மூன்று அரிய சந்திர நிகழ்வுகளான, முழு சந்திர கிரகணத்துடன் கூடிய இரத்த நிலவு, சுப்பர் நிலவு, நீல நிலவு என்பன, 152 ஆண்டுகளுக்குப் பின்னர், நாளை மறுநாள் ஒரே நாளில் வானத்தில் தோன்றவுள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான அலகின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன,
“இந்த மூன்று அரிய சந்திர நிகழ்வுகளையும் ஒருங்கே, நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்குப் பின்னர் கிழக்குத் திசையில் காண முடியும். 1866ஆம் ஆண்டுக்குப் பின்னர், நிகழும் அரிய நிகழ்வு இதுவாகும்.
இதன்போது சந்திரன், பூமிக்கு நெருக்கமாக வருவதால், கடல் அலைகள் உயரமாக மெலேழும்.
இதுபோன்ற வானியல் நிகழ்வுகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட போது, பூமி அதிர்ச்சிகளோ, வேறு இயற்கை அனர்த்தங்களோ ஏற்பட்டதாக பதிவாகவில்லை.
அன்றைய நாளில் பூமி அதிர்ச்சி, ஆழிப்பேரலை, சூறாவளி ஏற்படும் என்று கூறப்படுவது வெறும் வதந்திகளேயாகும்.
முழு அளவிலான சந்திர கிரகணம் இரத்த நி்லவு என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், சந்திரன் பூமியின் நிழலில் முழுமையாக மறைக்கப்படும் போது செந்நிறமாக காட்சியளிக்கும்.
சந்திரன், பூமிக்கு மிக நெருக்கமாக வரும் போது, அது சுப்பர் நிலவு என்று அழைக்கப்படுகிறது.
ஒரே மாதத்தில் வரும் இரண்டு முழு நிலவுகளில், இரண்டாவதாக வரும், முழு நிலவு, நீல நிலவு என்று அழைக்கப்படும். ஆனால் இது நீல நிறத்தில் காட்சியளிக்காது.
இந்த மூன்று அரிய நிகழ்வுகளும் ஒரே நாளில்- வரும் 31ஆம் நாள் இடம்பெறவுள்ளது.
சிறிலங்காவில் முழு சந்திர கிரகணத்தை, மாலை 6.15 மணியில் இருந்து பார்வையிட முடியும்.
ஆனால் சிறிலங்கா நேரப்படி மாலை 4.21 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகி, 9.38 மணியளவில் நிறைவடையும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.