கொள்ள முடியவில்லை. என்றாலும் அவர் மனதில் எந்த ஏமாற்றமும் ஏற்படவில்லை.
அதற்கு மாறாக மகல்சாபதி மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது. அவர் உள்ளம் இனம் புரியாத இன்பத்தால் பரவசமானது. இத்தகைய பரவசத்தை இதற்கு முன்பு தாம் அனுபவித்ததே இல்லை என்று மகல்சாபதி உணர்ந்தார். முதல் சந்திப்பிலேயே இளம் பாபாவிடம் மகல்சாபதி தன் மனதை முழுமையாக பறி கொடுத்து விட்டார்.
இளம் பாபாவின் தெய்வீக முகமும், சாந்தமான பேச்சும் மகல்சாபதியை மிகவும் கவர்ந்தன. இளம் பாபாவை விட்டு பிரிய அவர் மனம் சம்மதிக்கவில்லை. பாபா அருகிலேயே அவர் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு அதிசயம் நடந்தது.