சாய்பாபா தினமும் அதிகாலையிலேயே எழுந்து விடுவார். மசூதிக்குள் எரியும் நெருப்புக்குண்டமான துணி அருகில் உள்ள தூணின் மீது சாய்ந்து அமர்ந்த நிலையில், தியானத்தில் ஆழ்ந்து விடுவார்.
அந்த தியானத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது. ஏனெனில் அதிகாலை தியானத் தின்போது அவர் தம் அருகில் யாரையும் வர விட்டது இல்லை.
தியானத்தின்போது அவர் வாய், “அல்லா மாலிக்“ என்று முணுமுணுத்து கொண்டே இருக்கும். இதை தூரத்தில் இருந்து நிறைய பக்தர்கள் பார்ப்பதுண்டு.
அவர்களில் பலர், பாபா ஏதோ மந்திரம் ஜெபிக்கிறார் என்று நினைத்தது உண்டு. அதோடு அந்த மந்திரம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதும் உண்டு.
சில பக்தர்கள் இதுபற்றி பாபாவிடமே நேரில் கேட்டனர். “பாபா… உங்களை நான் குருவாக ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று கேட்டனர்.
ஆனால் சாய்பாபா சீரடியில் இருந்த 60 ஆண்டுகளில் தம் பக்தர்கள் யாருக்கும் எந்த மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்ததில்லை. உபதேசமும் செய்தது இல்லை.
பாபாவிடம் உபதேசம் பெற்று விட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்த அனைவரும் தோல்வியைத் தழுவினார்கள்.
இதுபற்றி நன்கு தெரிந்திருந்த ராதாபாய் என்ற பக்தை, ஒரு தடவை தன் ஊர்க்காரர்களுடன் சீரடிக்கு வந்திருந்தாள். பாபாவை பார்த்து தரிசனம் செய்தாள். அந்த தரிசனமே அவளுக்கு ஆத்ம திருப்தி தருவதாக இருந்தது.
பாபா மீது அவளுக்கு அளவு கடந்த பாசம் ஏற்பட்டது. சீரடி மசூதிக்குள் நுழைந்த மறு வினாடியே அவள் உள்ளம் பாபாவை குருவாக ஏற்றது.
இதன் காரணமாக அவள் மனதுக்குள், பாபாவிடம் இருந்து, எப்படியாவது, ஏதாவது ஒரு உபதேசத்தை பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதைத் தவிர அவள் பாபாவிடம் வேறு எதையும எதிர்பார்க்கவில்லை.
ஆனால் பாபா, அவளுக்கு எந்த உபதேசத்தையும் அளிக்க மறுத்து விட்டார். இது ராதாபாய்க்கு மிகுந்த வேதனையைத் தந்தது.
பாபா உபதேசம் தரும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். சொன்ன படியே தான் தங்கி இருந்த இடத்திலேயே உண்ணாவிரதத்தைத் தொடங்கி விட்டாள்.
மூன்று நாட்கள் கழிந்தன. ராதாபாய் பச்சைத் தண்ணீர் கூட குடிக்கவில்லை. பாபாவிடம் உபதேசம் பெற்றே தீர வேண்டும் என்பதில் வைராக்கியத்துடன் இருந்தாள்.
அவள் உண்ணாவிரதம் இருக்கும் தகவல் சாய்பாபாவுக்கு தெரிய வந்தது. ஆனால் பாபா அவளை கண்டு கொள்ளவே இல்லை.
அப்போது ஒரு பக்தர் பாபாவிடம், “அவள் உயிருக்கு ஏதாவது ஆகி விட்டால், இந்த உலகம் உங்களைத்தான் தூற்றும். எனவே கருணை கூர்ந்து அவளுக்கு ஆசியாவது வழங்குங்கள்” என்றார்.
அதை ஏற்றுக் கொண்ட பாபா, உடனே ராதாபாயை துவாரகமாயி மசூதிக்கு வரவழைத்தார். அவளுக்கு உதி கெடுத்து ஆசி வழங்கினார். பிறகு அவளுக்கு அறிவுரை கூறி பாபா பேசினார்…..
