சாய்பாபாவை தேடி வந்து, எத்தனையோ பக்தர்கள் சரண் அடைந்தனர். அவர்கள் எல்லாரையும் பாபா தன் அருகில் நிரந்தரமாக வைத்துக் கொள்ளவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரால் மட்டுமே பாபாவின் நிழலில் தங்கி இருக்க முடிந்தது. பாபாவுக்கு நெருக்கமானவர்கள் என்று தங்களைக் காட்டிக் கொண்டவர்களில் சிலர் பணத்துக்காகவும், புகழுக்காகவும் தான் பாபாவுடன் இருந்தனர். நல்ல பயிர் விளையும் இடத்தில் சில களைகளும் தோன்றுவது இயற்கை தானே.
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர் உபாசினிபாபா. இவரது முழுப்பெயர் காசிநாத் கோவிந்த உபாசினி சாஸ்திரி. இவரது தந்தை கோவிந்த சாஸ்திரி. கோர்ட்டில் பணிபுரிந்தார். இதனால் உபாசினி காதனா எனும் கிராமத்தில் தன் தாத்தா கோபால் சாஸ்திரியிடம் வளர்ந்தார். உபாசினிக்கு வேதங்களை கோபால் சாஸ்திரி கற்றுக் கொடுக்க விரும்பினார். ஆனால் உபாசினி வேதம் கற்க மறுத்து விட்டார்.
கல்வியிலும் உபாசினி தேறவில்லை. எனவே உபாசினிக்கு திருமணம் செய்து வைத்தனர். அடுத்தடுத்து 2 தடவை திருமணம் செய்தும், 2 மனைவியரும் செத்துப் போனதால் உபாசினி வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டை விட்டு வெளியேறினார். சாங்கலி நகருக்கு சென்று வெங்கடரமணச் சார்யா என்பவரிடம் ஆயுர்வேத மருத்துவம் கற்றார். 3 ஆண்டு பயிற்சிக்குப் பிறகு அமராவதிக்கு சென்று மருந்துவம் பார்த்து பெரும் பணக்காரராக மாறினார்.
இதனால் சுகபோகங்களில் திளைத்தார். குவாலியர் மகாராஜா வின் ஒரு பண்ணையை 600 ரூபாய் கொடுத்து வாங்கினார். இதைத் தொடர்ந்து குவாலியர் சமஸ்தாணத்தையே வாங்க ஆசைப்பட்டார். இதற்காக அவர் மேற்கொண்ட முடிவுகள் தவறாக இருந்ததால், எல்லாமே தோல்வியில் முடிந்தன.
விரக்தியால் மன அமைதியை இழந்து தவித்தார். அப்போது சிலர் அவரிடம் சீரடி சென்று சாய்பாபாவிடம் ஆசி பெறுங்கள், மீண்டும் வாழ்வில் வளம் பெறுவீர்கள் என்றனர். அதை உபாசினி ஏற்கவில்லை. சாய்பாபாவை சாதாரணமாக நினைத்தார். எனவே அவரை சந்தித்து ஆசி பெறுவதா… என்று கூறி எள்ளி நகையாடினார்.
ஒருநாள் உபாசினிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நகூரி கிராமத்தில் இருந்த குல்கர்னி என்ற யோகியை சந்தித்தார். அந்த யோகி உபாசினியை பரிசோதித்து விட்டு, சீரடியில் உள்ள பாபாவிடம் சென்று ஆசி பெறுங்கள் என்றார். உபாசினிக்கு இதை கேட்டதும் எரிச்சலாக இருந்தது. அங்கிருந்து புறப்பட்ட அவர் வழியில் குளிர்ந்த நீர் குடிக்க அவர் ஓடைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு இஸ்லாமியர், “குளிர்ந்த நீரை குடிக்காதீர்கள். வெந்நீர் குடித்தால் தான் நோய் தீரும்” என்றார்.
பிறகு மன அமைதிக்காக வேறொரு யோகியைத் தேடி சென்றார். சுமார் 150 மைல் பயணத்துக்குப் பிறகு உபாசினி ஒரு ஓடையில் மீண்டும் தண்ணீர் குடிக்க முயன்றார். அப்போதும் அதே இஸ்லாமியர் தோன்றி, “குளிர்ந்த தண்ணீரை குடிக்காதே” என்றார்.
உபாசினிக்கு வியப்பாக இருந்தது. உடனே அவருக்கு சீரடி நினைவுக்கு வந்தது. சீரடி நோக்கி பயணத்தை தொடங்கினார். அங்கு சாய்பாபாவை சந்தித்தார். தரிசனம் செய்தார். ஆனால் மறுநாளே தன் சொந்த ஊருக்கு புறப்பட ஆயத்தமானார்.
பாபா அவரிடம், “நீ எங்கும் போக வேண்டாம். இங்கேயே இரு” என்றார். ஆனால் உபாசினி அதை கேட்கவில்லை. புறப்பட்டு விட்டார். அப்போது பாபா அவரிடம், “இன்னும் 8 நாட்களில் நீ இங்கு திரும்பி வந்து விடுவாய்” என்றார் சிரித்துக் கொண்டே.
எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத உபாசினி ஊருக்குப் புறப்பட்டார். 8-வது நாள் கோபர்கான் சென்றடைந்தார். அங்குள்ள ஒரு ஆலயத்தில் தங்கி இருந்தார். அவரிடம் அந்த ஆலய பூசாரி, “எங்கு இருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு உபாசினி சீரடியில் இருந்து வருவதாக கூறி பாபா சொன்னதை எல்லாம் கூறினார். உடனே அந்த ஆலய பூசாரி, “பாபாவின் அழைப்புக்காக எத்தனையோ பேர் தவம் இருக்கிறார்கள். நீங்கள் அவர் உத்தரவிட்ட பிறகும் வந்திருக்கிறீர்களே… உடனே சீரடிக்கு திரும்பி செல்லுங்கள்’’ என்றார்.
அந்த சமயத்தில் குதிரை வண்டியில் வந்த ஒருவர், ‘‘சீரடிக்கு எப்படி செல்ல வேண்டும்’’ என்று வழி கேட்டார். மறுவினாடி கோவில் பூசாரி, ‘‘இதோ இவர் அங்கு தான் போகிறார். இவரையும் வண்டியில் ஏற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு அவர் வழிகாட்டுவார்’’ என்று கூறி உபாசினியை வண்டியில் ஏற்றி விட்டு விட்டார்.
வேறு வழியின்றி உபாசினி சீரடி திரும்பினார். ‘‘என்ன 8 நாட்களுக்குள் திரும்பி விட்டாயா?’’ என்று பாபா கேட்க உபாசினி தலை குனிந்தார். பிறகு அவர் பாபாவுடன் தங்கி இருந்தார். ஒருநாள் உபாசினியை அழைத்த பாபா, ‘‘நீ கண்டோபா கோவிலுக்கு செல். அங்கு 4 வருடம் தங்கி இரு’’ என்று உத்தரவிட்டார்.
உபாசினியும் கண்டோபா கோவிலுக்கு சென்று தங்கி இருந்தார். கண்டோபா கோவிலில் பாபாவிற்காக உணவு சமைக்கும் பணியை உபாசினி செய்து வந்தார். அவர் தயாரிக்கும் எந்த உணவையும் முதலில் பாபாவிற்குத் தான் அளிப்பார்.
ஒருநாள் அவர் உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, கறுப்பு நிற நாய் ஒன்று அங்கே வந்து, சமைப்பதையே ஆவலுடன் பார்த்தபடி நின்றது. சமைத்து முடித்த பின்னர் அந்த உணவை எடுத்துக் கொண்டு பாபாவிற்கு அளிப்பதற்காக மசூதியை நோக்கி உபாசினி சென்றபோது அந்த நாய் கூடவே சென்றது. சிறிது தூரம் சென்றபிறகு இனிமேல் தனக்கு அந்த உணவு கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்ட நாய், அங்கிருந்து சென்று விட்டது.
மசூதிக்குச் சென்ற உபாசினி, பாபாவிற்கு உணவளிக்க முயன்றார். அப்போது பாபா அவரை முறைத்துப் பார்த்தார். பின்னர், “நீ எதற்காக இங்கே வந்திருக்கிறாய்?” என்று கோபமாகக் கேட்டார். பாபா எதற்காக இப்படி கோபமாகப் பேசுகிறார் என்று உபாசினிக்குப் புரியவில்லை. “தங்களுக்கு நைவேத்தியம் செய்வதற்காக எப்போதும் போலவே இன்றும் வந்திருக்கிறேன் பாபா” என்றார்.
“இவ்வளவு நேரமும் நான் உன்னுடன்தானே இருந்தேன். அப்போது நைவேத்தியம் செய்ய வேண்டியதுதானே. நான் உன் பின்னால் கூட சிறிது தூரம் வந்தேன். ஆனால் நீ எனக்கு சாப்பாடு போடக்கூட மறுத்து விட்டாயே” என்றார் பாபா. உபாசினிக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்தது. அவருக்கு எதுவும் புரியவில்லை. குழப்பத்தில் தவித்தார்.
“என்ன பாபா சொல்கிறீர்கள்? நீங்கள் எங்கே என்னுடன் இருந்தீர்கள்?” என்றார். அதற்கு பாபா “நீ சமைத்துக் கொண்டிருந்தாய் அல்லவா? அப்போது கறுப்பு நிற நாய் ஒன்று அங்கே நின்றிருந்ததே, அது யார் தெரியுமா? நான்தான்” என்றார். இதைக் கேட்டதும் உபாசினி அதிர்ச்சியில் உறைந்து போனார். பாபா நாய் வடிவத்தில் வந்த உண்மை தெரியாது போனது நினைத்து வருந்தினார்.
