பாபாவை மனதார முழுமையாக நம்பினால் நல்லதே நடக்கும்…

நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதில் 100 சதவீதம் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் காட்டினால்தான் உண்மையான வெற்றியைப் பெற முடியும். தொழிலாக இருந்தாலும் சரி, கல்வியாக இருந்தாலும் சரி…. தினசரி வாழ்க்கை பணியாக இருந்தாலும் சரி…. 100 சதவீதம் ஈடுபாடு இல்லாவிட்டால் அது முழுமை பெறாது.

எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் நம் மனதை கரைத்து விட வேண்டும். இரண்டற கலந்து விட வேண்டும். ஆனால் 99 சதவீதம் பேர் அப்படி இருப்பதில்லை. கடவுள் வழிபாட்டை கூட ஒரு கடமை போலத்தான் செய்கிறார்கள். எதையும் கடமைக்கு செய்தால், அது கடைசி வரை அப்படியேதான் இருக்கும். எந்த பலனும் கிடைக்காது.

சீரடி சாய்பாபாவை நாடி வரும் பக்தர்களிலும் பலர் அப்படி இருக்கிறார்கள். பாபாவிடம் மனதை கொடுக்காமல் பலனை மட்டும் எதிர்பார்த்தால் என்ன அர்த்தம்?

பாபாவிடம் நாம் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும். நம்பிக்கையோடு சரண் அடையுங்கள். பிறகு பாருங்கள்…. பாபா உங்களை தனி வழியில் அழைத்துச் செல்வதை அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.

நிறைய பெண் பக்தைகள் பாபாவை அப்பா என்றும் தாத்தா என்றும் தம் குடும்பத்தில் ஒருவர் போல அழைத்து மகிழ்கிறார்கள். சில பக்தர்கள் பாபாவுடன் மனம் விட்டு பேசுவதுண்டு. அப்படி பாபாவிடம் நம்மையே நாம் இழக்க வேண்டும்.

பாபாவிடம் நாம் எந்த அளவுக்கு உள்ளத்தைப் பறிகொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அவர் வாழ்ந்த விதமும், அவர் சொல்லிய மணிமொழிகளும் நம் உள்ளத்தில் ஆழமாகப் பதியும். அப்படி பதிய, பதிய நாம் பாபா காட்டிய வழியில் புடம் போட்ட தங்கமாக மாறி விடுவோம்.

எந்த ஒரு ஜாதி, மதத்துக்குள்ளும் அடைத்து விட முடியாத அதிஅற்புதமான, அவதாரப் புரு‌ஷரான சாய்பாபா, தன் வாழ்க்கை மூலமாகவும், வாக்குமூலமாகவும், நாம் எப்படி வாழ வேண்டும், எப்படி முக்தி பெற வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

அவர் மக்களை கூட்டி பிரசங்கம் செய்ததில்லை. தம் உபதேசங்களை கேட்டே தீர வேண்டும் என்று யாரையும் வற்புறுத்தியதில்லை.

ஆனால் அவர் சொன்ன சிறு, சிறு வார்த்தைகள் வைர வரிகளாக மாறி இன்று நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. நீ என்னை நோக்கினால், நான் உன்னை நோக்குவேன். நீ என்னை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால், நான் உன்னை நோக்கி 10 அடி எடுத்து வைப்பேன்.

நீ எங்கிருந்தாலும் நான் உன் பக்கத்திலேயே இருப்பேன். என் பக்தனுக்கு எது தேவையோ அதை நான் முன்கூட்டியே கொடுப்பேன். உள்ளத்தோடும், ஆன்மாவோடும் என்னோடு தம்மை இணைத்துக் கொண்ட பக்தர்களுக்கு மன அமைதி உண்டாகும்.

சாய்…. சாய் என்று என் பெயரை எப்போதும் உச்சரிப்பவர்களின் பாவம் தொலையும்.

நானே அல்லா, நானே சிவன்.

சூரிய-சந்திரர்கள் உதித்து மறைவது போல, பிறப்பும்-இறப்பும் உலகில் தவிர்க்க முடியாதது. பணக்காரர்கள் பணிவுடன் இருக்க வேண்டும். தர்ம காரியங்களுக்கு பொருட்களை செலவிட வேண்டும். மகிழ்ச்சியோடு இருங்கள். ஆனால் கடவுளை மறந்து விடாதீர்கள்.

உண்மையான பக்தி இல்லாமல் புனித யாத்திரை செல்வதில் பயனில்லை. ஆணவம் இல்லாமல் யார் ஒருவர் என்னிடம் வருகிறாரோ அவருக்கு நான் என்றும் நெருக்கமானவனாக இருப்பேன். மனித வாழ்வின் லட்சியமே மோட்சம் எனும் முக்தியை பெறுவதுதான். முக்தியை விரும்புவதுதான் உண்மையான ஞானம் ஆகும்.

எந்த வேலை செய்தாலும் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். இடைவிடாது தியானம் செய்யுங்கள். தியானம் செய்தால் எண்ணங்கள் தூய்மை அடையும். ஆசைகள் விலகும். உன் ஆத்மாவை நீயே உணர வழி பிறக்கும். உருவ வழிபாடு செய்யலாம். அது மனதை ஒருநிலைப்படுத்தி, ஒளிமயமாக்கும்.

– இப்படி கோடிக்கணக்கான உபதேசங்களையும், அருள் உரைகளையும் பாபா நமக்கு தந்துள்ளார். ஆனால் பாபா சொன்னபடி அந்த உபதேசங்களை நாம் கடைபிடிக்கிறோமா? சாய்பாபாவிடம் பக்தி கொண்டவர்களில் பலரும் பாபாவிடம் மனம் உருக வேண்டுகிறோம், நைவேத்தியம் படைக்கிறோம், ஆரத்தி காட்டுகிறோம், அன்னதானம் செய்கிறோம். சத் சரிதம் வாசிக்கிறோம்….