“அம்மா… உண்மையிலேயே நீங்கள் என் தாய். நான் உங்கள் குழந்தை. ஆனால் நீங்கள் என்னிடம் உபதேசம் கேட்ட, தேவை இல்லாமல் உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக் கொள்கிறீர்கள்.
என் சொந்தக் கதையை இன்று உங்களுக்காக சொல்கிறேன். கவனமாக கேளுங்கள். அப்போது உங்களுக்கு சில விஷயங்கள் புரியும்.
எனக்கு ஒரு குருநாதர் இருந்தார். அவர் மிகுந்த அன்பு கொண்டவர். அவருக்கு நான் சீடராக இருந்து நீண்ட நாட்கள் சேவை செய்தேன்.
அவரிடம் உபதேசம் பெற வேண்டும் என்று எனக்கு ஆசை ஏற்பட்டது. இப்போது நீ என்னிடம் உபதேசம் கேட்க எப்படி ஆசைப்படுகிறாயோ….. அது மாதிரிதான் நானும் அப்போது ஆசைப்பட்டேன்.
ஆனால் குருநாதர் எனக்கு எந்த உபதேசமும் சொல்லவில்லை. எந்த ஒரு மந்திரத்தையும் அவர் எனக்கு கற்றுத் தரவில்லை.
ஒருநாள் அவர் என்னிடம் இருந்து “உபதேசம் பெற வேண்டும்“ என்ற தீவிரத்தை அறிந்தார். உடனே என்னை அழைத்தார். தலையை மொட்டை அடிக்கச் செய்தார். பிறகு இரண்டு காசுகளை தட்சணையாக கேட்டார்.
காசு என்றால் இந்த இடத்தில் பணம் என்று அர்த்தம் இல்லை. “நம்பிக்கை”, “பொறுமை” எனும் இரண்டையும் தான் அவர் தட்சணையாகக் கேட்டார்.
இந்த இரண்டையும் நான் என் குருநாதருக்கு அளித்தேன். “இதனால் குருநாதர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
12 ஆண்டுகள் நான் என் குருநாதருடன் இருந்தேன். அந்த 12 ஆண்டுகளும் என் மீது குருநாதர் அளவு கடந்த அன்பை காட்டினார். கருணை மழை பொழிந்தார்.
அவரது அன்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவரைப் போல குருநாதர் வாய்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல.
நான் அவரை பார்க்கும் போதெல்லாம் அவர் ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து விடுவார். அதை பார்க்க, பார்க்க எனக்குள்ளும் பேரின்பம் பெருகியது.
சில சமயம் இரவு, பகல் பாராமல் நாங்கள் தியான இன்பத்தில் ஆழ்ந்து மூழ்கி விடுவோம். நாளடைவில் என் தியானத்துக்கு அவரைத் தவிர வேறு எந்த பொருளும் இல்லை என்ற நிலை உருவானது.
அது போல குருவுக்கு பணி விடை செய்வதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. எனது ஒரே அடைக்கலம் அவர்தான் என்பது உறுதியானது. இதனால் என் மனம் முழுயையாக அவர் மீதே குவிந்தது.
இந்த உறுதியான நம்பிக்கை என்பது நான் என் குருநாதருக்கு கொடுத்த ஒரு பைசா தட்சணையாகும். மற்றொரு பைசா பொறுமை எனும் தட்சணையாகும்.
நான் என் குருவுக்கு மிக நீண்ட நாட்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பொறுமையாக சேவை செய்தேன். இந்த பொறுமையே பிறவிப் பெருங்கடலை நீந்தி முக்தி பெற உதவும்.
மனிதனிடத்தில் எந்த அளவுக்கு பொறுமை உள்ளதோ, அந்த அளவுக்கு அது பாவத்தையும் வேதனைகளையும் விரட்டும். பொறுமையில் ஆழ்பவன் ஆபத்துகளை கடந்து, பயம் நீங்கி எளிதில் வெற்றி பெறுவான்.
