பிறந்த திகதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும், அதன் விளைவாக அவர்களுடைய செயல்பாடுகளின் பலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. ஒருவர் பிறந்த கிழமையில் எந்த மாதிரியான ஆன்மிக வழிபாட்டை மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை:
ஞாயிறன்று அதிகாலையில் ‘ஆதித்ய ஹ்ருதயம்’ பாராயணம் செய்வது ஆரோக்கியமான வாழ்வை உண்டாக்கும். ஆடைகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களை தவிர்க்க வேண்டும். இளம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் ஆடைகளை அணியலாம். கிழக்கு திசை பயன் தருவதாக இருக்கும். அரசு வழிகளில் காரிய வெற்றி பெற சூரிய ஹோரை காலத்தில் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.
திங்கட்கிழமை:
திங்கட்கிழமை அதிகாலையில் தாயை வணங்கி, அவரின் ஆசிகளை பெற்றுக்கொண்டு, வெள்ளை நிறப் பூக்களால் அம்பாளை வழிபாடு செய்து கற்கண்டு கலந்த நைவேத்தியமும் படைப்பது சிறப்பு. சந்தன நிறம், வெள்ளை ஆகிய நிறத்தில் ஆடைகள் அணிவது சிறப்பை தரும்.
செவ்வாய்க்கிழமை:
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அரளிப்பூ மாலை கொண்டு முருகப் பெருமானை வழிபட்டால், வாழ்வு வளம்பெறும். அன்று மாலை ஸ்ரீபைரவருக்கு துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு. சிவப்பும், மஞ்சளும் இருக்கும்படி ஆடைகளை அணிவது வெற்றிகளைத் தரும்.
புதன்கிழமை:
புதன்கிழமை அதிகாலை துளசி, கல்கண்டு மற்றும் மரிக்கொழுந்து கொண்டு, மகாவிஷ்ணுவை வழிபடுவதோடு, பாசிப்பயிறு சுண்டல் நைவேத்தியத்துடன், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வதும் சிறப்பு. பச்சை மற்றும் இளநீலம் கலந்த நிறங்களில் ஆடை இருக்குமாறு தேர்ந்தெடுத்து அணிவது நன்மைகளை உண்டாக்கும். வியாபார துறையில் இருப்பவர்கள் மரகத கல்லை அணிவது அல்லது வீடுகளில் வைத்து புஜை செய்வதன் மூலம் வெற்றி உண்டாகும்.
வியாழக்கிழமை:
வியாழக்கிழமை அன்று சூரிய உதயத்திற்கு முன்னர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம் செய்து, அவருக்கு மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். வியாழன் அன்று ஆசிரியர்களை வணங்கி ஆசிகள் பெறுவது அவசியம். தங்க நிறம் ஆடைகளில் பிரதானமாக இருப்பது இவர்களுக்கு சாதகமான சூழல்களை ஏற்படுத்தும். வியாழக்கிழமை பூச நட்சத்திரம் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை செய்வது நன்மைகளைத் தரும்.
வெள்ளிக்கிழமை:
வெள்ளிக்கிழமை அதிகாலையில் மல்லிகைப் பூக்கள் கொண்டு ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்து அம்பிகையை வழிபடலாம். பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்வது விசேஷம். வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிவது வெற்றியை தரும். வெள்ளியன்று வரக்கூடிய சுக்ர ஹோரை காலம், இவர்களுக்கு ஆன்மிக வெற்றிகளை தரக்கூடியது.
சனிக்கிழமை:
சனிக்கிழமை அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து நீல சங்குப்பு வில்வம் சாற்றி சிவபெருமானை வழிபடுவது நல்லது. ஆலய மூலஸ்தானத்தில் நல்லெண்ணெய் விளக்கேற்றுவது சிறப்பு.பூஜைக்கு பிறகு காகத்திற்கு எள் கலந்த நெய் சாதம் வைப்பதோடு உடல் ஊனமுற்றவர்களுக்கு தானம் அளிக்கலாம். ஆடைகளில் நீலம் சார்ந்த வண்ணங்களை பயன்படுத்துவது பல நன்மைகளைத் தரும்.