பூரண நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பாபாவைச் சரண் புகுவதைத் தவிர ஒருவர் செய்யக்கூடியது வேறெதுவுமில்லை. அப்படிச் சரண்புகின், வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும், சூழலிலும் அகப்பட்டுத் தவிக்காமல் பத்திரமாகச் செல்ல துணைபுரியவும் ஒவ்வொரு சிறு விஷயத்திலும் தேவைகளைக் கவனித்துக் கொள்ளவும் பாபா இருக்கிறார்.
கடவுள் என்றோ ஸத் புருஷர் என்றோ, அல்லது எப்படி வேண்டுமானாலும் அவரைச் சொல்லிக்கொள்ளுங்கள். அவர் அந்தர்யாமியாக உள்ளே விளங்குபவர்; ஆனால் எல்லோரையும் ஆட்கொள்ளக் கூடிய அபார சக்திவாய்ந்த உருவத்துடன் காணப்பட்டார்.
சாய்பாபா என்னும் மகத்தான விளையாட்டுக்காரர் தமது அடியவர்களை வழிநடத்துகிறார், அவர்களை தாமாகவே, தமது பண்புருவாகவே மாற்றம் செய்து கொள்கிறார். சாய் பக்தர்களாகிய நாம் தினமும் குறைந்தது பத்து நிமிடமாவது பாபாவிற்காக ஒதுக்க வேண்டும். பாபாவின் படத்தின் முன்னர் அமர்ந்து அவரது நாமத்தை பத்து நிமிடம் சொல்லுங்கள். வேறு எந்த ஒரு சிந்தனையும் இல்லாது பாபாவையே உற்று நோக்கிய வண்ணம் இருங்கள்.
காலை அல்லது மாலை உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யுங்கள். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கலாம், மனம் அலைபாயும். ஆனால் பயிற்சியும், பாபாவின் மீதான உங்களின் உண்மையான அன்பின் மூலம் இது சாத்தியப்படும். நாளடைவில் பாபாவின் உருவம் எப்போதும் கண்களில் இருக்க, பாபாவின் நாமம் மனதில் ஒளித்துக்கொண்டே இருக்கும்.அவர் சன்னிதியில் சந்தேகங்கள், கவலைகள், பயங்கள் ஒன்றுக்கும் இடம் கிடையாது.
பாபாவிடம் பூரணமாகத் தஞ்சம் புகுபவர், அதுவே சிறந்ததும், பத்திரமானதுமான ஓரே வழி என்பதை உணர்ந்து விடுகின்றனர்.மனிதன் தானே செய்விப்பவனும்,அனுபவிப்பவனும் என்று நினைத்துக்கொண்டு முடிவற்ற இடர்பாடினால் தன்னை தானே சிக்கவைத்துக் கொள்கிறான். விடுவித்துக்கொள்ளும் வழியும் அவனுக்கு புலப்படவில்லை. பாபாவின் பாதத்தில் செலுத்தும் அன்பான பக்தி ஒன்றே ஒரே வழி.–
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!