ஒருவன் எந்த அளவுக்கு பொறுமையாக இருக்கிறானோ, அவன் நல்ல பண்புகள் குவிந்துள்ள அரங்கம் போல இருப்பான்.
நம்பிக்கையும், பொறுமையும் இரட்டைப் பிறவிகள். ஒருவரை ஒருவர் நேசிக்கும் இரட்டைப் பிறவிகள் போல நம்பிக்கையும் பொறுமையும் இருக்க வேண்டும். இதை நீ எப்போதும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
என் குருநாதர் என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அதற்காக அவர் என்னை புறக்கணிக்கவுமில்லை.
தாய் ஆமையானது, குட்டிைைப் பிரிந்து நீண்ட தொலைவில் இருந்தாலும், தன் அன்பு எண்ணத்தால் வளர்த்து விடும். என் குருநாதரும் என்னிடம் அப்படித்தான் இருந்தார்.
அவர் எனக்கு எந்த மந்திரமும், உபதேசமும் சொல்லி தரவில்லை. அப்படி இருக்கும் போது நான் எப்படி உங்களுக்கு உபதேசம் செய்ய முடியும்? யாரிடமும் நீங்கள் உபதேசத்தை எதிர்பார்க்காதீர்கள்.
உங்கள் மனதில் என்னை நிலை நிறுத்துங்கள். உங்கள் எண்ணமும், செயலும் என்னை குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டும் அப்படி என்னை நீங்கள் நோக்கினால், நானும் உங்களை நோக்குவேன்
குருவை மும்மூர்த்திகளின் அவதாரம் என்று மனதார நம்புங்கள். குருவே வழி நடத்துகிறார் என்று உறுதி கொள்ளுங்கள். அப்படி குருபக்தி உடையவர்கள்தான் உண்மையிலேயே உபதேசம் பெற்றதை போன்று ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
இவ்வாறு சாய்பாபா கூறினார்.
அவர் தன் நீண்ட உரையை முடித்தபோது அவர் கண்கள் கருணை மழை பொழிவதாக மாறியது. ராதாபாய் கண்ணீர் விட்டாள். அந்த நிமிடமே பாபாவின் அவதார சிறப்பை புரிந்து கொண்டாள். உண்ணாவிரதத்தையும் கை விட்டாள்.
ராதாபாய் போலவே புரந்தரே என்பவரும் ஒரு தடவை உண்ணாவிரதம் இருந்து காரியத்தை சாதித்துக் கொண்டார். அவர் மும்பையில் இருந்து அழகிய மலர் செடிகளை சீரடிக்கு எடுத்து வந்தார்.
துவாரகமாயி மசூதியை சுற்றி அவற்றை நட்டு வளர்க்க அவர் ஆசைப்பட்டார். ஆனால் பாபா, அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.
இதனால் வேதனை அடைந்த புரந்தரே தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்தார். மூன்று நாட்களை கடந்தும் அவர் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை.
அவர் மன உறுதியைக் கண்ட பாபா, “சரி, போய் செடிகளை நடுங்கள்” என்று அனுமதி கொடுத்தார்.
ஆனால் அதற்குள் அந்த பூச்செடிகள் காய்ந்து சருகாகி விட்டன. அவற்றை நட்டால், துளிர்க்குமா? என்று சந்தேகப்பட்டார்.
அப்போது பாபா அவரிடம், “முதலில் செடிகளை நட்டு தண்ணீர் ஊற்றுங்கள். அவை வளரும்“ என்றார். பாபா சொன்னபடி இரண்டாவது நாளே…. அந்த சாய்ந்த பூச்செடிகள் துளிர்த்தன. பசுமையாக மாறிய அவை மசூதியை சுற்றிலும் நந்தவனமாக பூத்துக்குலுங்கின. அதைப் பார்த்து பாபாவின் பக்தர் புரந்தரேயின் மனம் குதூகலம் அடைந்தது.