அடுத்த நாள் சாய்பாபாவுக்காக உபாசினி உணவு சமைத்தபோது பிச்சைக்காரன் ஒருவன் அங்கு வந்தான். அவனைப் பார்த்ததும் உபாசினிக்கு கடும் கோபம் வந்தது. அவனை அங்கிருந்து வலுக்கட்டாயமாக விரட்டி அனுப்பினார். பின்னர் உணவை எடுத்துக் கொண்டு பாபாவிற்கு வழங்க புறப்பட்டு சென்றார்.
உபாசினியைக் கண்டதும் அன்றும் பாபா கோபமாகக் கத்தத் தொடங்கி விட்டார். “நேற்றும் எனக்கு உணவளிக்க மறுத்து விரட்டி விட்டாய். இன்றும் அப்படியே செய்து விட்டாய்” என்றார். உடனே உபாசினி “இன்று எந்த நாய் உருவிலும் உங்களை நான் அங்கே பார்க்கவில்லையே பாபா” என்று கூறினார்.
“நீ சமைத்துக் கொண்டிருக்கும் போது பிச்சைக்காரன் ஒருவன் வந்தான் அல்லவா? அது யார்? நான்தானே என்னை இன்றும் நீ கண்டு கொள்ளாமல் விரட்டி விட்டாயே என்றார் பாபா. இதைக் கேட்டதும் உபாசினி விக்கித்துப் போய் நின்றார். என்ன சொல்வது என்றே அவருக்கு தெரியவில்லை.
பாபா அதி உன்னதமான சக்தி படைத்தவர். எந்த ஒரு உருவிலும் வந்து பக்தர்களைக் காப்பவர். பக்தர்களை சோதிக்கவும் செய்பவர் என்ற உண்மையை உபாசினி நன்றாக உணர்ந்து கொண்டார். என்றாலும் உபாசினி ஆழ் மனதில் இருந்த பேராசை மட்டும் நீங்கவில்லை. பாபாவுக்கு அடுத்தப் படியாக பக்தர்கள் தனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று துடித்தார்.
ஒவ்வொரு பக்தனும் எத்தகைய மன நிலையுடன் வருகிறான் என்பதை சொல்லி விடும் பாபாவுக்கு உபாசினி நினைப்பது மட்டும் தெரியாமல் போய் விடுமா என்ன? எனவே உபாசினியை திருத்த அவர் ஒரு வழிமுறையை கையாண்டார்.
ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் சீரடி மக்கள் பாபாவுக்கு போட்டி போட்டுக் கொண்டு பாதபூஜை செய்வார்கள். ஒருதடவை பாபா அவர்களிடம், ‘‘எனக்கு பாதபூஜை செய்வது போல உபாசினிக்கும் பாதபூஜை செய்யுங்கள்’’ என்றார். பக்தர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
துறவு வாழ்க்கை வாழும் பாபா எங்கே? சுகபோகங்களில் திளைக்கும் உபாசினி எங்கே? இருவரும் சமமாகி விட முடியுமா? பக்தர்கள் தயங்கினார்கள் என்றாலும் பாபா சொல்லி விட்டாரே என்ற ஒரே காரணத்துக்காக கண்டோபா ஆலயத்துக்கு சென்று உபாசினிக்கும் பாத பூஜை செய்தார்கள்.
சீரடியை சேர்ந்த நானா வாலி என்பவருக்கு இது பிடிக்கவில்லை. எனவே அவர் உபாசினியை பிடித்து ஒரு தூணில் கட்டிப் போட்டார். இதை தனக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானமாக கருதிய உபாசினி மறுநாளே சீரடியில் இருந்து வெளியேறி விட்டார்.
மற்ற ஊர்களுக்கு உபாசினி சென்ற போது பாபாவின் சீடர் என்று மக்கள் மரியாதை செய்தனர். பணத்தை அள்ளி, அள்ளி கொடுத்தனர். பாபா தனக்கு எவ்வளவு பணம் வந்தாலும் சரி, அன்று மாலைக்குள் அவற்றை மக்களுக்கு பிரித்து கொடுத்து விடுவார். ஆனால் உபாசினி அதற்கு நேர் மாறாக பாபா பெயரைச் சொல்லி பணம் சேர்த்தார்.
நிறைய சொத்துக்கள் வாங்கினார். சுக, போக, களியாட்டங்களில் ஈடுபட்டார். இதனால் உபாசினியின் உண்மையான சுயரூபம் தெரிந்து மக்கள் அவரை வெறுக்கத் தொடங்கினார்கள்.
1918-ம் ஆண்டு பாபா தன் உடலை விட்டு பிரிந்த பிறகு உபாசினியின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டது. இதனால் உபாசினிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். 1936-ம் ஆண்டு திவேகர் என்பவர், ‘‘சாய்பாபா பெயரை உச்சரிக்க உபாசினிக்கு தகுதி இல்லை. அதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இப்படி கடைசி நாட்களில் உபாசினி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு மரணம் அடைந்தார். பாபாவை முழுமையாக நம்பாததால்தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது என்பார்கள். ஆனால் பாபாவை கண்கண்ட கடவுளாக பார்த்த பெண்கள் வாழ்வின் உன்னதத்தை எட்டினார்கள்.