பாபாவை நெருங்க இவை மட்டும் போதுமா? நிச்சயமாக போதாது. பாபாவின் உபதேசங்களை நம் மனதில் நிலை நிறுத்தி, அதன்படி எப்போது வாழ்கிறோமோ, அப்போதுதான் நாம் “பாபா பக்தன்” என்று உளப்பூர்வமாக சொல்ல முடியும்.

அதற்கு நாம் பாபாவிடம் 100 சதவீதம் மனதாலும் உடலாலும் சரண் அடைய வேண்டும். அதற்கு முன்னதாக பாபாவை தெள்ளத் தெளிவாக உணர்ந்து, புரிந்து கொள்ளுங்கள். பிறவிப் பெருங்கடலில் மூழ்கி, அலைகளுக்கு மத்தியில் துரும்பு போல கிடந்து அல்லாடும் நம்மை கரையேற்ற வந்தவர்தான் சாய்நாதர்.

அவர் இறை அவதாரமாக மட்டுமல்ல…. அன்பின் அவதாரமாகவும் திகழ்ந்தார், திகழ்கிறார். யார் எதைக் கேட்டாலும் கொடுத்தார், கொடுத்து வருகிறார்.

அவர் பேசும் தெய்வமாக இருந்தார். உலகின் எந்த மூலையில் உள்ள பக்தன் நினைத்தாலும், அடுத்த வினாடி அவன் அருகில் நிற்கும் அற்புத களஞ்சியமாக அவர் திகழ்ந்தார். பாபா தனக்கென்று எதையும் வைத்திருக்க வில்லை. சீரடியில் அவர் ஒரு ஏழை போல வாழ்ந்தார். தன் அன்பால் மட்டுமே அவர் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்தார்.

அதை தன் பக்தர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அவர் தினம், தினம் அற்புதங்களை நிகழ்த்தி காட்டினார். அந்த அற்புதங்களை படிக்க, படிக்க பாபா பற்றிய பல உண்மைகள் உங்களுக்குத் தானாகத் தெரிய வரும்.

1918-ம் ஆண்டு அவர் மகா சமாதி அடைந்தபோது, “இனி பாபாவின் அருளைப் பெற முடியாதே” என்று நிறைய பேர் கவலையில் மூழ்கி கண்ணீர் சிந்தினார்கள். இதை ஏற்கனவே உணர்ந்திருந்த பாபா, மகாசமாதிக்கு சில தினங்களுக்கு முன்பு பக்தர்கள் முன்னிலையில் ஒரு உறுதிமொழியை வெளியிட்டார்….

“இந்த பூத உடலை நீத்த பிறகும் நான் எப்போதும் போல இருப்பேன். என் ஆற்றலும் சுறுசுறுப்பும் ஒரு போதும் மறையாது. சீரடியில் உள்ள என் சமாதி பக்தர்களை ஆசீர்வாதம் செய்யும். பக்தர்களின் ஒவ்வொரு தேவையையும் அது நிவர்த்தி செய்து நிறைவேற்றும்.

என் சமாதியில் இருந்து என் நினைவுச் சின்னங்கள் பேசும். என்னிடம் வந்து சரண் அடைந்து என்னையே புகலிடமாகக் கொள்ளும் பக்தர்களுக்கு உதவிகள் செய்யவே நான் எப்போதும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் எதைக் கொடுக்க விரும்புகிறேனோ அதையே பெறுவதற்கு பக்தர்கள் விரும்புகிறார்கள் என்ற நம்பிக்கையில் நான் கொடுக்கிறேன்”

இவ்வாறு அந்த உறுதிமொழியில் பாபா கூறியுள்ளார்.

அந்த உறுதிமொழி இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது. சீரடிக்கு தினம், தினம் திரண்டு வரும் லட்சக்கணக்கான பக்தர்களே அதற்கு சாட்சி. பாபாவின் அருளும், விருப்பமும் இல்லாமல் எந்த ஒரு பக்தரும் சீரடிக்கு செல்ல இயலாது. இன்றும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

சீரடி தலம் காசி, கயா, ராமேஸ்வரம், திருப்பதி, பண்டரிபுரம் வரிசையில் புண்ணிய தலமாக மாறும் என்று பாபா ஒரு தடவை கூறியிருந்தார். இன்று… உலகம் முழுக்க உள்ள பக்தர்கள் தம் துயர் தீர நாடி வரும் புனிதத் தலமாக சீரடி மாறியுள்ளது.

சீரடியில் நம் பாதம் பட்டால் பாவங்கள், தோ‌ஷங்கள், கவலைகள் பஞ்சாக பறந்து விடும். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். சாய்மந்திரில் உள்ள பாபாவை பார்த்த உடனே சகலமும் மறந்து அவரிடம் ஐக்கியமாகி விடுவோம். ஆனால் வீடு திரும்பியதும் அது நடக்கவில்லையே… இது நடக்கவில்லையே என்று புலம்பக் கூடாது.

அந்த சமயத்தில் நாம் பாபா கூறிய இரு வி‌ஷயங்களை மனதில் நிலை நிறுத்தி கையாள வேண்டும்.

நம்பிக்கை, பொறுமை- இந்த இரண்டையும் கடைபிடிக்க வேண்டும். நம்பிக்கையோடும், பொறுமையோடும் இருந்தால் பாபா, நமக்கு இம்மையில் தேவையானதை எல்லாம் தந்து மறுமை வாழ்வுக்கும் வழிகாட்டுவார். பாபாவை மனதார முழுமையாக நம்புங்கள். நல்லதே நடக்கும்.